டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின், துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.எல்.சியுமான கே.கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 21ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. அதனை ஏற்ற நீதிபதிகள் ED மனுவை விசாரித்து முடிக்கும் வரை விசாரணை நீதிமன்றம் தந்த ஜாமீனை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்.வி.என் பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரவிந்த கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உயர்நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின்பே மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கப்படும் என நீதிபதி மிஸ்ரா தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படும் என்று கூறி, இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளது.

The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: