காதல் திருமணம் செய்த தர்ஷன், அர்ஷா சாந்தினி பைஜு இருவரும் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டை வாங்கி குடியேறுகின்றனர். அந்த வீட்டிலேயே காளி வெங்கட், தனது மனைவி வினோதினி வைத்தியநாதன், மகன் மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோருடன் வசிக்கிறார். ஆனால், ஒரு குடும்பம் வசிப்பது இன்னொரு குடும்பத்துக்கு தெரியாது. சுவரில் எழுதினால் மட்டுமே இரு குடும்பத்தினரும் பேச முடியும். பிறகு அவர்கள், இது அமானுஷ்யம் இல்லை;
அறிவியல் என்பதை புரிந்துகொள்கின்றனர். இதையடுத்து அதிர வைக்கும் மற்றும் ஆச்சரியமான பல சம்பவங்கள் நடக்கின்றன. எளிதில் புரிந்துகொள்ள முடியாத, ஆனால் வியக்க வைக்கும் அறிவியல் ஆச்சரியத்தை கதையாக்கி, சுவாரஸ்யமாக சொல்ல முயன்றுள்ளார், இயக்குனர் டி.ராஜவேல். மனைவி மீது பாசம், அமானுஷ்ய சம்பவங்களால் அதிர்ச்சி என்று, ‘கனா’ தர்ஷன் சிறப்பாக நடித்துள்ளார்.
அவருக்கு ஈடுகொடுத்து, அந்த கேரக்டராக வாழ்ந்துள்ளார், அர்ஷா சாந்தினி பைஜு. காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் படத்தை தாங்கி நிற்கும் தூண்கள். தீனா, அப்துல் லீ, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், ஜீவா ரவி ஆகியோரும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
‘பிரேமம்’ ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. ஒரே வீட்டில் வெவ்வேறு கோணங்களில் காட்சிகளை பதிவு செய்து அசத்தியுள்ளார், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ். கதையை நகர்த்த ஏ.நிஷார் ஷரேஃப் எடிட்டிங் உதவியுள்ளது. வித்தியாசமான முயற்சியை வரவேற்றுள்ளார், படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்.
