தேவி கருமாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

பூந்தமல்லி: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. சென்னை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது.  தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டுச் செல்கின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 9வது வாரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறும்.  அதன்படி, இந்த ஆண்டு ஆடி மாத 9வது வார தேர் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் 1008 சங்காபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சன்னதி தெரு, தேரோடும் வீதி என கோயிலின் முக்கிய நான்கு மாடவீதிகளின் வழியாக தேர் இழுத்து செல்லப்பட்டு  நிறைவாக கோயில் அருகே கொண்டு வந்து நிலை நிறுத்தப்பட்டது. இதில் சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் வான்மதி செய்திருந்தார். மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க திருவேற்காடு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: