தேர்தல் பின்னணியில் படம் எடுத்தது ஏன்? உமாபதி ராமய்யா விளக்கம்

சென்னை: நடிகர் உமாபதி ராமய்யா இயக்கத்தில் நட்டி நட்ராஜ், தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, இந்திரஜா ரோபோ சங்கர், தலைவாசல் விஜய் நடித்துள்ள படம், ‘TN 2026 தங்க நட்சத்திரம்’. கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரிக்க, தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய உமாபதி ராமய்யா, ‘இது யாருக்கும் எதிரான படம் இல்லை. இதை வெறும் படமாக மட்டும் பாருங்கள். தயவுசெய்து அரசியலாக்கி விடாதீர்கள். தேர்தல் சமயத்தில் தேர்தல் பின்னணியில் படம் எடுக்க வியாபார நோக்கம் காரணமல்ல.

நல்ல பொழுதுபோக்கு படம் தருவதே நோக்கம்’ என்றார். தம்பி ராமய்யா கூறுகையில், ’அரசியல் குறித்து நையாண்டி செய்து யார் வேண்டுமானாலும் படத்தை உருவாக்கலாம். ஆனால், நான் ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்ததால், அரசியல் புரிதல் இருந்ததால் இந்த கதையை எழுதினேன். யாரையும் மனம் நோக வைக்கக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டுள்ளோம். திமுக மற்றும் அதிமுக, நாதக, தவெக உள்பட அனைத்து கட்சிகளிலும் எனக்கு தம்பிகள் இருக்கின்றனர். வெளியில் இருந்து வரும் கருத்துகளை நம்பி, படம் இப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வர வேண்டாம். எனது பிள்ளையின் வாழ்க்கையை முடித்துவிடும் நிலைக்கு நானே தள்ளிவிட மாட்டேன். அந்த பொறுப்பு எனக்கு இருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு பலரும் எனக்கு போன் செய்து பாராட்டுவீர்கள்’ என்றார்.

Related Stories: