தனிமையில் வாடும் மாளவிகா மோகனன்

பிரபாஸ் நடித்த ‘தி ராஜா சாப்‘ என்ற படத்தின் மூலம் பான் இந்தியா நடிகையாக மாறிய மாளவிகா மோகனன் தற்போது தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘பாக்கெட் நாவல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்து தங்கி நடித்து வருகிறார். அவர் சென்னையில் தங்கியிருந்த அனுபவம் குறித்து தனது சோஷியல் மீடியாவில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மார்ச் மாதம் எனக்கு மகிழ்ச்சியும் கலக்கமும் நிறைந்த ஒரு மாதமாக அமைந்தது. அந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வு, தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டது தான்.

நம் தலைமுறையின் மிகச்சிறந்த இயக்குனர்களில் அவர் ஒருவர். அவரின் பணிபுரியும் விதம், என்னை வழிநடத்திய முறை மற்றும் செதுக்கிய விதம் ஆகியவை, இதுவரை என் கலைப்பயணத்தில் நான் பெற்ற மிகவும் சிறப்பான அனுபவங்களில் ஒன்றாகும்.

இவ்வளவு காலம் வீட்டை விட்டு தள்ளி இருந்தது என்னை அதிகமாக பாதித்தது. வேலை முடிந்த பிறகு, யாரும் இல்லாத ஒரு வெற்று அறைக்கு திரும்பி வருவது எளிதான காரியம் அல்ல. இதை திரும்ப திரும்ப செய்வதால் அது பழகிவிடும் என்று நினைத்தாலும், அது எனக்கு பழகவே இல்லை. இம்முறை தனிமையுடன் நான் நிஜமாகவே போராடினேன். சில நாட்களுக்கு முன்புதான் மும்பைக்கு திரும்பினேன். வந்தவுடன் ஒரு மாலை வேளையில் படகு சவாரி சென்றேன். மனதை அமைதிப்படுத்துவது போலவும் உணர்ந்தேன். அந்த மாலை பொழுதும், இத்தனை நாட்கள் வீட்டைப் பிரிந்திருந்த ஏக்கமும், என்னை மும்பையின் மீது இன்னும் கொஞ்சம் அதிகமாகவே காதல் கொள்ள செய்துவிட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: