ஒலிம்பிக் சங்க தலைவரானார் தங்க மங்கை பி.டி.உஷா!

இந்தியாவின் தங்க மங்கை என்ற பெருமைக்குரிய  பி.டி.உஷாவை, முதல் பெண் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்து இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஒஏ) புதிய  பெருமை பெற்றுள்ளது. பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா (எ) பி.டி.உஷா இந்தியவையே தன் ஓடும் கால்களால் தலைநிமிரச் செய்த தடகள விளையாட்டாளர். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா ‘‘இந்தியத் தட களங்களின் அரசி” எனவும் செல்லமாக அழைக்கப்படுபவர். இவர் ‘பய்யோலி எக்ஸ்பிரஸ்’ என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது கேரளத்தின் கொயிலாண்டியில் உஷா தடகளப் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தங்கத் தாரகை. இவருக்கு முன்பும் சரி பின்பும் சரி இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பய்யொழி, கோழிகோடு, கேரளாவில் 1964ல் பிறந்தவர் பி.டி.உஷா. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் 1984ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை உஷா(58) பெற்றார். அந்தப் போட்டியில் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்து  4வது இடம் பிடித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டி உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் தங்கம் உட்பட ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார் பி.டி.உஷா. இவருக்கு கேரளா மாநிலம், கோழிக்கூடு பல்கலைக்கழகம் சார்பில் ஜனவரி 29, 2018 ஆம் ஆண்டு இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நிலையில் தற்போது தன்னைப் போலவே பல சாதனைப் பெண்களை தன் சொந்த மண்ணில் பயிற்சி கொடுத்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார் பி.டி.உஷா. தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவியாகப் பொறுப்பேற்றிருக்கிறார்.  இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் நிலவிய பிரச்னைகள் காரணமாக 2021ல் நடைபெற வேண்டிய தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக தலைவர் பதவிக்கு உஷாவும் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் அந்த பதவிக்கு போட்டியிடாததால் உஷா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் முதல் பெண் மற்றும் முதல் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமைகளை 95ஆண்டுகால ஒலிம்பிக் சங்கம் பெற்றுள்ளது. உஷாவின் தேர்வை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்  நிதா அம்பானி வரவேற்றுள்ளார். மூத்த துணைத் தலைவராக அஜய் பட்டேல், துணைத் தலைவர்களாக ககன் நரங், ராஜலட்சுமி சிங் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகினர். பொருளாளராக சக்தேவ் யாதவ், இணை செயலாளராக கல்யாண் சவ்பே ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் அதிகமான பெண்கள் தேர்வாகியுள்ளதும் இதுவே முதல் முறை. இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைவராக டோரப்ஜி டாட்டாவும், செயலாளராக ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி இயக்குனராக இருந்த நோரனும் பொறுப்பேற்றனர். அதன்பிறகு, பல மாநிலங்களில் ஒலிம்பிக் சங்கங்கள், இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பு அமைப்புகளாக தொடங்கப்பட்டன. அதே ஆண்டில், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனமான இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் அளித்தது. இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சிக்கும், சர்வதேச போட்டிகளில் இந்திய அணிகள் கலந்துகொள்வதற்கும், பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்துவதிலும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பங்கு அளப்பரியது. அதன் விளைவாக இந்தியா இதுவரை மொத்தம் 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இவற்றுள் 10 தங்கப் பதக்கங்களும் 4 வெள்ளிப் பதக்கங்களும், 11 வெண்கலப் பதக்கங்களும் அடக்கம். இந்த சங்கத்திற்குதான் தங்க மங்கை பி.டி.உஷா தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.தொகுப்பு : ஷாலினி நியூட்டன்

The post ஒலிம்பிக் சங்க தலைவரானார் தங்க மங்கை பி.டி.உஷா! appeared first on Dinakaran.

Related Stories: