கடந்த 2012ல் தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண், உபாசனா திருமணம் நடந்தது. அவர்களுக்கு கடந்த 2023ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு கிளின் காரா என்று பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 31ம் தேதி ஒரு ஆண், ஒரு பெண் என்று உபாசனாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இச்செய்தியை ராம் சரண் தந்தையும், தெலுங்கு மெகா ஸ்டாருமான சிரஞ்சீவி மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இதையடுத்து ராம் சரணின் ரசிகர்களும், ரசிகைகளும் ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து, சந்தோஷமான செய்தியை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அப்போது ராம் சரண் தனது மகள் கிளின் காராவுடன் மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட ரசிகர்களும், ரசிகைகளும் அவருடன் போட்டோ மற்றும் செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர். இதனால், மகளுடன் மருத்துவமனைக்கு உள்ளே சென்ற ராம் சரண், அவர்களை பார்த்து கோபத்துடன் முறைத்துவிட்டு, பிறகு யாரையும் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் நிதி அகர்வால், சமந்தா போன்றோர் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது, ரசிகர்கள் கட்டுப்பாடு இல்லாமல் சூழ்ந்துகொண்டு, பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்வதாக கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
