சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் காளிகேசத்தில் பாதுகாப்பு- பார்க்கிங் வசதி செய்யப்படுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

பூதப்பாண்டி: சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் காளிகேசத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலா தலங்களில் காளிகேசம் மிகச்சிறப்பு வாய்ந்த இடமாக விளங்குகிறது. இங்குள்ள காட்டாற்றில் கோடையிலும் நீர் வற்றாமல் பாய்ந்து கொண்டிருக்கும். மலையில் இருந்து வரும் நீரானது பல விதமான மூலிகை செடிகளில் முட்டி மோதி வருவதால் ஆற்றில் குளிப்பவர்கள் இயற்கையான மூலிகை குளியல் போன்ற புத்துணர்வு கிடைப்பதாக கூறுகின்றனர்.காளிகேசம் ஆற்றின்கரையில் புகழ்பெற்ற காளிஅம்மன் கோயில் அமைந்துள்ளது இந்த பகுதிக்கு மேலும் ஒரு சிறப்பாகும், கீரிப்பாறையில் இருந்து காளிகேசம் வரை சாலையின் இரு புறங்களிலும் அழகான ரப்பர் மரங்களும் பச்சைபசேல் என மூங்கில் பண்ணைகளும் காண்போரை கவரும் வகையில் அமைந்துள்ளன. இவ்வாறு பல சிறப்புகள் மிகுந்த காளிகேசத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு  வருகை தரும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க கீரிப்பாறை காவல்நிலையம் அருகில் வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சுற்றுலா பயணி தலா ஒருவருக்கு 30 ரூபாயும் அவர்கள் வரும் கார்,  ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு 50 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும்  நுழைவு கட்டணமாக வசூலித்து வருகின்றனர். இவ்வாறு நுழைவு கட்டணம் செலுத்தி வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித பாதுகாப்பு வசதியோ,  வாகனங்கள் நிறுத்துவதற்கான அடிப்படை வசதியோ கிடையாது என்பது குறிப்பிடதக்கது.சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை சாலை ஓரங்களிலே நிறுத்திச்செல்கின்றனர். இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கழிப்பிட வசதியும் கிடையாது, திடீரென வரும் காட்டாற்று வெள்ளத்தால்  ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு ஊழியர்கள் ஒருவர் கூட கிடையாது. சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பொருட்களை வைப்பதற்கு பொருட்கள் பாதுகாப்பு அறைகளும் கிடையாது. நுழைவு கட்டணமும் வசூலித்து கொண்டு எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் இருப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. சுற்றுலா தலம் என்றாலே வனத்துறை சார்பிலும், காவல்துறை சார்பிலும் அறைகள் அமைத்து கண்காணித்து பாதுகாப்பு வழங்குவது நடைமுறையாகும். மேலும் காளிகேசத்தை பொறுத்த வரையில் கனமழை சீசன் தோறும்  ஆற்றில் திடீரென வரும் காட்டாற்று வெள்ளத்தினால் ஆற்றினுடைய ஆழமும், நீரின் வேகமும் மாறுபட்டு வருவது வாடிக்கையாகும். ஆற்றினுடைய இந்த மாற்றங்கள் புதிதாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு தெரியாமல் ஆற்றில் இறங்குவதால் உயிர் சேதம் ஏற்படும் சூழல் ஏற்ப்படுகிறது. மேலும் ஆற்றிலிருந்து சற்று மேல்நோக்கி சென்றால் நீர்வீழ்ச்சிகளும், சுனைகளும்,  சுளிகள் மற்றும் பாறைகள்  உள்ள இடங்களில் ஆபத்தை உணராமல் குளிப்பதாலும் உயிர் பலிகள் அடிக்கடி ஏற்படுகிறது. இவ்வாறு ஆபத்தான பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில்  பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. கடந்த சிலவருடங்களுக்கு முன்பு வரையிலும் எந்த நேரமும் வனக்காப்பாளர் தலைமையில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிட தக்கது.  அந்த காலங்களில் ஆபத்துகளும் அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது காளிகேசம் வரும் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் கிடையாது. அறிவிப்பு பலகைகள் ஏதும் இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் வேதனையுடன் கூறுகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து  காளிகேசத்தில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு வாகன நிறுத்துமிடம், கழிப்பறை வசதி, பொருள்பாதுகாப்பு அறை, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க எந்த நேரமும் பாதுகாப்பு பணியில் ஊழியர்கள் நியமித்தல், சிறுவர்கள் விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர்….

The post சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில் காளிகேசத்தில் பாதுகாப்பு- பார்க்கிங் வசதி செய்யப்படுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: