கடிவாளம் போட கங்கனா வற்புறுத்தல்

பிரேம் இயக்கத்தில் துருவ் சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, நோரா ஃபதேஹி, வி.ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ஜிஷு சென் குப்தா, ரீஷ்மா நானையா நடித்துள்ள ‘கே டி: தி டெவில்’ என்ற பான் இந்தியா படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதில் சஞ்சய் தத், நோரா ஃபதேஹி இடம்பெறும் ‘சர்கே சுனார் தேரி சர்கே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் இடம்பெற்றுள்ள வரிகள் பாலியல் சார்ந்த விஷயங்களை குறிப்பதால், பல்வேறு தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இப்பாடலுக்கு நடிகையும், இயக்குனரும், தயாரிப்பாளரும், பாஜ எம்.பியுமான கங்கனா ரனவத் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘தற்போது பாலிவுட் கவர்ச்சியை தாண்டி, ஆபாசம் என்ற எல்லையையும் மீறி வருகிறது என்பது கண்கூடாகவே தெரிகிறது. இதெல்லாம் தவறு என்று தோன்றவில்லையா? நாடு முழுவதும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆபாசமான, அருவருக்கத்தக்க விஷயங்களை வெகுஜன மக்கள் பார்க்கும் திரைப்படங்கள் வழியாக சொல்வது தவறில்லையா? இதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டாமா?

என்னை பொறுத்தவரையில், பாலிவுட்டுக்கு கடுமையான கடிவாளம் போட வேண்டும் என்றுதான் சொல்வேன்’ என்றார். நோரா ஃபதேஹி பல்வேறு குத்துப்பாடல்களுக்கு படுகவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தாலும், இதுவரை வெளியானவற்றில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய பாடல் இதுதான். அர்ஜுன் ஜன்யா இசை அமைத்துள்ளார். கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 30ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Related Stories: