மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து: 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு…

மதுரை: மதுரையில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7.5 கிமீ தூரத்திற்கு கட்டப்பட்டு வரும் தமிழகத்தின் நீளமான பறக்கும் பாலத்தில், நாராயணபுரம் அருகே ஒரு பகுதி பால கான்கிரீட் கர்டர் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது. இதில் உ.பியை சேர்ந்த ஒரு தொழிலாளி பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார். மதுரையில் துவங்கி திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வரை 35 கிமீ தூர சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.1,028 கோடியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையிலிருந்து ஊமச்சிகுளம் வரை 7.5 கிமீ தூரத்திற்கு பறக்கும் பாலம் கட்டும் பணிகள் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கின. பாலம், சாலை விரிவாக்க பணிகள் துவங்கிய பிறகே, பிரதமர் மோடி நாகர்கோவில் விழாவில் இப்பணிகளுக்கும் சேர்த்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.  மொத்தம் 225 ஒற்றை தூண்கள் அமைக்கப்பட்டு, இந்த பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பாலத்தில் நேற்று மாலை  4.30 மணியளவில் நாராயணபுரம் – ஐயர் பங்களா இடையே இறங்கு பாலத்தில் தூண்கள் மீது, 100 அடி நீள கான்கிரீட் கர்டரை பொருத்தும் பணி நடந்து வந்தது. ஹைட்ராலிக் இயந்திரம் பொருத்திய ராட்சத கிரேன்  மூலம் இப்பணி நடந்தது. அப்போது ஹைட்ராலிக் இயந்திரம் உடைந்ததில், பால கான்கிரீட் கர்டர் பயங்கர சத்தத்துடன் சரிந்து கீழே விழுந்து நொறுங்கியது. கீழே ஏராளமான இரும்பு தாங்கு தூண்களை நிறுத்தி வைத்திருந்தனர்.அந்த தூண்கள் அனைத்துமே சரிந்தன. பாலத்தின் கீழ் நின்றிருந்தவர்களில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி ஆகாஷ் சிங்(26) இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி நசுங்கி பலியானார். மேலும், பாலத்தின் மேலே நின்றிருந்தவரும் மேலிருந்து விழுந்து காயமடைந்தார். தகவலறிந்து தீயணைப்பு மீட்பு குழுவினர், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர். அதிர்ஷ்டவசமாக இவர்கள் உயிர் தப்பினர். தமிழகத்தின் மிக நீளமான இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது, மதுரையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாலம் இடிந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொறியாளர்கள், பணியாளர்களிடம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் கர்டர்களை தூண்கள் மீது பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த இயந்திரம் வெடித்து உடைந்துதான் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ‘‘மகி’’ திட்டத்தின் கீழ்தான் இந்த பணிகள் நடக்கிறது. ஒப்பந்ததாரர்கள் வெளி மாநிலத்திலிருந்து போதுமான பயிற்சி பெறாத தொழிலாளர்களை அழைத்து வந்து வேலை பார்த்துள்ளனர். இவ்வளவு பெரிய தூண்களின் மீது கர்டர் பொருத்தும் பணியை 2 நபர்களை மட்டுமே வைத்து செய்திருக்கின்றனர். இந்த இருவருக்கும் போதுமான பயிற்சி இல்லை. இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது. சம்பவம் குறித்து தலைமை அதிகாரி மற்றும் திட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் கூறும்போது, ‘‘விபத்து குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. பாலத்தின் கட்டுமான பணிகள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்து, ஒப்பந்ததாரரிடம் விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தரம் குறித்து முடிவு செய்த பிறகே, கட்டுமான பணிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும். அதுவரை பணி நிறுத்தி வைக்கப்படும்’’ என்றார். இந்த நிலையில், மேம்பால கட்டுமான பணிகளின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேம்பால பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இயந்திரங்களை உரிய பாதுகாப்பில்லாமல் பயன்படுத்தியது, விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் இயந்திரங்களை வழங்கிய நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் மேம்பால விபத்து நடைபெற்ற பகுதியில் தற்போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். பாலம் இணைப்பு பணியின்போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என அமைச்சர் எ.வ.வேலு  கூறியுள்ளார்….

The post மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து: 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு… appeared first on Dinakaran.

Related Stories: