சென்னை: ரூ.20 லட்சம் பணம் கேட்டு பெங்களூர் தொழிலதிபரை கடத்தியதாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். கர்நாடகா மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் அருண்குமார் (43). தொழிலாதிபரான இவர் கார் மற்றும் இருசக்கர வாகனம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த வாரம் தனது மனைவி பத்மவாதியுடன் சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர், நேற்று முன்தினம் மாலை வெளியில் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக சென்ற அருண்குமார் நள்ளிரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய மனைவி பத்மாவதி அருண்குமார் செல்போனில் தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து பத்மாவதி தனது கணவர் மாயமானது குறித்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், கணவன் மாயமான பிறகு அவருடைய நண்பர் என்று சொல்லிக்கொண்டு என்னுடைய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, ‘‘உன்னுடைய கணவர் எனக்கு ரூ.20 லட்சம் பணம் தரவேண்டும். அந்த பணத்தை உடனடியாக தரவேண்டும். இல்லையென்றால் உன்கணவரை கொலை செய்து விடுவேன்’’ என்று தனக்கு வந்த செல்போன் எண்ணுடன் புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வழிபாடு செய்து விட்டு அன்னதானம் வாங்க நின்றிருந்த திருவல்லிக்கேணி இருசப்பா தெருவை சேர்ந்த சரோஜா (55) என்பவரிடம் இருந்த 3 சவரன் செயினை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர். * அண்ணாசாலை, தாராபூர் டவர் அருகே உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சிந்தாதிரிப்பேட்டை, கரீம்மொய்தீன் பகுதியை சேர்ந்த ரியாஸ் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* சூளைமேடு கன்னியப்பன் தெரு, பெரியார் பாதை சந்திப்பு அருகே கஞ்சா விற்பனை செய்த சூளைமேடு, கன்னியப்பன் தெருவை சேர்ந்த சேகர் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.* பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்த அமீர் (28), நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது, அவரது செல்போனை மர்ம ஆசாமிகள் பறித்து கொண்டு தப்பினர். * பெரும்பாக்கம் நேசமணி நகரை சேர்ந்தவர் எத்திராஜ் (52). கூலி தொழிலாளி. நேற்று மேடவாக்கம் நேதாஜிநகரில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கான்கிரீட் தூண் இவர் மீது விழுந்துள்ளதில் பரிதாபமாக இறந்தார். * வளசரவாக்கம் பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட ராமாபுரத்தை சேர்ந்த காஜா மொய்தீன் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.* வளசரவாக்கம், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களை வழிமறித்து பணம் பறித்து வந்த ராமாபுரத்தை சேர்ந்த பிரவீன் (22), மாங்காட்டை சேர்ந்த அருண் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். * கொளத்தூர், பொன்னி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (28) என்பவரிடம் கத்திமுனையில் செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரத்தை பறித்த மதுரவாயலை சேர்ந்த தீபக் (24), விஜய் (26), கார்த்திக் (21), திவாகர் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி