வேலைக்கு சென்று வீடு திரும்பிய இளம்பெண் ஆட்டோவில் கடத்தல்: போதை ஆசாமி உள்பட இருவர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 5வது தெருவை சேர்ந்த தம்பதி ராஜி-ரோஸி. இவர்களது மகள் வைஷாலி (19), பிளஸ் 2 வரை படித்துவிட்டு, தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இவர், வேலை முடிந்து, வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இவரது வீட்டின் பக்கத்து தெருவில் வசிக்கும் தினேஷ் (28), ஆட்டோவில் வந்து, ‘உங்கள் வீட்டு வழியாகத்தான் செல்கிறேன். ஆட்டோவில் அழைத்து சென்று இறக்கி விடுகிறேன் வா,’ எனக்கூறி உள்ளார். வைஷாலி அதை நம்பி ஆட்டோவில் ஏறியுள்ளார். உடனே, ஆட்டோவை ஓட்டிவந்த தனது நண்பர் இம்ரானிடம், ஆட்டோவை சிந்தாதிரிப்பேட்டைக்கு  விடும்படி தினேஷ் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த வைஷாலி இதுபற்றி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், அலறி கூச்சலிட முயன்றார். அப்போது, அவர் கழுத்தில் கத்தியை வைத்து, கத்தினால் குத்திவிடுவேன், என தினேஷ் மிரட்டியுள்ளார். கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் அருகே போக்குவரத்து நெரிசலால் ஆட்டோ மெதுவாக சென்றபோது, வைஷாலி சாதுர்யமாக அவர்களிடமிருந்து தப்பி, அங்குள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்துள்ளார். பின்னர், அங்கிருந்தவர்களின் செல்போனை வாங்கி, தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில், வைஷாலியின் பெற்றோர்கள் தனது மகளை காணவில்லை என்று புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துக் கொண்டு இருந்ததால், அருகில் இருந்த இன்ஸ்பெக்டர் வேலுவிடம் போனை கொடுத்தனர்.மேலும், அந்த வீட்டிலேயே பத்திரமாக இருக்கும்படியும், 10 நிமிடத்தில் அங்கு வந்துவிடுவோம் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரில் உள்ள அந்த வீட்டிற்கு சென்று, வைஷாலியை பத்திரமாக மீட்டனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவு மூலம், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த தினேஷ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இம்ரான் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், கஞ்சா போதைக்கு அடிமையான தினேஷ் ஏற்கனவே திருமணமாகி தனது மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், வைஷாலியை ஒருதலைபட்சமாக காதலித்த அவர், கஞ்சா போதையில் அவரை கடத்தியதும் தெரியவந்தது. அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது நண்பர் இம்ரானையும் கைது செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post வேலைக்கு சென்று வீடு திரும்பிய இளம்பெண் ஆட்டோவில் கடத்தல்: போதை ஆசாமி உள்பட இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: