மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களைவிடுவிக்க தடை: கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், குடிகாடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘புதுக்கோட்டை  மாவட்டத்தில் வெள்ளாறு உள்ளது. இது பல்வேறு பகுதியின் முக்கிய நீராதாரமாக உள்ளது. ஆனால் இந்த ஆற்றில் சட்டவிரோதமாக மணல் திருட்டு  நடக்கிறது. அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால், சுற்றுப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. எனவே, நீதிமன்றம்  தலையிட்டு சட்டவிரோத மணல் திருட்டை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்,’’ என்று  கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் 4 சக்கர வாகனங்கள் மற்றும் மாட்டுவண்டிகள் மூலம் சட்டவிரோதமாக மணல் திருடுவது அதிகரித்துள்ளது. அதிகாரிகளும்  அபராதம் விதிப்பதோடு சரி. உறுதியான நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. இதனால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. சட்டவிரோத மணல் திருட்டு  அன்றாட நடவடிக்கையை போல மாறிவிட்டது. 2050ல் நிலத்தடி நீர் குறைவால் சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் 10 கோடி மக்கள் பாதிப்பர் என மத்திய நிதி  ஆயோக் அமைப்பு எச்சரித்துள்ளது. இதை தடுக்க மணல் திருட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

எனவே, உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் உள்துறை செயலரும் ஒரு எதிர்மனுதாரராக இந்த வழக்கில் சேர்க்கப்படுகிறார். மணல் திருட்டில்  ஈடுபட்டதால் பிடிபடும் வாகனங்களை வருவாய்துறையினர் விடுவிக்க கூடாது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட வேண்டும். மாட்டுவண்டி  பிடிபட்டால் மாட்டை மட்டும் விடுவிக்கலாம். வண்டியை விடுவிக்க கூடாது. அதே நேரம் இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, மணல் திருட்டில்  ஈடுபட்ட வாகனங்களை விடுவிக்கக் கோரி தாக்கலாகும் மனுக்களின் மீது நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 11க்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: