திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட பின்னர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நர்ஸ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ரஷ்மி (33). அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அல்ஃபாமா சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிட்டு உள்ளார். இதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடல்நிலை மோசமானதால் பின்னர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ரஷ்மி மரணமடைந்தார். இது குறித்து அறிந்த சுகாதாரத் துறையினர் ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். இதே ஓட்டலில் சாப்பிட்ட மேலும் 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கோட்டயம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்….
The post சிக்கன் சாப்பிட்ட நர்ஸ் சாவு: 20 பேருக்கு வாந்தி மயக்கம் appeared first on Dinakaran.
