பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்

புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  மோடியிடம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது: உங்களின்  பெரும்பாலான பொதுக்கூட்டங்களில், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் உள்ள ஆர்வத்தை பற்றியும், பொது வாழ்வில் பெண்களை ஈடுபடுத்துவது  இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்குமென்றும் கூறுகிறீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், உங்களின் உறுதிப்பாட்டை காண்பிக்க, வரும் நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவதை விட வேறு எது சிறந்த வழியாக இருக்க முடியும்?  வெகு  விரைவில் சட்டமன்ற தேர்தல்களும், மக்களவை தேர்தலும் நடக்க உள்ளதால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு இதை விட  சரியான நேரம் எதுவுமில்லை.

இந்த மசோதா கொண்டு வரும்பட்சத்தில், காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்பதை கூறிக் கொள்கிறேன். இந்த விஷயத்தில்  அரசியலைத் தாண்டி நாம் ஒன்றிணைந்து மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கூடிய மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2010ம் ஆண்டு  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கடந்த 8 ஆண்டாக மக்களவையில் இது நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: