மும்பை: மும்பையில் நடந்த `பூத் பங்களா’ என்ற இந்தி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார், தபு, வாமிகா கஃபி, ராஜ்பால் யாதவ், பரேஷ் ராவல் நடித்துள்ளனர். விழாவில் கிழிந்த ஆடையில் வந்த அக்ஷய் குமாரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிழிந்து தொங்கும் நீல நிற சட்டை, அதன்மீது கிழிந்த நிலையில் பிளேஸர் ஜாக்கெட் ஆகியவற்றை அக்ஷய் குமார் அணிந்திருந்தார்.
இரண்டு வண்ணங்களில் டை அணிந்திருந்தது ரசிகர்களை ஈர்த்தது. ஒன்று சிவப்பு நிறம், மற்றொன்று மஞ்சள் நிறம். அக்ஷய் குமாரின் கிழிந்த ஆடை கலாசாரம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கிழிந்த ஆடை பாணி, பேஷன் உலகில் Distressed Fashion அல்லது Deconstructed Look என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்டைல் Grunge கலாசாரத்தில் இருந்து உருவானது.
ஆடைகள் பழையதாகவும், கிழிந்தும், தேய்ந்து போனது போலவும் இருப்பதே இதன் நோக்கம். சில ஆடம்பர பிராண்டுகள் கிழிந்த சட்டை மற்றும் அழுக்கான ஷூக்களை பல லட்சங்களுக்கு விற்று இந்த டிரெண்டை மீண்டும் முன்னெடுத்து வருகின்றன. இது வெளிநாடுகளில் `ரன்வே’ என்று சொல்லப்படும் பேஷன் ஷோக்களில் மட்டுமே காணப்படும். இதை ஒரு பொதுவிழாவில் அக்ஷய் குமார் அணிந்து வந்தது, அவரது ரசிகர்களுக்கு நெருடலாக இருந்தது என்று பலர் கமென்ட் செய்துள்ளனர்.
