பெங்களூரு: இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரகாஷ்ராஜ், தன்னை நாத்திகன் என்று சொல்லியிருந்தாலும், கிறிஸ்தவ நம்பிக்கையாளரான தனது தாயார் ஸ்வர்ணலதாவின் இறுதிச்சடங்கை தேவாலயத்தில் மதரீதியாக நடத்தினார். இதை வைத்து சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரகாஷ்ராஜ். சில நாட்களுக்கு முன்பு அவரது தாயார் ஸ்வர்ணலதா காலமானார்.
கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை பின்பற்றிய தாயின் மரணத்துக்கு பின்பு, ஒரு தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டார். இறுதிச்சடங்கு காட்சிகள் இணையதளங்களில் வெளியானதை தொடர்ந்து, பிரகாஷ்ராஜ் தன்னை ஒரு நாத்திகர் என்று முன்பு சொல்லியிருந்ததை சுட்டிக்காட்டி, எக்ஸ் தளத்தில் சிலர் கடுமையாக விமர்சித்தனர். நெட்டிசன் ஒருவர், ‘பிரகாஷ்ராஜ் தன்னை ஒரு நாத்திகர் என்றும், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் சொல்லிக்கொள்கிறார்.
ஆனால், தனது தாயின் இறுதிச்சடங்குகளை கிறிஸ்தவ மரபுகளின்படியே செய்கிறார்’ என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரகாஷ்ராஜ், ‘ஆம், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைதான். ஆனால், என் தாய்க்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. அவரது நம்பிக்கையை மறுப்பதற்கு நான் யார்? அவரது நம்பிக்கையின்படிதானே உடலை அடக்கம் செய்ய முடியும்? இதுதானே ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அடிப்படையான மரியாதை? வெறுப்பை தூண்டுபவர்கள் இதை புரிந்துகொள்வார்களா?’ என்று பதிவிட்டுள்ளார்.
