பாதுகையின் பெருமை

பகுதி 13

பிரணவ மந்திரத்தின் அம்சமாக இரண்டாக உள்ள பாதுகையை “த்வந்த்வ பத்ததியில்” வர்ணிக்கிறார் ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகன்.

“ப்ரபத்யே பாதுகாரூபம் ப்ரணவஸ்ய கலாத்வயம்
ஓதம் மிதமிதம் யஸ்மிந் அநந்தஸ்யாபி தத்பதம்’’

என்று, பிரணவம் (ஓம்) பாதுகாரூபமாக ஓரிணையாக உள்ளது. அப்படி பிரணவத்தின் ரூபமாகவே உள்ள திருவரங்கனின் பாதுகையை நான் சரண் அடைகிறேன் என்று முதல் ஸ்லோகத்தை சாதிக்கிறார் ஸ்வாமி தேசிகன். அந்த பாதுகா தேவி ஆனவள் எதற்காக ரங்கநாதனின் திருவடியை அடைந்திருக்கிறாளாம் தெரியுமா? தேவர்களிடமிருந்தும் சக மனிதர்களிடத்திருந்தும் வரக்கூடிய ஆபத்துக்களிலிருந்து நம்மை காப்பதற்காகவே, இணையாக பகவானின் இணையடிகளை பற்றி இருக்கிறாளாம்.

திருவரங்கனின் திருவடியை அலங்கரிக்கும் பாதுகையை மனதால் தியானித்து, அந்த பாதுகையை சரண் அடைந்து விட்டாலே போதும். அந்த பாதுகைகளே பகவானின் திருக்கரத்தில் இருக்கக் கூடிய சுதர்சனம் என்கிற சக்கரம் தரக்கூடிய ஒளியையும், அவனது பாஞ்சசன்யம் என்கிற திருச்சங்கு தரக்கூடிய ஒலியையும் தந்து பக்தர்களின் துன்பத்தை போக்கிடும். இனிய ஒளியோடும் ஒலியோடும் அல்லவா பெருமாளின் பாதுகைகளும்
இருக்கின்றன?

பாதுகைகளின் நடை (கதி) சூர்ய கதி போல இருக்கிறதாம். உலகில் இருக்கும் இருளை அகற்றுவதற்காகவே, சூரிய பகவான் தட்சிணாயனம் என்றும் உத்தராயமென்றும் இரண்டை ஏற்று, தெற்கு மற்றும் வடக்கு மார்கங்களில் மாற்றி மாற்றி நடை போடுகிறான் அல்லவா? அதைப்போலவே மக்களின் துயரை போக்க, பெருமாளின் சஞ்சாரம் வலது புறம், இடது புறம் என்ற ரீதியில் நடப்பது உதவுகிறது. அப்படி பெருமாள் இருப்புறமும் நடக்க உதவிடும் உங்களை சூர்யகதி போலவே எண்ணுகிறேன் என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

“விஶ்வோபகார மதிக்ருத்ய விஹாரகாலேஷு
அந்யோந்யத: ப்ரதமமேவ பரிஸ்புரந்த்யோ:
த்ருஷ்டாந்தயந்தி யுவயோர்மணிபாதரக்ஷே!
திவ்யம் ததேவ மிதுநம் திவிஷந் நிஷேவ்யம்’’

ஒரு பக்தர் சென்று திருமாலிடம் தம் குறைகளை சொல்லும் போது திருமாலும் அவரது திருமார்பில் இருக்க கூடிய திருமகளும் தான் முன்னே சென்று அந்த பக்தரின் குறைகளை காண வேண்டும் என்பதில்திருமாலும் திருமகளும் எப்படி போட்டி போட்டு கொண்டு வருவார்களோ, அப்படி ரத்தின கற்களால் பதிக்கப்பட்ட பாதுகைகள் என்ன செய்கிறது என்றால், திருவரங்கன் உலகம் உய்வடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சஞ்சாரம் செய்யும் காலங்களில், அப்பெருமானின் திருவடியில் இருக்கக்கூடிய வலது பாதுகையும், இடது பாதுகையும் “நான் முந்தி”, “நீ முந்தி” என்று போட்டி போட்டு கொண்டு திவ்ய தம்பதிகள் போலவே இருந்து திருவருள் புரிகிறதாம்.

இந்த ரங்கநாதனின் பாதுகைகள் நமக்கு யோகத்தையும், க்ஷேமத்தையும் சேர்த்தே பெற்று தருகிறதாம். நாம் இதுவரை பெறாத ஐஷ்வர்யத்தை பெறுவதை யோகமென்றும், அப்படி நாம் பெற்றவற்றை அப்படியே காப்பாற்றுவது க்ஷேமம் என்று சொல்வார்கள். அப்படி திருவரங்கனின் திருவருள் என்ற மாபெரும் ஐஷ்வர்யமான யோகத்தை நமக்கு பெற்று தந்து அந்த ஐஷ்வர்யம் நம்மை விட்டு விலகாமல் அப்படி இருக்கும் படி காப்பாற்றி தருவது அவனது பாதுகைகள் தானே?

“ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின்” 25-வது பத்ததி “ஸந்நிவேஶ பத்ததி”. பாதுகைகளின் திருஉருவத்தினை வர்ணிப்பதற்காகவென்றே உருவான உயர்வான பத்ததி இது.

“அணோரணீயஸீம் விஷ்ணோ:மஹதோபி மஹீயஸீம்
ப்ரபத்யே பாதுகாம் நித்யம் தத்பதே நைவ ஸம்மிதாம்’’

என்று திருமால் தன் திருஅவதாரங்களுக்கேற்ப எப்படி திரு உருவம் எடுத்தாலும், அவனுடன் கூடவே இருக்கும் அந்த பாதுகையானவள், அப்பெருமானின் திரு உருவத்திற்கேற்றார் போல தன்னை மாற்றி கொள்கிறாள் அல்லவா? பெருமாள் அனுவைப்போல சிறிய உருவமெடுத்தாலும் சரி, திரிவிக்ரமனாக பெரிய உருவமெடுத்து நின்றாலும் சரி, அப்படியே பெருமாளின் திருவடியோடு பொருந்தி இருக்கிறாளே… அப்படிப்பட்ட பாதுகா தேவியை நான் சரண் அடைகிறேன்.

பாதுகை என்பது திருவரங்கனின் திருவடியில் அலங்காரமாகவும் திகழ்கிறது அதைப்போலவே ஆபரணமாகவும் திகழ்கிறது. ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் எல்லா ஸ்லோகங்களுமே நம்மை வியப்பில் ஆழ்த்தக் கூடியவே என்றாலும், ஸ்வாமி தேசிகனின் கற்பனை சக்தி என்பது சிற்சில ஸ்லோகங்களில் சற்றே கூடுதலாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மிகமிக அற்புதமான ஸ்லோகம்தான்:

“அங்காந்தரேஷு நிஹிதாந்யகி லாநி காமம்
பர்யாய கல்பநஸஹாநி விபூஷணாநி
நித்யம் முகுந்த பதபத்ம தலாநுரூபம்
நைபத்ய மம்ப! பவதீ நயநாபி ராமம்’’

என்ற இந்த ஸ்லோகம். அம்மா! என்றே பாதுகா தேவியை அழைக்கும் ஸ்வாமி தேசிகன், மற்ற அவயங்களில் (உடல் உறுப்புகளில்) சாத்தப்பட்டுள்ள ஆபரணத்தை மாற்றி இன்னொரு அவயத்திற்கு சாற்றினால், அந்த ஆபரணங்கள் பரஸ்பரம் பொறுத்து கொள்ளும், ஏற்றுக் கொள்ளும். ஆனால், தாமரை மலர் போல மென்மையாகவும் மேன்மையாகவும் இருக்கக்கூடிய அந்த திருவரங்கனின் திருவடிகளில், உன்னை தவிர வேறு எந்த ஆபரணத்தையும் அணிவிக்க முடியாதபடி பாதுகையே நீயே தினம் தினம் அவன் திருவடியை விட்டு பிரியாமல் அவனை அலங்கரித்து கொண்டிருக்கிறாய். பெருமாளின் திருவடிக்கு என்றே பொருத்தமாகக் இருக்க கூடிய பெரிய அழகான ஆபரணம் பாதுகையே தானே?

திருமால் திரிவிக்ரம அவதாரம் எடுத்து மூன்று உலகையும் அளந்தான் அல்லவா? அப்படி தன் திருவடி கொண்டு உலகை பெருமாள் அளக்க ஒரு அடியை மேலே உயர்த்தினான். அப்போது மூன்று உலகங்களும் அவன் அடிக்கு போதாமல் போயிற்று. அப்படி அளவிட முடியாத அந்த அரங்கனின் திருவடி, உன்னால் எளிதாக அளக்கப்பட்டு உன்னுடைய அளவாக கனகச்சிதமாக பொருந்தி நிற்கிறதே என்று பாதுகையின் பெருமையை வியக்கிறார் ஸ்வாமி தேசிகன்.

26வது பத்ததியான “யந்த்ரிகா பத்ததி”யில், பாதுகைகளில் காணப்படும் குமிழை வர்ணிக்கிறார் ஸ்வாமி தேசிகன். அழகான குமிழைத் தன் மேற்புறத்தே கொண்டுள்ளதால், ஸ்ரீ ரங்கநாதனின் திருவடிகள், “மேற்பக்கத்தில் எங்களுக்கு வேறு ஆபரணமே வேண்டாம் என்று தள்ளியபடியே உள்ளதாம். அப்படி மேல்முகமாக நுனியை கொண்டுள்ள குமிழ் கொண்ட பாதுகையை வணங்கி இந்த பத்ததியை தொடங்குகிறார் ஸ்வாமி தேசிகன். பாதுகையில் இருக்கும் அந்த குமிழ் என்ன செய்கிறது என்று இந்த பத்ததியின் இரண்டாவது ஸ்லோகத்தில்.

“ப்ரஸபம் ப்ரதிருத்ய கண்டகாதீந்
பவதீ கௌரி பதாம்புஜாத தஸ்தாத்
சரணாவநி! தாரயத் யமுஷ்மிந்
உசிதச்சாயம் உபர்யபி ப்ரதீகம்’’

பாதுகையே! நீ திருவரங்கனின் திருவடிக்கு கீழ்ப்புறமிருந்து கொண்டு, அப்பெருமாள் நடக்கும் பாதையில் அப்பெருமாளின் தாமரை போன்ற திருவடிகளை காப்பாற்றுவதற்காக அவன் நடைப்போடும் பாதையில் இருக்கக்கூடிய முட்களை எல்லாம் பலம் கொண்டு நசுக்கி பெருமாளுக்கு உதவுகிறாய். அந்த திவ்யமான திருவடிகளுக்கு அழகிய நிழலை உண்டாக்குகின்ற குமிழ் என்கிற அழகான அவயத்தை தாங்கி நிற்கிறாய். திருவரங்கனை சரணடைய அவன் தன் பாதுகைகளில் சரணடைந்து விட்டால் போதும்.

அந்த பாதுகைகளே நம்மை அரங்கனின் திருவடிக்கு அழைத்து சென்று விடும் என்பதை இந்த ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் முதல் பகுதியிலிருந்தே நாம் அனுபவித்து வருகிறோம் இல்லையா? அதை வலியுறுத்தும் விதமாக இந்த பத்ததியில் வரக்கூடிய ஒரு அற்புதமான ஸ்லோகத்தில், “ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை அடைந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற எண்ணியவளாக, நீ நினைத்த போது அந்த திருவரங்கனையே அவனது அடியார்களிடம் அழைத்து கொண்டு போகின்ற தேர் போன்று இருக்கின்றாய். உனது குமிழ் என்பது அந்தத் தேரின் முன்னே காணப்படும் ஏர்க்கால் போன்ற தோற்றம் அளிக்கிறது என்கிறார் ஸ்வாமி தேசிகன்.பாதுகையின் பெருமையை தொடர்ந்துகூடி இருந்து குளிர குளிர அனுபவிப்போம்.

நளினி சம்பத்குமார்

 

Related Stories: