புதர்மண்டி தூர்ந்துள்ளதால் வீராங்கல் ஓடையில் நீரோட்டம் பாதிப்பு: பருவ மழைக்காலத்திற்குள் தூர்வார கோரிக்கை

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் வீராங்கல் ஓடை பல ஆண்டாக முறையாக பராமரிக்கப்படாததால் புதர்மண்டி தூர்ந்து, நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. வாணுவம்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரையில் 4 கிலோ மீட்டர் தூரம் வீராங்கல் ஓடை அமைந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான உள்ளகரம், புழுதிவாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய  பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் இந்த ஓடை வழியாக கடலில் சென்று கலக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்வாயை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், பல இடங்களில் ஓடையின் பக்கவாட்டு சுவர் வலுவிழந்து காணப்படுகிறது. ஆங்காங்கே பக்கவாட்டு சுவர் இடிந்து செங்கல், மணல் போன்ற  கட்டிட கழிவுகள் ஓடையில் சரிந்துள்ளது.

மேலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் ஓடையில் நீரோட்டம் தடைபடுகிறது. 30 அடி அகலம் கொண்ட இந்த ஓடையில் கழிவுகள் நிறைந்துள்ளதால் தற்போது 4 அடி அளவில்  மட்டுமே கழிவுநீர் செல்ல முடிகிறது. இதே நிலை நீடித்தால் மழைக்காலத்தில் ஓடையில் மழைநீர் செல்லமுடியாமல் குடியிருப்பு பகுதியில் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.இதுபற்றி பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மழைக்காலம் தொடங்க உள்ளதால் போர்க்கால  அடிப்படையில் வீராங்கல் ஓடையை தூர்வாரி சீரமைக்க ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்டல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: