யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்: பளுதூக்குதலில் லால்ரின்னுங்கா சாதனை

பியூனஸ் ஏர்ஸ்: இளைஞர் ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆண்கள் பளுதூக்குதலில், இந்திய வீரர் ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் (15-18 வயது) ஆண்கள் 62 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் லால்ரின்னுங்கா (15 வயது) ஸ்நேட்ச் முறையில் 124 கிலோ மற்றும் கிளீன் & ஜெர்க் முறையில் 150 கிலோ என மொத்தம் 274 கிலோ தூக்கு முதலிடம் பிடித்தார். துருக்கி வீரர் டாப்டஸ் கேனர் 263 கிலோ (122 கி. + 141 கி.) தூக்கி வெள்ளிப் பதக்கமும், கொலம்பியாவின் வில்லர் எஸ்டிவன் ஜோஸ் வெண்கலப் பதக்கமும் (115 கி. + 143 கி.) வென்றனர். மிஸோரம் மாநிலம் அய்ஸ்வால் நகரை சேர்ந்த லால்ரின்னுங்கா, யூத் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை வசப்படுத்தி உள்ளார்.

இவர் ஏற்கனவே உலக பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கமும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் துஷார் மானே, மெகுலி கோஷ் இருவரும் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினர். மகளிர் ஜூடோவில் தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கப் பட்டியலில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளியுடன் மொத்தம் 5 பதக்கங்களை வென்று 3வது இடத்தில் உள்ளது. முன்னதாக, 2010ல் சிங்கப்பூரில் நடந்த முதலாவது தொடரில் இந்தியா 6 வெள்ளி, 2 வெண்கலம் வென்றிருந்தது. சீனாவின் நான்ஜிங் நகரில் 2014ல் நடந்த தொடரில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 2 பதக்கம் மட்டுமே கிடைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: