ஐதராபாத்: பவன் கல்யாண் ஜோடியாக ‘உஸ்தாத் பகத் சிங்’ என்ற படத்தில் ஸ்ரீலீலா நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிவிழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற ஸ்ரீலீலா, பெண்களின் மாதவிடாய் குறித்து பேசிய கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், ‘மாதவிடாய் நேரத்தில் பெண்கள், அதை ஒரு காரணமாக காட்டி ஒரு செயலை செய்யாமல் இருக்கக்கூடாது. அது வெறும் ஒரு மனத்தடை மட்டுமே. மாதவிடாயை ஒரு சாக்குபோக்காக சொல்லக்கூடாது. நான் நடித்து ஹிட்டான பல பாடல் காட்சிகளின் போது, எனது மாதவிடாய் காலங்களில்தான் அதிகமாக நடனமாடியுள்ளேன். ஆணும், பெண்ணும் சமம் என்று சமத்துவம் பேசும்போது, பெண்கள் மாதவிடாயை ஒரு பெரிய பிரச்னையாக பார்க்கக்கூடாது’ என்றார்.
அவரது கருத்துக்கு சோஷியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. ‘சாமானிய பெண்களின் வலி, சொகுசாக வாழும் ஒரு நடிகைக்கு புரியுமா? மாதவிடாய் காலங்களில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒருவித வலி இருக்கும். உங்களுக்கு முழுமையாக தெரியாத ஒரு விஷயத்தை பற்றி ஏன் பேசுகிறீர்கள்?’ என்று, சோஷியல் மீடியாவில் ஸ்ரீலீலாவை பெண்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மருத்துவம் படித்துள்ள ஸ்ரீலீலா, பெண்களின் முன்னேற்றம் மற்றும் உத்வேகத்துக்காக சொன்ன கருத்து, இப்படி தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக நினைத்து, ஸ்ரீலீலாவுக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்துள்ளனர்.
