டைரக்டர் ரோகித் ஷெட்டி வீட்டில் துப்பாக்கிச்சூடு

மும்பை: மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள திரைப்பட இயக்குநர் ரோகித் ஷெட்டியின் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோல்மால், சிங்கம் போன்ற திரைப்படத் தொடர்களை இயக்கியவர் ரோகித் ஷெட்டி. ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் மிக பிரபலமானார்.

இவர் மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள 9 அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர், ரோகித் ஷெட்டியின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 4 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. அதே போல, சம்பவத்தின் போது இயக்குநர் ரோகித் ஷெட்டி வீட்டில் இருந்தாரா என்பதும் தெரியவரவில்லை. இச்சம்பவம் தொடர்பாக புனேவின் கார்வேநகர் மற்றும் தயாரி பகுதிகளைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

Related Stories: