தலைவிதி என்றால் என்ன?

?சில இடங்களில் கோயில் தலைவாசல் தெற்கு வடக்கு நோக்கி இருக்கிறதே, இது சரியா?
– வண்ணை கணேசன், சென்னை.

சரியே. அது அந்த ஆலயத்தின் தலபுராணத்தின் அடிப்படையில் அமைவது. இறைவன் எல்லா திசைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்பதால், எந்த திசையை நோக்கி வேண்டுமானாலும் இறை மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்யலாம். தலைவாசலும் எந்த திசையை நோக்கியும் அமையலாம். இதில் எந்தவிதமான தவறும் இல்லை.

?பஞ்சமா பாதகங்களுக்கு பரிகாரம் ஏதேனும் உண்டா?
– ச.இந்திராணி, திருமலை.

மகா பிராயச்சித்தம் என்று `ருத்ர ஏகாதசினி’ என்கிற பூஜையைச் சொல்வார்கள். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் தொலைவதற்காக இந்த மகாபிராயச்சித்தம் என்பது செய்யப்படுகிறது. பொதுவாக 60, 70 மற்றும் 80ம் கல்யாணம் செய்யும்போது, இந்த ருத்ர ஏகாதசினி என்பதையும் சேர்த்துச் செய்வது என்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால், இந்த ருத்ர ஏகாதசினி என்பதுகூட பஞ்சமா பாதகங்களுக்கு உரிய பிராயச்சித்தமாக அமையாது என்கிறது சாஸ்திரம். பிரஹ்ம ஹத்யா சிசு ஹத்யா சுரா பானா ஸ்வர்ணஸ்தேயா குருதல்பகமனா இதி பஞ்ச மஹா பாதகா என்று சாஸ்திரம் உரைக்கிறது. அதாவது, வேதம் படித்து அறவழியில் நடக்கும் அந்தணனை கொல்லுதல், குழந்தையைக் கொல்லுதல், மது அருந்துதல், தங்கத்தைத் திருடுதல், குருபத்தினியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தல் ஆகிய ஐந்தும் பஞ்சமா பாதகங்கள் என்று சாஸ்திரம் விளக்குகிறது. இந்த ஐந்து பாதகச் செயல்களுக்கும் பிராயச்சித்தம் என்பதே கிடையாது. ஆனால் செய்த தவறினை உணர்ந்து மானசீகமாக மன்னிப்புக் கேட்டு அதற்குரிய தண்டனையை முழுமையாக அனுபவிக்கும்போது, அதுவே சிறந்த பரிகாரமாக அமைந்துவிடுகிறது.

?நவகிரஹங்களுக்கு செய்யப்படும் அர்ச்சனை பொருட்களை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்கிறார்களே, இது சரியா?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

தவறு. நவகிரஹங்களை ஆலயத்தில் பரிவார தேவதைகளாக பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறார்கள். தெய்வத்தின் பணியாட்களாக கிரஹங்களை நினைத்து அர்ச்சனை செய்து அந்த பிரசாதத்தை தாராளமாக வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரலாம். பிரசாதத்தை அலட்சியப்படுத்தினால், எதிர்மறையான பலன்கள் விளைந்துவிடும்.

?கண்டக சனியின் பாதிப்பு அதிகமாக இருக்குமா அல்லது அஷ்டம சனியின் பாதிப்பு அதிகமாக இருக்குமா?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.

சனி என்றாலே பாதிப்பு என்று நினைப்பதே தவறு. உண்மையாக உழைப்பவர்களைக் கண்டால் சனிக்கு மிகவும் பிடிக்கும் என்பார்கள். அவ்வாறு தன்னலம் கருதாது உழைப்பவர்களின் மீது சனியின் அருட்பார்வை என்பது விழுந்துகொண்டே இருக்கும். சனி கொடுக்க எவர் தடுப்பர் என்ற சொற்றொடருக்கு ஏற்ப உண்மையாக உழைத்து வாருங்கள். ஏழரைச் சனி, பொங்கு சனி, தங்குசனி, மங்கு சனி, பாதச்சனி, ஜென்மச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச்சனி, அஷ்டமத்துச்சனி என எந்தச் சனியின் காலமாக இருந்தாலும், அதனால் எந்தவிதமான பாதிப்பும் நேராது என்பதே நிதர்சனமான உண்மை.

?யாகத் தீயில் பட்டு வஸ்திரம், பழ வகைகள் மற்றும் நாணயங்களை இடுவதால் என்ன பயன்?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

இறைவனுக்கு நாம் சமர்ப்பிக்கின்ற பொருட்களை அக்னிபகவானின் வாயிலாக ஆஹூதிகளாக தரவேண்டும் என்கிறது சாஸ்திரம். அதனால், மிகப்பெரிய யாகங்களில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல், பட்டு வஸ்திரம் மற்றும் பழங்களை இறைவனுக்கு உரிய ஆஹூதிகளாக சமர்ப்பிக்கிறார்கள். ஆனால், தற்காலத்தில் நாம் உபயோகிக்கும் நாணயங்களில் இரும்பு என்பது கலந்திருப்பதால், அதனை யாகத்தீயில் சமர்ப்பணம் செய்வது என்பது சாஸ்திர விரோதமே ஆகும். தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன நாணயங்களை வேண்டுமானால் ஆஹூதிகளாக சமர்ப்பணம் செய்யலாம். இறைவன் நமக்கு அளித்ததைக் கொண்டு அதில் பத்தில் ஒரு பாகத்தை இறைவனுக்கு உரிய அவிர்பாகமாக செலுத்துவதால், மேலும் மேலும் வளங்களைப் பெற்றுக் கொண்டே இருப்போம் என்பதுதான் அதற்கான பலன்.

?தலைவிதி என்றால் என்ன?
– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

தலைவிதி என்றாலும் தலையெழுத்து என்றாலும் ஒன்றுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் தலையெழுத்து என்பது நிச்சயமாக உண்டு. ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் இந்த தலையெழுத்து என்பதை ஒருவரின் ஜாதகத்தில் உள்ள லக்ன பாவகம் என்பது நிர்ணயம் செய்யும். லக்னம் என்று அழைக்கப்படும் முதல் பாவகமே ஒரு மனிதனின் விதியை நிர்ணயம் செய்கிறது. மனித உடற்கூறு இயலில் தலை என்பதைக் குறிப்பதும் இந்த லக்னம் ஆகிய ஒன்றாம் பாவகமே ஆகும். அதனை `ல’ என்ற எழுத்தினால் குறித்திருப்பார்கள். `ல’ என்ற எழுத்தானது சுழித்து எழுதப்படுவதால் இதனையே சுழி என்றும் குறிப்பிடுவார்கள். பேச்சுவாக்கில் அவன் சுழி சரியில்லை என்று சொல்வார்களே, அந்தச் சுழி என்பதும் இந்த லக்னத்தையே குறிக்கும். சுழி சரியில்லை என்றால் அவனது தலையெழுத்து சரியில்லை என்பதே பொருள். ஒரு மனிதனின் ஜாதகத்தைக் கொண்டு அவனது தலையெழுத்தைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். ஜாதகம் அமைவது என்பது அவரவர் பூர்வ ஜென்ம வினையே ஆகும். பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா என்று ஜாதகம் எழுதுவதற்கு முன்னால் ஒரு ஸ்லோகத்தை எழுதியிருப்பார்கள். அதன் பொருளும் இதுவே. ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் தலையெழுத்து என்பது நிச்சயமாக உண்டு என்பதே ஆன்மிக அறிவியல் ஆன ஜோதிடம் சொல்லும் உண்மை.

?ஜோடி பொருத்தம் சரியாக இருந்தும் சிலருக்கு ஜாதகம் அமைவதில்லையே ஏன்? இதற்கு என்ன செய்ய வேண்டும்?
– கே.எம், ஸ்வீட்முருகன், கிருஷ்ணகிரி.

மனப்பொருத்தம் சரியாக இருந்தால், தாராளமாக திருமணத்தை நடத்தலாம். மணமக்கள் இருவரின் ஜாதகக் கட்டங்களும் பொருந்தி இருந்தால் மட்டுமே மனப்பொருத்தம் என்பதும் உண்டாகும். ஜாதகங்கள் பொருந்தவில்லை என்றால் மனப்பொருத்தமும் இருக்காது. ஆக, மனப்பொருத்தம் என்பது இருந்தாலே மற்ற விஷயங்களைக் குறித்துக் கவலைப்படாமல் திருமணத்தை நடத்துங்கள். அதுவும் இதுபோன்ற தடைகளை சந்திப்பவர்கள் தங்களுடைய இஷ்ட தெய்வத்தின் ஆலயத்தில் திருமணத்தை நடத்துவதாக பிரார்த்தனை செய்துகொண்டால் தடைகள் நீங்கி உடனடியாக திருமணம் என்பதும் நடந்துவிடும்.

?வீட்டுத் திண்ணைப் பகுதியில் மாந்திரீகத் தகடு ஒன்றை வைக்கிறார்களே, இது சரியா?
– எம். மனோகரன், ராமநாதபுரம்.

அது மாந்திரீகத் தகடு அல்ல. “மச்ச யந்திரம்’’ என்று சொல்வார்கள். திண்ணைப் பகுதிதான் என்பது அல்ல. வாஸ்து சாஸ்திரத்தின் படி அந்த வீட்டில் எந்த இடத்தில் மச்ச யந்திரத்தை பதிய வைத்தால் நல்லதோ அதனைக் கணக்கிட்டு அந்த இடத்தில் அவ்வாறு பதிய வைப்பார்கள். இது அவரவர் நம்பிக்கைக்கு உட்பட்டதே அன்றி, இதில் குறை காண இயலாது.

Related Stories: