திருவனந்தபுரம் நவராத்திரி விழா சுவாமி விக்ரகங்கள் நெய்யாற்றின்கரை புறப்பட்டன

களியக்காவிளை: திருவனந்தபுரம் அரண்மனையில் நடக்கும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோயில் வேளிமலை குமாரசுவாமி, பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் ஆகியோர் விக்ரகங்கள் ஊர்வலமாக திருவனந்தபுரம் எடுத்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் கடந்த 6ம் தேதி பத்மனாபபுரம் நீலகண்ட சுவாமி கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

நேற்று காலை வேளிமலை குமாரசாமி விக்ரகம் பத்மநாபபுரம் வந்தது.இதையடுத்து பவனியின் முன்னே கொண்டு செல்லும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில் நடந்தது. தொடர்ந்து உடைவாள் அரண்மனை தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் ேகாயில் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. அங்கிருந்து அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி யானை மீது அமர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை முருகன் ஆகியோர் வீற்றிருக்க, பெண்களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கியது.

பவனி நேற்று இரவு குழித்துறை மகாதேவர் கோயில் சென்றடைந்தது.இன்று (8ம் தேதி) காலை குழித்துறையில் இருந்து மீண்டும் புறப்பட்டது. குமரி மாவட்ட தேவசம் போர்டு இணை ஆணையர் அன்புமணி தலைமை வகித்தார்.  குழித்துறை அறநிலையத்துறை மேற்பார்வையாளர் ஆனந்த், குழித்துறை மகாதேவர்  கோயில் காரியம் சுதர்சனன், கோயில் கமிட்டி நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி,  வெங்கட்ராமன், ராமச்சந்திரன் நாயர், சசிகுமார், சிவகுவார், விக்னேஷ்,  ராஜேஷ், சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் வழியனுப்பு நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்.

பவனிக்கு குமரி, கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று மதியம் மன்னரின் உடைவாள் மற்றும் சுவாமி கேரள தேவஸம் போர்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்கின்றனர். இரவு நெய்யாற்றின்கரை பார்த்தசாரதி கோயிலில் தங்குகிறது. நாளை(9ம் தேதி) அங்கிருந்து புறப்பட்டு மாலை கரமனை சென்றடைகிறது. பின்னர் வெள்ளிக்குதிரை மீது முருக பெருமான், பல்லக்கில் முன்னுதித்த நங்கை, சரஸ்வதி தேவி விக்ரகங்கள் பவனியாக கொண்டு செல்லப்படுகின்றன. 10ம் தேதி திருவனந்தபுரம் சென்றடையும் கிழக்கே கோட்டையில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் கோட்டையில் நடக்கும் நவராத்திரி விழா கொலுவில் பங்கேற்க செல்கிறார். குமாரகோயில் வேளிமலை குமாரசுவாமி ஆரியகாலை சிவன் கோயிலுக்கும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செந்திட்டை அம்மன் கோயிலுக்கும் செல்கின்றனர். நவராத்திரி விழா முடிவடைந்து வரும் 21ம் தேதி இந்த சுவாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டம் திரும்புகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: