பாதுகாப்பு பணியில் இருந்தபோது அமெரிக்க தூதரக பாதுகாவலரின் வாக்கி டாக்கி மாயம்

சென்னை: பாதுகாப்பு பணியில் இருந்தபோது அமெரிக்க தூதரக பாதுகாவலரின் வாக்கி டாக்கி மாயமானது. இந்த சம்பவத்தால் மயிலாப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. வழக்கமாக, அமெரிக்காவில் இருந்து சென்னை வரும் முக்கிய பிரமுகர்களுக்கு இந்த தனியார் செக்யூரிட்டி மூலம்தான் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமெரிக்க நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தங்கி உள்ளார். இவருக்கு பாதுகாப்பு பணிக்காக தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்யும் சிவநாதன் (41) அமர்த்தப்பட்டிருந்தார்.

இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு அமெரிக்க தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வாக்கி டாக்கி வழங்கப்படுவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு அமெரிக்க தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்காக சிவநாதன் சைக்கிள் மூலம் சிஐடி காலனிக்கு சென்றார்.

அமெரிக்க நாட்டவர் தங்கி உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த பிறகு, தன்னுடைய வாக்கி டாக்கியை காணாமல் அதிர்ச்சியடைந்த அவர், பதற்றத்துடன் சிஐடி காலனியில் இருந்து அமெரிக்க தூதரகத்திற்கு வந்து பார்த்தார். ஆனால் எங்கும் வாக்கி டாக்கி கிடைக்க வில்லை. இதையடுத்து சிவநாதன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு ெசய்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மயிலாப்பூர் சிஐடி காலனியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: