செங்குறிச்சி சுங்கச்சாவடியில் ஊழியர்கள் பட்டைநாமம் அணிந்து பிச்சை எடுக்கும் போராட்டம்: போலீஸ் குவிப்பு- பரபரப்பு

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 28 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 1ம் தேதி முதல் 16 நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுங்கச்சாவடியில் பாஸ்ட் ட்ராக் முறையிலான சுங்கவரி மட்டும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதர பாஸ்ட் ட்ராக் இல்லாத வாகனங்கள் இலவசமாக சென்று வரும் நிலையில், ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் ஊழியர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வடமாநிலத்தைச் சேர்ந்த 8 ஊழியர்களைக் கொண்டு சுங்கச்சாவடியில் உள்ள கவுண்டர்களில் அமர்ந்து சுங்கவரி வசூல் செய்யும் பணியில் டோல்கேட் நிர்வாகத்தினர் ஈடுபட்டதால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி புதியதாக ஊழியர்கள் நியமனம் செய்து சுங்க வரி வசூல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தயாரானார்கள். இதையறிந்த டோல்கேட் நிர்வாகம் வடமாநில ஊழியர்கள் இருவரை இரண்டு கவுன்டர்களில் வைத்து கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பட்டைநாமம் அணிந்து அரை நிர்வாண கோலத்தில் கையில் தட்டேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post செங்குறிச்சி சுங்கச்சாவடியில் ஊழியர்கள் பட்டைநாமம் அணிந்து பிச்சை எடுக்கும் போராட்டம்: போலீஸ் குவிப்பு- பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: