8 வழி பசுமைச் சாலை திருவண்ணாமலையில் 80% நிலங்கள் அளவிடும் பணி முடிந்தது: ஹெலிகேம்’ பறக்கவிட்டு படம் பிடித்தனர்

திருவண்ணாமலை: 8 வழி பசுமைச் சாலைக்காக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நிலம் அளவிடும் பணி 80 சதவீதம் முடிந்திருக்கிறது. சென்னை-சேலம் இடையே 277 கிமீ தொலைவில், 8 வழி பசுமை விரைவு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிமீ தொலைவில் நிலம் அளவிடப்பட்டு வருகிறது. நேற்று சேத்துப்பட்டு தாலுகாவில் இஞ்சிமேடு, அல்லியந்தல், பெரணம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நிலம் அளவிடும் பணி நடந்தது. இஞ்சிமேடு கிராமத்தில் நிலம் அளவிட எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கண்ணீருடன் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி என்பவர், நாட்டுக்காக உழைத்த என்னுடைய நிலத்தை சாலைக்காக எடுப்பது நியாயமா என வேதனையுடன் தெரிவித்தார். மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி(50) என்பவரது ஒன்றறை ஏக்கர் நிலத்தில் கற்கள் பதித்தபோது, அங்கு ஓடிவந்த அவர் நெற் பயிரில் விழுந்து கதறி அழுதார். ஆனாலும், போலீஸ் பாதுகாப்புடன், அவரது நெற்பயிர் விளைந்திருந்த நிலத்தில் அளவீடு முடித்து, குறியீட்டு கற்களை பதித்துவிட்டு சென்றனர்.

செங்கம் தாலுகாவில் நீப்பத்துறை கிராமத்தில் ஏற்கனவே நிலம் அளவீடு செய்து, கற்கள் பதிக்கப்பட்ட விளை நிலங்களையும், அதன்வழியாக செல்லும் சாலை வழித்தடத்தை ஹெலிகேம் (குட்டி விமானம்) மூலம் படம் பிடிக்கும் பணி நடந்தது. விளை நிலங்கள் மற்றும் விளை நிலத்தில் உள்ள மரங்கள், கிணறுகள், பயிர், கட்டிடங்கள் போன்றவற்றுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, ஹெலிகேம் மூலம் படம் எடுக்கப்பட்டு ஆதாரம் பதிவு செய்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நேற்று வரை 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. தொடர்ச்சியாக, எல்லை குறியீடு கற்கள் பதிக்கப்பட்ட இடங்களில் துள்ளிய மதிப்பீடும் பணி முடிந்ததும், இழப்பீடு விபரம் தயாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து போராடுவேன்: வளர்மதி அறிவிப்பு சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு எதிராக போராடிய மாணவி வளர்மதியை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். நேற்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மாணவி வளர்மதி நிருபர்களிடம் கூறுகையில், சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச்சாலைக்கு எதிராக எத்தகைய அடக்குமுறை வந்தாலும் நான் தொடர்ந்து போரா டுவேன் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: