பனை உறை தெய்வம்

சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தின்கீழ் இருந்தவாறு பரமேஸ்வரன் ஞானமுரைத்தார். திருப்பெருந்துறைதனில் மணிவாசகருக்கு குருந்த மரத்தின்கீழ் இருந்தவாறு ஞானத்தை நவின்றார். திருவொற்றியூரிலோ சுந்தரரை மகிழ மரத்தின்கீழ் இருந்தவாறு சத்தியம் உரைக்கப் பணித்தார். இவ்வாறு மரங்கள் என்பவை தெய்வத்தோடு தொடர்புடையவை என்பதால், ஒவ்வொரு சிவாலயத்திலும் தல விருட்சம் என ஏதாவது ஒரு மரம் புனிதமாகப் போற்றப்பெறுகின்றது. அந்த வகையில் தொண்டை மண்டலத்துத் திருப்பனங்காடு (வன்பார்த்தான் பனங்காட்டூர்), நடுநாட்டு பனையபுரம் (புறவார் பனங்காட்டூர்), சோழமண்டலத்துத் திருப்பனந்தாள், திருப்பனையூர், திருமழபாடி ஆகிய ஐந்து தலங்களுக்கும் பனைமரங்களே தலமரங்களாக விளங்குகின்றன.

திருப்போரூர் முருகப்பெருமான் ஆலயத்தில் பனைமரத்தின் அடிப்பாகம் தெய்வம் உறையும் புனிதமுடையதாகப் போற்றப் பெறுகின்றது. திருவோத்தூர் எனப்பெறும் செய்யாறு ஆலயத்தில் திருஞானசம்பந்தர் ஆண்பனையை பெண் பனையாக்கி குலை ஈனச்செய்யும் அற்புதத்தை நிகழ்த்தியதால் அங்கு கோயில் வளாகத்திலேயே பனைமரச் சிற்பமும், உயிர் மரமும் உள்ளன. மயூரமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் மத்தியப் பகுதியில் வடிக்கப்பெற்ற இரண்டு அரிய சிற்பங்கள் குவாலியர் அருங்காட்சியகத்திலும், போபால் அருங்காட்சியகத்திலும் இடம்பெற்றுள்ளன. குவாலியர் அருங்காட்சியக சிற்பத்தில் ஒரு பனைமரமே சிவனாக வடிக்கப்பெற்றுள்ளது.

பனைமரத்தின் நான்குபுற விரிந்த மட்டைகளும் முறையே தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம் என்றும், உச்சிமட்டை ஈசானமாகவும் இருக்க, கீழ்மட்டையில் இடபம் உள்ளது. போபாலில் உள்ள சிற்பத்தில் பனைமட்டைகள் நான்குபுறமும் திகழ, உச்சிக்குருத்து ஈசானம் காட்டி நிற்கின்றது. இந்த அரிய சிற்பங்கள் இரண்டும் பனைமரமே சதாசிவம் என்பதைக் காட்டும் வடிவங்களாகும்.

சதுர்முகலிங்க வடிவமும் இந்த பனைமர சிற்பங்களும் ஒத்த தன்மை கொண்டவைகளாகும். தமிழ்நாட்டிலும், பனை மரத்தை சிவமாகப் போற்றும் மரபு இன்றளவும் வழக்கில் உள்ளது. மகா கார்த்திகை நாளான கார்த்திகை மாதத்து கார்த்திகை நாளில் சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்துவது முக்கியமான ஒன்றாகும். ஒரு பனைமரத்தை கோயிலின் வாயிலில் நட்டு அதனைப் பனை மட்டைகள் கொண்டு உச்சிவரை மூடுவர். அதனை சொக்கப்பனை எனக் குறிப்பிடுவர். இது உண்மையிலேயே `சொக்கன்பனை’ என்பதாகும். காலப்போக்கில் திரிந்து சொக்கப்பனை ஆகிவிட்டது.

சொக்கநாதன் என்பது மதுரைஈசனின் திருநாமமாகும். பனைமரத்தையும், மட்டைகளையும் எரியச்செய்யும்போது அது தீ அழலுடன் கூடிய நெடுந்தூணாகத் திகழும். சொக்கனாகிய பனை இங்கு அண்ணாமலையாராகவே ஜோதி வடிவ தூணாகக் காட்சி கொடுப்பார்.திருமாலும், பிரம்மனும் தங்களுக்குள் யார் பெரியவர் என ஒருவருக்கொருவர் வாதம் செய்தபோது அவர்கள் முன் திகழ்ந்த தழலாகிய நெடுந்தூணின் அடிமுடியை யார் காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என முடிவுசெய்து மாலவன் வராக உருவில் பூமியை அகழ்ந்து சென்றார்.

பிரம்மனோ அன்ன உரு எடுத்து மேலே மேலே பறந்து சென்றார். இருவரும் அடிமுடி காண இயலாமல் தோல்வியுடன் திரும்பினர். அவர்கள் முன் தோன்றிய தீ வடிவமான தூணே பரம்பொருளாகிய சிவம் என்பதைக் கண்டுணர்ந்தனர். அதனைக் காட்டும் வகையில்தான் சிவனார் உருவமாக உள்ள சொக்கன்பனையைக் கொளுத்தி, அப்பேருருவத்தைத்

தீப்பிழம்பாக நமக்குக் காட்டுகின்றனர்.

தொண்டை நாட்டுத் தேவாரத் தலமான வன்பார்த்தான் பனங்காட்டூர் என்பது காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ளது. தற்காலத்தில் திருப்பனங்காடு என வழங்குகின்றது. இவ்வாலயத்திற்குள் இரண்டு சிவாலயங்கள் உள்ளன. ஒன்று அகத்தியர் வழிபட்ட ``தாலபுரீஸ்வரர்’’ மற்றொன்று புலஸ்தியர் வழிபட்ட ``கிருபாநாதேஸ்வரர்’’ திருக்கோயிலாகும். இரண்டு ஆலயங்களிலும் பனைமர சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. தாலபுரீஸ்வரர் கோயில் வாயிலில் மன்னர்கள் காலத்தில் ஒரு அளவுகோல் கல்வெட்டாகப் பதிவு செய்யப்பெற்றது. அவ்வளவுகோலின் நீளக் கோட்டிற்கு இருபுறமும் அளவுகாட்ட இரு பனை மரங்களைக் காட்டியுள்ளனர். அருகே ‘‘தம்பிரானார் பிரம்மதேச பற்றுக்கு இட்ட நாட்டளவு’’ என்ற கல்வெட்டுப் பொறிப்பு வெட்டப்பெற்றுள்ளது.

கிருபாநாதீஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டு பனைமரங்களை வெட்டுதல் கூடாது என்பதை வலியுறுத்துகின்றது. அதில் ‘‘ஸ்வஸ்திஸ்ரீ உசிருள்ள பனை வெட்டுவான் ஸ்ரீ - திருவாணை’’ என சத்தியவாசகம் காணப்பெறுகின்றது. இவற்றை நோக்கும்போது பனை மரங்களை தெய்வமாகப் போற்றி மதித்தனர் என்பது நன்கு விளங்கும். சோழநாட்டு திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள செந்தலை எனும் ஊர் பண்டு சந்திரலேகை சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பெற்றது. அங்குள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் இரண்டு பனை மரங்கள் உள்ளன. ஒன்று ஆண்மரம், மற்றொன்று பெண் மரம். இவ்விரு மரங்களை சக்தியும் சிவமுமாகப் போற்றுகின்றனர். மரங்களுக்கு ஆடை தரித்து மாலையிட்டு வழிபடுகின்றனர்.

பெண்கள் பிரார்த்தனை செய்து பெண் பனையில் வளையல்களைக் கட்டி வைக்கின்றனர். பனைமரத்தைச் சிவனாகப் போற்றும் பழைய மரபு இன்றளவும் தொடர்கின்றது. சேரமன்னர்கள் சூடும் பூ பனம்பூவாகும். அதுபோன்றே அவர்தம் காவல் மரம் பனை மரமாகும். அவர்கள் வெளியிட்ட சங்ககால காசுகளில் பனைமரம் காட்டப்பெற்றிருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பனைமரங்களுக்கு அரசு, மரியாதை அளித்ததோடு அதுவே தெய்வமுறையும் இடமாகவும் போற்றப்பெற்றுவந்துள்ளது.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Related Stories: