திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 நாட்கள் தரிசனம் நிறுத்தம்?

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சம்ப்ரோக்‌ஷணத்தையொட்டி வரும் ஆக. 12ம்தேதி முதல் 16ம்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் முழுவதுமாக ரத்து செய்வது குறித்து நாளை ஆலோசிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிசேகம்) நடத்தப்படுவது வழக்கம். திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்ட பிறகு 1958, 1970, 1982, 1994, 2006ம் ஆண்டு சம்ப்ரோக்‌ஷணம் நடைபெற்றது.

கடந்த காலங்களில் நடந்த சம்ப்ரோக்க்ஷத்தின்போது பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் சுமார் 50 ஆயிரம் பேரும், வார விடுமுறை விடுமுறை நாட்களில் 70 முதல் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 16ம்தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி ஆக.12ம்தேதி முதல் 16ம்தேதி வரை 5 நாட்களும் 150 ரித்விக்குகள், வேத பண்டிதர்கள் தொடர்ந்து யாகபூஜைகளை மேற்கொள்ள உள்ளனர்.இந்நாட்களில் 5 முதல் 6 மணி நேரம் வரை 20 முதல் 25 ஆயிரம் பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க முடியும் என்று தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து வாரவிடுமுறை நாட்களில் சம்ப்ரோக்‌ஷணம் நடப்பதால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என்பதால் அவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய 4 நாட்களும் காத்திருக்கும் நிலை ஏற்படும். எனவே ஆக. 12ம்தேதி முதல் 16ம் தேதி வரை 5 நாட்கள் முற்றிலுமாக பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே விஐபி மற்றும் ₹300க்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 5 நாட்களும் பக்தர்கள் தரிசனத்தை முற்றிலுமாக ரத்து செய்ய நாளை அறங்காவலர் குழு சிறப்பு கூட்டத்தை கூட்டி முடிவு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: