டொரன்டோ: டொரன்டோவில் நடந்து வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 2வது சுற்றில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் மற்றும் நார்வேயின் இளம் வீரர் காஸ்பர் ரூட் ஆகியோர் போராடி வெற்றி பெற்றனர். இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் டேனில் மெட்வடேவுடன், கசகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் மோதினார். ஏடிபி தரவரிசையில் தற்போது 2ம் இடத்தில் உள்ள மெட்வடேவ், முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் அலெக்சாண்டரிடம் இழந்தார். அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், 6-3, 6-4 என அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி, அலெக்சாண்டரை வீழ்த்தினார். இப்போட்டி குறித்து மெட்வடேவ் கூறுகையில், ‘‘முதல் செட் கையை விட்டு போனது குறித்து கவலைப்படவில்லை. கடின ஆடுகளங்களில் என்னை வீழ்த்துவது கடினம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்று கூறினார். கடந்த 2019ம் ஆண்டு இதே டோர்னமென்டில் ஒரு செட்டை கூட இழக்காமல், பைனல் வரை முன்னேறிய மெட்வடேவ், பைனலில் நடாலிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு போட்டியில் நார்வேயின் வளர்ந்து வரும் இளம் வீரர் காஸ்பர் ரூட், குரோஷிய வீரர் மரின் சிலிக்குடன் மோதினார். இதில் முதல் செட்டை ரூட் 6-3 என கைப்பற்றினார். பதிலுக்கு 2ம் செட்டை 6-3 என சிலிக் வசப்படுத்தினார். இதையடுத்து 3வது செட்டை ரூட் 6-3 என கைப்பற்றி, சிலிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டியில் சிலிக் ஏஸ் சர்வீஸ்களை அடிப்பதிலேயே கவனம் செலுத்தினார். ஆனால் பிளேஸ்மென்ட்டுகளில் கோட்டை விட்டார். 7 டபுள் ஃபால்ட்டுகள் வேறு. இதனால் இப்போட்டியில் அவர் தோல்வியடைந்தார்….
The post ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: 2ம் சுற்றில் மெட்வடேவ், ரூட் வெற்றி appeared first on Dinakaran.