பிரசவத்துக்காக டோலி கட்டி கர்ப்பிணியை தூக்கி வந்த செய்தியால் நடவடிக்கை: குருமலையில் மினி சுகாதார மையம் திறப்பு: இனிப்பு வழங்கி மலை கிராம மக்கள் கொண்டாட்டம்

அணைக்கட்டு: ஊசூர் அடுத்த குருமலையில் தினகரன் செய்தி எதிரொலியாக பல ஆண்டு கோரிக்கையான மினி சுகாதார மையம் திறக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட மலை பகுதியில் குருமலை, வெள்ளக்கல் மலை, நச்சிமேடு, பள்ளகொல்லை உள்ளிட்ட 4 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதியில்லை. இதனால் நச்சிமேடு கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்கு செல்வதற்காக டோலி கட்டி அடிவாரத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு ஆட்டோவில் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியான செய்தியை தொடர்ந்து கடந்த 2ம் தேதி குருமலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சுகாதார மையம் ஏற்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 3ம் தேதி மலையில் சுகாதார மையம் அமைக்க ஒரு பள்ளி கட்டிடத்தை பிடிஓக்கள் தேர்வு செய்து, அதில் இரண்டு படுக்கை வசதிகளை ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று காலை ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தேவையான மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை எடுத்து சென்று வைத்தனர். பின்னர் பகல் 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுகாதார மையம் பயன்பாட்டிற்கு வந்தது. நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் சசிகுமார், மருத்துவர்கள், செவிலியர், மருந்தாளுநர், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். மலை கிராமங்களை சேர்ந்த 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 4 வயது குழந்தைக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டு ஊசூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். மலை கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கையான தனி சுகாதார மையம் அமைக்கப்பட்டதால், மகிழ்ச்சியடைந்த மக்கள் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடினர்….

The post பிரசவத்துக்காக டோலி கட்டி கர்ப்பிணியை தூக்கி வந்த செய்தியால் நடவடிக்கை: குருமலையில் மினி சுகாதார மையம் திறப்பு: இனிப்பு வழங்கி மலை கிராம மக்கள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: