நிதி வசதி எப்படி இருக்கும்?

சிலருக்கு கையில் பணம் புரண்டு கொண்டே இருக்கும். அவர்கள் பணத்துக்குப் பெரிய அளவில் அல்லாட மாட்டார்கள். தேவைகளும் செலவுகளும் அதிகரித்தாலும்கூட, ஏதோ ஒரு விதத்தில் பணம் கையில் இருந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் அது பிறருடைய பணமாகக் கூட இருக்கலாம். ஆனால், அந்தப் பணத்துக்கு உரியவருக்கு கை கொடுக்கிறதோ, இல்லையோ, பணத்தை வைத்திருப்பவரான இவருக்கு, அது பல நேரங்களில் கை கொடுத்து உதவும். பணப்புழக்கம் என்பது இரண்டு வகைகளில் இருக்கும்.
1. மற்றவர்கள் பணத்தை வைத்துக் கையாளுவது. (public fund)
2. தனக்கு சொந்தமான பணத்தைக் வைத்து கையாளுவது. (personal money)

குருவையும் சுக்கிரனையும் செல்வத்துக்கு உரிய கிரகங்களாகச் சொல்வோம். ஆனால், இரண்டு கிரக காரகங்களுக்கும் வித்தியாசம் உண்டு. குருபலம் மற்றவர் பணத்தை ஏதோ ஒரு வகையில் வைத்திருக்கும் அமைப்பைத் தரும். அதனால்தான் குருபலம் மிகுந்தவர்கள் பொதுப் பணத்தைக் கையாளுகின்ற வங்கித் துறையில் பெரும்பாலும் பணிபுரிவார்கள்.ஆனால், சுக்கிரனுடைய பணம் அப்படி அல்ல. அது ஜாதகருக்கு உரிய சொந்தப் பணத்தைக் குறிக்கும். எனவே சுக்கிரனுடைய பணத்தால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை. ஆனால், குருவின் பணம் பொதுப்பணம் என்பதாலும், பெரும் பணம் என்பதாலும் சில நேரத்தில் எச்சரிக்கையோடு இல்லாவிட்டால், அதுவே பல கஷ்டங்களைக் கொடுக்கும்.

அடுத்து பணத்தைக் குறிப்பிடுகின்ற இடம் இரண்டாம் இடம். இதனை தனஸ்தானம் என்று சொல்லுவார்கள். இது தவிர இதனை குடும்பஸ்தானம், வாக்குஸ்தானம் என்றும் சொல்வது உண்டு. குடும்பத்தில் புதிதாக ஒருவர் வருகின்ற பொழுது, அந்த வருகையையும் இரண்டாம் இடம் குறிக்கும். அதனால்தான் குழந்தை பிறப்பிற்கு, ஐந்தாம் இடத்தை மட்டும் பார்க்காமல் இரண்டாம் இடத்தையும் சேர்த்துப் பார்க்கும் பழக்கம் உண்டு. இரண்டாம் இடம், ஐந்தாம் இடத்திற்கு கர்ம ஸ்தானமாக வரும். கர்மபுத்திரன் ஒருவன் இருக்கிறானா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இரண்டாம் இடத்தையும் பார்ப்பார்கள். 10-ஆம் இடத்தையும் பார்ப்பார்கள். பத்தாம் இடம் என்பதும் இரண்டாம் இடத்தோடு தொடர்புடையதுதான்.

காரணம், பத்தாம் இடம் என்பது செயலைக் குறிப்பது. கர்மாவைக் குறிப்பது. உத்தியோகத்தைக் குறிப்பது. தொழிலைக் குறிப்பது. ஜீவனத்தைக் குறிப்பது. எனவே ஜீவன ஸ்தானத்திற்கு தன ஸ்தானத்தோடு இயல்பான தொடர்பு இருக்கும். இரண்டாம் இடத்தின் திரிகோண ஸ்தானம் பத்தாம் இடம். ஆக, பத்தாம் இடம் பலம் அடைந்தால் இரண்டாம் இடமும் பலமடையும். இரண்டாம் இடம் பலம் அடைந்தால் பத்தாம் இடமும் பலமடையும்.இதற்கு மறைமுகமாக என்ன பொருள் என்று சொன்னால், ஒரு ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் வலுவடைந்து விட்டால், பணப் புழக்கம் அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு இயல்பாகவே உத்தியோகம், ஜீவனம் போன்ற அமைப்புகள் நன்றாக இருக்கும். காரணம் 10-ஆம் இடத்திற்கு இரண்டாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமையும். அதாவது ஐந்தாம் இடமாக அமையும். கால புருஷனுக்கு பத்தாம் இடத்திற்கு உரிய கிரகம் சனி. இரண்டாம் இடத்திற்கு உரியவர் சுக்கிரன். சனி ஜீவனத்தைக் குறிக்கிறது. சுக்கிரன் பணத்தைக் குறிக்கிறது. இருவரும் ஜாதகத்தில் ஏதோ ஒரு விதத்தில் பலம் பெற்றிருந்தால், அந்த ஜாதகம் பணக் கஷ்டம் இல்லாமலும் தொழில் கஷ்டம் இல்லாமலும் இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு கும்ப லக்கின ஜாதகம். இரண்டாம் இடம் குரு. தனகாரகன். அவர் தனது இன்னொரு வீடான பதினொன்றாம் வீட்டில் இருக்கிறார். அதாவது சொந்த ராசியில் இருக்கிறார். எனவே இரண்டாம் இடம் பலம் பெறுகிறது. 11-ஆம் இடத்தில் லக்னாதிபதி சனியோடு அமர்ந்திருக்கிறார். சனி ஜீவனாதிபதியும்கூட. எனவே லக்கினமும் வலுப்பெறுகிறது. லக்னாதிபதி இரண்டாம் அதிபதியோடு தொடர்பு கொண்டிருப்பதை இது காட்டுகிறது.

11-ஆம் இடத்தில் குரு மூல நட்சத்திரத்தில் அமர்ந்து, நட்சத்திரநாதன் கேது இரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அதாவது மீன ராசியில் இருக்கிறார். சனி பூராட நட்சத்திரத்தில் (சுக்கிரனுடைய நட்சத்திரத்தில்) அமர்ந்திருக்கிறார். இப்பொழுது சுக்கிரன் வலுப்பெற்று இருக்கிறார். குரு வலுப்பெற்று இருக்கிறார். இரண்டாம் இடம் வலுப்பெற்று இருக்கிறது. லக்னாதிபதிக்கும் இரண்டாம் இடத்திற்கும் தொடர்பு வந்துவிடுகிறது. எனவே இந்த ஜாதகரைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் பணத்திற்குத் துன்பப்பட்டது இல்லை.எந்த ஒரு ஜாதகத்திலும், இரண்டாமிடம் வலுப்பெற்று, இரண்டாம் இடத்துக்கு உரியவர் வலுப்பெற்று, சுக்கிரனும் குருவும் பலம் பெற்றால், அவருக்குப் பணப் பிரச்னை நிச்சயமாக வராது என்று சொல்லலாம். அவர் கையில் எப்பொழுதும் நிதி வசதி இருந்து கொண்டே இருக்கும். ஆனால், இந்த ஸ்தானங்கள், 6,8,12ம் ஸ்தானங்களோடு பெரிய அளவில் தொடர்பு கொள்ளக்கூடாது அல்லது அந்த ஸ்தானங்கள் வலுப்பெற்று இருக்கக்கூடாது.

ஆறாம் இடம் வலுப்பெற்று இருந்தால், சம்பாதிக்கும் பணம் கடனாகப் போய்விடும். எட்டாம் இடம் வலுப்பெற்று இருந்தால், தேவையில்லாத செலவுகள், கோர்ட், கேஸ் என்று உபயோகம் இல்லாத பிரச்னையில் பணம் செலவழிந்துவிடும். 12-ஆம் இடம் இயல்பாகவே விரயஸ்தானம் என்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் செலவழிந்து கொண்டே இருக்கும். அது கிட்டத்தட்ட ஓட்டைப் பானையில் தண்ணீர் பிடித்து வைப்பது போல. இப்படிப் பட்ட சில ஜாதகங்களும் உண்டு. இதில் லக்னத்தோடு இரண்டாம் இடம் தொடர்பு கொள்ளவில்லை என்று சொன்னால், பணம் இருந்தாலும்கூட, அதனுடைய பலன் ஜாதகருக்குக் கிடைக்காமல், போய்விடும். நிறைய சம்பாதிப்பார்கள். கஷ்டப்பட்டுச் சம்பாதிப்பார்கள். ஒரு நிமிடம்கூட வீணாக்க மாட்டார்கள். ஆனால், சாப்பிடுவதற்கு வாய்ப்பு இருக்காது. சாப்பிடும் போதுதான் ஒரு முக்கியமான வியாபாரம் வரும். அதனால் பணமும் வரும். ஆனால் சாப்பாட்டு நேரம் கடந்துவிடும். இப்படிப்பட்ட சில அமைப்புகளும் உண்டு. காரணம், அங்கே இரண்டாம் இடத்தோடு லக்னத்தின் தொடர்பின்மை, பணத்தையும், பணத்தின் பலனையும் அவரிடமிருந்து பிரித்துவிடும்.

“நான் அப்புறம் சாப்பிடுகிறேன். நீங்கள் சாப்பிடுங்கள்’’ என்று சொல்லிவிடுவார். அதனால் மற்றவர்கள் பலன் அடைவார்கள். இவருக்கு பலன் கிடைக்காது. ஒரு டீயோடு முடிந்து விடும். பொதுவாக மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசிவரை மிகப்பெரிய பணக்காரர்களாக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். அதற்கு சுகாதிபதி(4), பாக்யாதிபதி(9), ஜீவனாதிபதி(10) இவர்கள் பலம் பெற்று இருக்க வேண்டும். தன காரகனாகிய குருவும் சிறப்பாக இருக்க வேண்டும். இப்படி அமைப்பு இருந்தால் பிறக்கும்போதே பெரிய கோடீஸ்வரர்களாக இருப்பார்கள்.2,9,11-ஆம் அதிபதிகள் ஒன்றுக் கொன்று தொடர்பு கொண்டிருந்தால், அவர்கள் பெரிய செல்வந்தர்களாக ஆடம்பர வாழ்க்கை நடத்துவார்கள். லக்னத்துக்கு 2வது வீட்டுக்குடைய கிரஹம், 9வது வீட்டிலிருந்து, 9க்குடையவன் பலம் பெற்றிருந்தால் பிதுர்பாக்ய சொத்துக்களைப் பெறும்படி இருக்கும். ஆனால், பிதுர் தோஷங்களினால் விரயம் ஏற்பட வாய்ப்பும் உண்டு. வாழ்வின் பின் பகுதியில், நல்ல நிலைமையில் இருப்பார்கள். பெரியவர்களுடைய ஆசீர்வாதத்தைப் பெற்று, சொத்துக்களை பல மடங்காகச் பெருக்கும் ஆற்றலுடன் இருப்பார்கள்.