அமரீந்தர் சிங் முன்னிலையில் பஞ்சாப் காங். தலைவராக நவ்ஜோத் சிங் பதவியேற்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நேற்று பதவியேற்றார். இதில், முதல்வர் அமரீந்தர் சிங்கும் கலந்து கொண்டார். பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதில் அமைச்சராக இருந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரீந்தருக்கும் மோதல் ஏற்பட்டதால் சித்து பதவி விலகினார். அப்போது முதல் இவருக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இவர்களின் மோதலால் கட்சியில் உட்கட்சி பூசலும் அதிகமானது.  அடுத்தாண்டு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர விரும்பிய கட்சி தலைமை, அமரீந்தரின் எதிர்ப்பையும் மீறி, சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தது. அவருடன் சங்கத் சிங் கில்சியான், சுக்வீந்தர் சிங் டேனி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகியோர் மாநில காங்கிரஸ் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சித்து நேற்று மாநில காங்கிரஸ் தலைவராக பதவியேற்று கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் அமரீந்தர் சிங்கும் கலந்து கொண்டார். தன்னை பற்றி டிவிட்டரில் கூறிய கருத்துகளுக்கு சித்து மன்னிப்பு கேட்காத வரையில், அவரை சந்திக்க மாட்டேன் என்று அமரீந்தர் சிங் கூறி வந்தார். இதனால், சித்துவின் பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக அமரீந்தர் சிங்கை சித்து நேரடியாக சென்று சந்தித்து பேசினார். அதன் பிறகே, அவருடைய பதவியேற்பு விழாவில் அமரீந்தர் சிங் பங்கேற்றார்.எல்லாரும் தலைவர்களே…தலைவர் பதவியை ஏற்ற பிறகு பேசிய சித்து, “இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து தொண்டர்களும் மாநிலத் தலைவர்களே…. தலைவர், தொண்டர் என்ற பாகுபாடு இனி கிடையாது. பஞ்சாபில் வெற்றி பெறுவோம்,’’ என்றார்….

The post அமரீந்தர் சிங் முன்னிலையில் பஞ்சாப் காங். தலைவராக நவ்ஜோத் சிங் பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: