கடைமடை பகுதியில் கருகும் பயிர்களுக்கு தண்ணீர் திறக்காத தமிழக அரசை கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி

நாகை: நாகையில் கடைமடை பகுதியில் கருகும் சம்பா பயிருக்கு தண்ணீர் திறக்காத மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசை கண்டித்தும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தங்களது வீடுகளில் கறுப்பு கொடிகட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.நாகை மாவட்டம் பாலையூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள், நேரடி நெல் விதைப்பும், நடவு செய்திட நாற்று தயார் செய்து வைத்துள்ளனர். தற்போது 30 நாட்களுக்கு மேலாக தேவநதி ஆற்றில் தண்ணீர் வராதால் நேரடி நெல் விதைப்பு செய்தது முளைக்காமல் உள்ளது. மேலும் 165 வயதுடைய மத்திய கால நெல் ரக பயிர் நட்டு 25 நாளில்  பறித்து நடவேண்டிய நாற்று தற்போது 40 நாட்களுக்க மேலாக நடும் வயலுக்கு தண்ணீர் இல்லாததால் நாற்றங்காலிலேயே பறிக்காமல் உள்ளது. இதனால் தேவநதி ஆறு மற்றும் வெட்டாற்று பாசனம் கொண்ட 20 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த பாதிப்புக்கு காரணமான  மாவட்ட நிர்வாகத்தையும், மாநில அரசையும் கண்டித்து பாலையூரில் உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள்  தங்களது வீடுகளில்  கறுப்பு கொடி கட்டி தங்களது எதிர்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து பாலையூரை சேர்ந்த விவசாயி தமிழ்செல்வன் கூறியதாவது: தற்போதுள்ள சூழ்நிலையில் நடவுக்காக தயார் செய்யப்பட்ட நாற்றின் வயது அதிகமாகி விட்டதால் இனி நடவு செய்ய முடியாது. தற்போதுள்ள சூழ்நிலையில் குறுகிய கால நெல் ரகத்தை நேரடி நெல் விதைப்பு செய்து தான் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்யலாம். ஆனால் தற்போது தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சீரான பாசனத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடியேற்றியுள்ளோம். வரும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை ஆற்றில் தொடர்ந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டால் தான் இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக அமையும். எனவே உடன் தேவநாதி ஆறு, வெட்டாறுகளில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: