முதல் ஒருநாள் போட்டி, இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை: பிற்பகல் 1.30க்கு தொடக்கம்

கவுகாத்தி: இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, கவுகாத்தியில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில்  விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை  ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன.முதல் போட்டி கவுகாத்தியில்   இன்று நடைபெறுகிறது. 2வது போட்டி ஜன.12ல் கொல்கத்தாவிலும், 3வது போட்டி ஜன.15ல்  திருவனந்தபுரத்திலும் நடைபெற உள்ளன. காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த கேப்டன் ரோகித் ஷர்மா, இந்த ஒருநாள் தொடரில் மீண்டும் தலைமை பொறுப்பேற்கிறார். நட்சத்திர வீரர்கள் கோஹ்லி, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ், ஷமி, சிராஜ்  ஆகியோரும்  மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். அதனால் இந்திய அணி  கூடுதல் உற்சாகத்துடன் களமிறங்குகிறது. டி20 தொடரில் அமர்க்களப்படுத்திய அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், ஆல் ரவுண்டர் அக்சர் படேலின் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், டி20 தொடரில் முழு திறமையையும் வெளிப்படுத்தி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்த தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஒருநாள் தொடரிலும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலக கோப்பை  போட்டித் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முழுவீச்சில் தயாராக இந்த தொடரை பயன்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் இரு அணிகளும் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி….

The post முதல் ஒருநாள் போட்டி, இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை: பிற்பகல் 1.30க்கு தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: