டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு லாரி வாடகை 25% உயர்ந்தது: பால், காய்கறி, மளிகைப் பொருட்கள் விலை எகிறும் அபாயம்

சேலம்: டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதன் எதிரொலியாக லாரி சரக்கு கட்டணம் 22 முதல் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால்,  பால், காய்கறி, மளிகை பொருட்களின் விலை எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. டீசல் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிக கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் ₹79 முதல் ₹81 வரையில் விற்கப்படுகிறது. கடந்த ஜனவரியில் இருந்து நேற்று வரை ஒரு லிட்டருக்கு ₹19 அதிகரித்துள்ளது. இதனால், சரக்குக்கான வாடகை கட்டணத்தை உயர்த்திட லாரி உரிமையாளர்கள் முடிவு செய்தனர். தமிழகத்தில் லாரி சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளனம், லாரி சரக்கு கட்டண வாடகையை 22 முதல் 25 சதவீதம் வரை அதிகரிப்பதாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதன்படி நேற்று (24ம் தேதி) முதல், மாநிலம் முழுவதும் லாரி சரக்கு கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளனம், அனைத்து தரப்பு வியாபாரிகள் சங்கத்தினர், தொழில் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி விட்டனர். நேற்று காலை முதல், லோடு ஏற்றிய லாரிகளின் வாடகை 25 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது. ஒரு சில வியாபாரிகள் தவிர, பெரும்பாலான வியாபாரிகள், தொழில் நிறுவனத்தினர் வாடகையை உயர்த்தி வழங்க தொடங்கி விட்டனர் என புக்கிங் ஏஜென்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கட்டண உயர்வின் முதல்நாள் என்பதால், சேலத்தில் சில நிறுவனங்களில் இருந்து சரக்கு ஏற்றுவது நடைபெறவில்லை. இதனால், சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலையின்றி இருந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளன மாநில தலைவர் ராஜவடிவேல் கூறியதாவது: டீசல் விலை உயர்வின் காரணமாக லாரி சரக்கு கட்டணத்தை 22 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளோம். இதுநாள் வரையில் சேலத்தில் இருந்து சென்னைக்கு லோடு எடுத்துச் செல்ல ₹8,500 லாரி வாடகை கொடுத்து வந்தனர். தற்போது அந்த தொகை ₹10,000 என அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சேலத்தில் இருந்து திருச்சி, கோவைக்கு ₹6 ஆயிரத்தில் இருந்து ₹7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளின் சரக்கு கட்டண வாடகை ₹8 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு ₹1.15 லட்சம் வரை சரக்கு கட்டணம் பெற்று வந்தோம். தற்போது ₹1.40 லட்சம் வரை உயர்த்தி கேட்கிறோம். இடத்தை பொறுத்து, எவ்வளவு கிலோ மீட்டர் என்பதை கணக்கில் கொண்டு, இக்கட்டண உயர்வு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். லாரி சரக்கு கட்டண உயர்வின் காரணமாக, அத்தியாவசிய பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருளுக்கும் நான்கில் ஒருபங்கு விலை ஏறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சாமானிய மக்கள், பெரும் பாதிப்பிற்கு உள்ளாகவுள்ளனர். இன்னும் ஒரு வார காலத்திற்கு பின்னரே விலையேற்றம் குறித்த முழுவிவரம் தெரியவரும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க இயலாது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: