எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு இமாச்சல் முதல்வராக சுக்வீந்தர் சிங் சுகு தேர்வு; துணை முதல்வர் முகேஷ் அக்னிகோத்ரி

சிம்லா: இமாச்சல் முதல்வராக சுக்வீந்தர் சிங் சுகு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக முகேஷ் அக்னிகோத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருவரும் இன்று பதவியேற்க உள்ளனர். 68 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட இமாச்சல் பிரதேசத்துக்கு நடந்த தேர்தலில் பா.ஜவை வீழ்த்தி 40 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  காங்கிரசில் புதிய முதல்வரை தேர்வு செய்ய சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும், இமாச்சல் மாநில மேலிட பார்வையாளர்களுடன் நேற்று முன்தினம் கவர்னரை சந்தித்து எம்எல்ஏக்களின் பட்டியலை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோர நேரம் கேட்டனர். பின்னர்  நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால்  முதல்வர் பதவிக்கான போட்டியில்  மாநில காங்கிரஸ் தலைவரும், 6 முறை இமாச்சலில்  முதல்வராக இருந்து கடந்த ஆண்டு மறைந்த வீர்பத்திரசிங் மனைவியுமான பிரதீபா சிங், முன்னாள் மாநில தலைவர் சுக்வீந்தர் சிங் சுகு, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் அக்னிகோத்ரி, மூத்த தலைவர் ஹர்ஷ்வர்தன் சவுகான் ஆகியோர் இருந்தனர். இதுதவிர, பிரதீபா சிங் மகனும், சிம்லா புறநகர் தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்ற விக்ரமாதித்யாவை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதவாளர்கள் வலியுறுத்தினர். இதனால், புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங். தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டது. நேற்று காலை சிம்லாவில் உள்ள ஒரு ஓட்டலில் மத்திய பார்வையாளர்களான சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ராஜிவ் சுக்லா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அப்போது, முதல்வர் போட்டியில் உள்ள பிரதீபா சிங், முகேஷ் அக்னிஹோத்ரி, சுக்வீந்தர் சிங் சுகுஆகிய மூவரும், தங்கள் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் என்று கூறி, தனித்தனியாக மேலிட பார்வையாளர்களை சந்தித்து பேசினர். இதனால் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து முதல்வராக யாரை நியமிக்கலாம் என்று மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தவில்லை.  சுக்வீந்தர் சிங்குக்கு 25 எம்எல்எக்கள் ஆதரவு  இருந்ததாக கூறப்படுகிறது. மாநில தலைவராக உள்ளதால், பிரதீபாவுக்கு முதல்வராகும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது.   எம்எல்ஏக்களின் விருப்பம் குறித்து, கட்சித் தலைவர் கார்கேவிடம்  மேலிட பார்வையாளர்கள் தெரிவித்தனர். இதற்கு அவர் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழல்நிலையில், நேற்று மாலை மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் மேலிட பார்வையாளர்கள் தலைமையில் நடந்தது. இதில், சட்டமன்ற கட்சி தலைவராக முன்னாள் மாநில தலைவர் சுக்வீந்தர் சிங் சுகு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வராக முகேஷ்  அக்னிகோத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்போது, ஓட்டல் முன்பு குவிந்திருந்த பிரதீபா மற்றும் சுக்வீந்தர் சிங் ஆதரவாளர்கள் போட்டி போட்ட கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இமாச்சல் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சுக்வீந்தர் சிங் சுகு, காங்கிரஸ் தலைவர்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இன்று காலை 11 மணிக்கு இமாச்சலின் புதிய முதல்வராக சுக்வீந்தர் சிங் பதவியேற்க உள்ளார். அவருடன், துணை முதல்வராக முகேஷ்  அக்னிகோத்ரி பதவியேற்கிறார். இவ்விழாவில், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கும் என்று கூறப்படுகிறது….

The post எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு இமாச்சல் முதல்வராக சுக்வீந்தர் சிங் சுகு தேர்வு; துணை முதல்வர் முகேஷ் அக்னிகோத்ரி appeared first on Dinakaran.

Related Stories: