புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு குடிநீர் செல்லும் ‘பேபி’ கால்வாயில் கழிவுநீர் கலப்பு நோய் பீதியில் சென்னை மக்கள்

சென்னை: பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் ‘பேபி’ கால்வாயில் கழிவுநீர் விடப்படுவதால், சென்னை நகர மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்க்கும் முக்கிய ஏரிகளில் பூண்டி ஏரியும் ஒன்று. மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் அணை நிரம்பினால், பேபி கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த கால்வாயின் இருபுறமும் கரைகளின் மீது பொருத்தப்பட்ட சிமென்ட் சிலாப்கள் அனைத்தும் பெயர்ந்துள்ளன. அதுமட்டுமின்றி குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளும் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருவதால் தண்ணீர் மாசுபட்டு உள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் நகரில் இருந்து கால்வாய் வழியாக வெளியேறும் கழிவுநீரை, ஈக்காடு அருகே பைப் லைன் பொருத்தி, பேபி கால்வாயில் இணைத்து விட்டுள்ளனர். இதனால், குடிநீர் செல்லும் பேபி கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு, தற்போது செல்லும் 300 கன அடி தண்ணீருடன், கழிவுநீரும் கலந்து செல்கிறது. இதனால், இதை அருந்தும் சென்னை நகர மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்  ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குடிநீர் செல்லும் கால்வாயில் கழிவுநீரை விடுவதால் தண்ணீர் மாசுபடுவது தெரிந்தும், இதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளனர். எனவே, பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் பேபி கால்வாயில், கழிவு நீரை வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: