திருப்பதி கோயிலில் வரலாற்றில் முதல் முறையாக ஒரேநாளில் ரூ.7.68 கோடி காணிக்கை

திருமலை: வைகுண்ட துவாதசியையொட்டி, நேற்று அதிகாலை திருப்பதி கோயில் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், அதிகாலை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 5 மணி முதல் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியான நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு எண்ணப்பட்டது. இதில், ஒரேநாளில் ரூ.7.68 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ஒரேநாளில்  இந்தளவு காணிக்கை கிடைத்திருப்பது தேவஸ்தான வரலாற்றில் முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி ஒரேநாளில் ரூ.6.31 கோடியும், 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம்தேதி ரூ.5.73 கோடியும் காணிக்கையாக செலுத்தியதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், வைகுண்ட துவாதசியான நேற்று அதிகாலை 4 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, ஏழுமலையான் கோயிலில் இருந்து சக்கரத்தாழ்வார் பல்லக்கில் 4 மாடவீதி வழியாக வராக சுவாமி சன்னதி முன்பு உள்ள தெப்பக்குளத்திற்கு(புஷ்கரணி) ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். அங்கு சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மகா தீபாராதனைக்கு பிறகு தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், அதிகாலை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். அதேபோல், வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த 1ம் தேதி நிறைவடைந்தது. நேற்று முன்தினம் முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கியது. இதையொட்டி, ரங்கநாதர் மண்டபத்தில் நம்மாழ்வார் எழுதிய ஆயிரம் பாசுரங்களில் இருந்து தினந்தோறும் 100 பாசுரங்கள் ஜீயர்கள் தலைமையில் பாடப்படுகிறது. தொடர்ந்து, 2வது நாளாக நேற்றும் தரிசன டிக்கெட் பெற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் ெசார்க்கவாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்….

The post திருப்பதி கோயிலில் வரலாற்றில் முதல் முறையாக ஒரேநாளில் ரூ.7.68 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: