பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழி உண்டு. அதற்கேற்ப வைகுண்டம் அருகே அமைந்துள்ள சிறிய கிராமம் திருப்புளியங்குடி. நவகிரகங்களில் வரிசையில் நான்காவது தலமாகவும் ,நவ திருப்பதி வரிசையில் மூன்றாவது தலமாக விளங்க கூடியது. புதன் கிரகத்திற்குரிய அம்சமாகக் கருதப்படுகிறது. இங்கு சென்று வணங்கினால் தீராத துன்பங்கள் நீங்கும். பூமிக்கு உரிய தலமாகும்.
திருப்புளியங்குடியில் உள்ள திருமாலுக்கு காய்சின வேந்தர் என்ற பெயரும் உண்டு. இப்பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்று பார்த்தால் வியப்பாக இருக்கும். பெண்ணின் கோபத்தை தணித்ததால் ஏற்பட்ட பெயராகும். வைகுண்டம் விட்டு அகன்ற பூமித்தாய் திருமாலுக்கு இரு மனைவியர் என்பதை நாம் அறிவோம். ஒருவரை மகிழ்விக்க மற்றொருவர் சீற்றம் கொள்வது இயற்கை அல்லவா? அவ்வாறுதான் இச்சம்பவம் நடைபெற்றது.
ஒரு சமயம் திருமால் தன் துணைவி மகாலட்சுமியின் தேவியோடு வைகுண்டம் விட்டு கருட வாகனத்தில் பூவுலகை வலம் வந்தார். திருப்புளியங்குடி என்ற கிராமத்தில் எழுந்தருளினார். அங்குள்ள இயற்கைக் காட்சிகள் தாமிரபரணி ஆற்றின் அழகு கண்டு மனம் உவகை கொண்டனர். சிலுசிலு காற்று மென்மையாக மேனியைத் தீண்ட, சலசலவென தாமிரபரணி ஆறு சங்கீதம் இழைத்து ஓட, சூரிய ஒளி பட்டு நீர் பளபளக்க எழில் கொஞ்சும் நதிக்கரையில், மணல் மேடான இடத்தைப் பார்த்து அங்கேயே அமர்ந்தனர். ரம்யமான இயற்கைச் சூழலில் மகாவிஷ்ணு மகாலட்சுமி தேவியோடு உரையாடி மகிழ்ந்தார். வாடைக் காற்றும் தேவியின் சிருங்கார அழகும் மனதில் மகிழ்ச்சியும் உன்மத்தமும் ஏற்பட்டது. அந்த கிறுக்கத்தில் அவர் ஆழ்ந்திருந்தார்.
வைகுண்டத்தில் திருமால் காணாது இருப்பதைக் கண்ட நாரதர் அவரைத் தேடி பூவுலகிற்கு வந்தார். தாமிரபரணி மணல்மேட்டில் தம்பதியர் அமர்ந்து ஏகாந்தமாக மகிழ்ந்திருப்பதைக் கண்டார். அவர் உள்ளத்தில் சட்டென ஒரு எண்ணம் உதித்தது. இங்கு இவர் சந்தோஷமாக இருக்கிறார், வைகுண்டத்தில் பூமாதேவி தனியாகத்தானே இருப்பார் என்ற எண்ணம் தோன்றியதும் கலகத்தைத் தொடங்க வைகுண்டம் சென்றார்.
திருமாலின் நினைவலைகளில் அமர்ந்து மந்திரம் ஓதிக்கொண்டிருந்த பூமாதேவியை கண்டு “அன்னையே! தாங்கள் தனியாகவா இருக்கிறீர்கள்? அந்தோ பாவம், திருமால் மகாலட்சுமி அன்னையை அழைத்துக் கொண்டு தாமிரபரணி கரையோரம் உள்ள மணல்மேட்டில்அமர்ந்து இயற்கையோடு மகிழ்ந்து இன்புற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால், தாங்கள் தனித்து தவித்துக்
கொண்டிருக்கிறீர்களே?
என்ன இருந்தாலும் திருமாலுக்கு, மகாலட்சுமியே உயர்ந்தவள் போலும், நாராயணா… நாராயணா…” என்ற வெடிகுண்டை அன்னை உள்ளத்தில் வீசி தன் ஆற்றாமையைக் கூறுவதுபோல கலகத்தை துவக்கி வைத்தார். பொறுமைக்கு பூமாதேவி என்றாலும், கணவன் என்று வந்து விட்டால் தான் முதலிடம் இல்லை என்ற மன வருத்தம் ஏற்பட்டது. தன்னிடம் உள்ள நல்ல குணங்கள் எல்லாம் பறந்தோடியது. தன்னை மதியாத பதிக்கு புத்தி புகட்ட தன் பெருமையை உணர்த்தவும் விரும்பினார்.வைகுண்டம் விட்டு பாதாள லோகம் செல்லுதல்.
அன்னை பாதாள லோகத்தில் சென்று மறைந்தாள். இதனால் பூலோகம் அன்னையின்றி தவிக்க தொடங்கின. ஒவ்வொரு உயிரும் வாழ்வதற்கு அத்தியாவசியமான காற்று, நீர், உணவு இன்றி துன்பத்தில் ஆழ்ந்தன. நாட்டில் கொடிய பஞ்சம் தலைவிரித்து ஆடியது. மக்கள் உயிர்ப் பிழைப்பதற்கு சாத்தியம் இல்லாத நிலை ஏற்பட்டது. பூவுலகம் மட்டுமல்லாமல் வானுலக தேவர்கள் வாழ்வாதாரம் தடைபட்டது. தேவலோகமே இருளில் மூழ்கின. தேவர்கள் துன்பத்தைத் தீர்க்க பிரம்மனிடமும் சிவனிடமும் தஞ்சம் புகுந்தனர். அனைவரும் இணைந்து திருமாலிடம் சென்று முறையிட்டனர்.
திருமால் மனம் துவண்டார். தேவர்களைக்கு சமாதானம் செய்துவிட்டு வைகுண்டத்தில் பூமாதேவி இல்லாததால் ஏற்பட்ட நிலைமையை உணர்ந்தார். என்ன செய்வதென்றே புரியாமல் தவித்தார். நாரதர் மூலம் பாதாள லோகத்தில் அன்னை இருப்பதை அறிந்தார். அவரை மீட்டு கொணர்வதற்காக சென்று மன்னிப்பு கேட்டார். மகாலட்சுமியோ தனக்கு இணையானவள் நீதானே; உன் சக்தியை நீ அறியவில்லையோ? பொறுமையின் சிகரமே உன்னால் பூமியில் உள்ள மக்கள் படும் வேதனை அறியாயோ? அன்னையே என்றும் நீயும் நானும் சமம் அல்லவா என்று மலர்மகளும், மண்மகளும் திருமாலின் இரு விழிகள் என்று நீ அறியாயோ இதில் ஒரு விழி இழந்தாலும் பெருமை இல்லை என்பதனை எடுத்துரைத்தார்.
நாரதரின் கலகத்தால் தன்மதி இழந்ததை எண்ணி வெட்கப்பட்டு திருமாலுடன் மீண்டும் பூலோகம் திரப்பினாள். மலர் மகள், மண்மகள் இருவரும் மகாவிஷ்ணுவுடன் இணைந்து திருப்புளியங்குடியில் கொலு கொண்டனர். இந்தத் தலத்தில் திருமால் மண் மகளின் சினத்தை நீக்கியதால் காய்சின வேந்தர் என்ற சிறப்பு பெயர் பெற்றார். மண்மகளின் சினத்தை போக்கச் செய்ததால் பூமிபாலகர் என்ற பெயரும் ஏற்பட்டது.
இந்திர தீர்த்தம்
இமயமலை சாரலில் முனிவர் ஒருவர், தன் மனைவியுடன் பர்ண சாலை அமைத்து வாழ்ந்து வந்தார். இயற்கை அழகில் மான்கள் துள்ளி குதிப்பது கண்டு மனம் இழந்த முனிவரின் மனைவி தானும் மானாக மாற வேண்டும் என முனிவரிடம் கேட்டாள். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற இருவரும் மானாக உருமாறி துள்ளிக் குதித்து வனத்தில் திரிந்தனர். அச்சமயம் தேவலோகத்தில் இருந்த தேவேந்திரன் காட்டில் வேட்டையாட வந்தான். மான் உருவில் இருந்த முனிவர் அவர் மனைவி என்று அறியாமல் தன் அம்புகளை துளைத்தான். அக்கணமே அவர்கள் உயிர் இழந்தனர். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. இத்தோஷம் விலக்க குருபகவான் வியாழ பகவானிடம் ஆலோசனைக் கேட்டான்.
திருப்புளியங்குடியில் உள்ள பூமி பாலகரை வணங்கினால் சாபம் விலகும் என்றார். அவ்வாறே, இந்திரன் திருப்புளியங்குடி திருத்தலத்தில் எழுந்தருளி இந்திர தீர்த்தத்தை உண்டாக்கி அதில் நீராடி பூமிபாலகரை தினமும் வணங்கி தியானம் செய்தான். இந்திரனின் தவத்தை மெச்சி பூமி பாலகர் மகிழ்ந்து சாபத்தை நீக்கினார்.
யாகத்தை தடுக்க அரக்கன்
இந்திரனின் சாபம் நீங்கியதும் திருமாலுக்கு கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு யாகத்தை நடத்தினார்.யாகத்தை தடையாக்க ஒரு அரக்கன் அங்கே முளைத்தான். இந்திரன் செய்த வேள்வி ஈடேறாமல் பல இடையூறு செய்து சிறப்படைய முடியாமல் தடுத்தான். செய்வதறியாத இந்திரன் பூமி பாலகரை வணங்கி யாகம் நடைபெற வேண்டுமென வேண்டினார். பூமி பாலகர் யாகம் சிறப்பாக நடைபெற அரக்கனோடு போரிட்டார். திருமாலின் ஆயுதம் கதை அரக்கன் மீது பட்டதும் அவன் நிலை மாறியது.
யக்ஞ ஷர்மா
அரக்கன் தனது சுய உருவம் அடைந்தான். பூமிபாலகன் உருமாறிய அரக்கனை “நீ யார்?” என்று கேட்டார். திருமாலின் திருவடிகளை வணங்கி எழுந்தவன், சுவாமி என் பெயர் யக்ஞ சர்மா. முன் ஜென்மத்தில், நான் யக்ஞ சர்மா என்ற பிராமணனாக பிறந்தேன். எனது இல்லத்தில் வசிஷ்ட புத்திரர்களால் செய்யப்பட்ட யாகத்திற்குரிய மரியாதைச் செய்யப்படாமல் அவர்களை அவமானதித்தேன். அதன் காரணமாக வெகுண்ட வசிஷ்ட புத்திரர்கள் என்னை அரக்கனாகும்படி சாபம் இட்டனர்.
சாபம் பெற்ற பிறகு, அரக்கனாக மாறினேன். தவறு செய்துவிட்டேன் என்பதை அறிந்தேன். அவர்களிடம் பாவ மன்னிப்பு கேட்டேன். என் மீது இரக்கம் கொண்ட வசிஷ்ட புத்திரர்கள் நீ பூலோகத்தில் தாமிரபரணி ஆற்றங் கரையோரமாக இந்திரன் யாகம் செய்வான். அப்பொழுது அதை தடுத்து இடையூறு செய்தால், அத்தலத்தில் அருள்பாலிக்கும் பூமிபாலகர் உன் மீது போர்த் தொடுப்பார்.
அவரின் ஆயுதம் கதை உன் மீது பட்டவுடன் ராட்சச உருவம் நீங்கி, பழைய உருவத்தைப் பெற்று மகிழ்வுடன் வாழ்வாய் என்று கூறினர். அவ்வாறே இன்று அற்புதம் நிகழ்ந்தது. உங்களின் கருணையால் என் பழைய உருவத்தைப் பெற்று விட்டேன் என மகிழ்ந்தான். பின்பு, இந்திரனிடம் மன்னிப்பு கேட்டு திருமாலை வணங்கி அவ்விடம் விட்டு மறைந்தான். இந்திரன் வேள்வியை சிறப்புடன் செய்து முடித்து பூமி பாலர்களின் அருளைப் பெற்று தேவலோகம் சென்றான்.
திருமாலின் தோற்றம்
மூலவர் பூமிபாலன் சயன கோலம் சுமார் 12 அடி நீளத்தில், தலைக்கடியில் மரக்கால் வைத்துக் கொண்டு வேதசார விமானத்தில் ஆதிசேஷன் படுக்கையில் எழிலாக கிடந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இவர் தன்னுடைய திருமுகம் முதல் மூட்டு வரை உள்ள பகுதியை மட்டுமே கருவறையில் காண முடியும், மற்ற பகுதியைப் பிராகாரத்தைச் சுற்றி வந்து சாளரத்தின் (ஜன்னல்) வழியாகவே வடபுற சுவரில் பூமிபாலகரின் திருவடிகளை (பாதங்களை) தரிசிக்க முடியும். இத்தகைய கோலம் வேறு எங்கும் தமிழக கோவில்களில் தரிசிக்க இயலாது.
எண்ணெய் காப்பு
பெரிய திருமேனி உடைய பூபாலகருக்கு 128 படி எண்ணைக் காப்பு செய்வதற்கு தேவைப்படுகிறது. உற்சவர் காய்சின வேந்தர் நின்ற கோலத்தில் நான்கு கரங்களில் ஆயுதம் தாங்கி அன்னையர் இருவருடன் காட்சி தருகிறார். எல்லாக் கோயில்களில் சடாரி தரிசனம் உண்டு. ஆனால், இங்கு சடாரி தரிசனம் கிடையாது. காரணம், இவர் அக்னி பந்தமாக இருப்பதால், பக்தர்கள் தலையில் சடாரி வைப்பது இல்லை.
திருமாலின் தொப்புள் கொடியிலிருந்து தோன்றும் தாமரைக் கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவரில் உள்ள பிரம்மாவின் தாமரை மலரோட இணையும் பிரம்மாண்டமாக காட்சி காணப்படும். மற்றும் நில மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார் இருவரும் பிரம்மாண்டமான பெரிய திருமேனியில் காட்சி தருகின்றனர். இவர்கள் திருமாலின் திருபாதத்தில் அருகே அமர்ந்து இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். மேலும் இத்தலத்தில் தாயார்களுக்கு என்று தனி சந்நதி எதுவும் இல்லை. வருணன், நிருதி, யக்ஞசர்மா, இந்திரன் ஆகியோர் பெருமாளை வணங்கி அருள் பெற்ற தலமாகும்.
நம்மாழ்வார் மங்களாசாசனம்
கொடுவினைப் படைகள் வல்லயாய் அமரருக்கு இடர் கெட அசுரருக்கு
இடர்செய் கடுவினை நஞ்சே என்னுடைய அமுதே கலிவயல் திருப் புளிங்குடியாய்
வடிவினை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே.
பண்டை நாளாலே என் திரு அருளும் பங்கையத்தான் திரு அருளும் கொண்டு நின்
கோயில் சீயத்துப்பல் படிகால் குடி குடி
வந்து ஆட் செய்யும் தொண்டர்களுக்கு அருளிச் சோதிவாய் திறந்துன் தாமரைக் கண்களால்
நோக்காய் தென்டீரைப் பொருநல் தன்பணை
சூழ்ந்தனை திருப்புளியங்குடி கிடந்தானே.
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனைக் காலம்
கிடைத்தியுள் திரு உடம்பு அசைய தொடர்ந்து
குற்றவேல் செய்து கொல்லடிமை வழி வரும்
தொண்டரோர்க் கருளி தடங் கொள் தாமரைக்
கண்விழித்து நீ எழுந்தன் தாமரை மங்கையும்
நீயும் இடங்கொள் மூவுலகும் தொழ விருந்த
தருள்வாய் திருப்புளியங்குடி கிடந்தானே!.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை
அவரவருக்கு உள்ள தோஷ நீங்க நவதிருப்பதி வந்து வழிபட்டாலும் புதன் கிரகதோஷம் நீங்கும். ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் முயற்சி செய்வதற்கும்
மிகவும் விசேஷமான தலமாகும்.
நேர்த்திக்கடன்
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டால் சகல
விதமான தோஷங்களும் நீங்கும்.
மூலவர்: பூமி பாலகர்.
உற்சவர்: காய்ச்சின வேந்தர் ( எம் இடர் களைவான்).
தாயார்: மலர் மகள் நாச்சியார்,
நிலமகள் நாச்சியார்.
விமானம்: வேத சார விமானம்.
தீர்த்தம்: வருண்,நிருதி, இந்திரன்,
தாமிரபரணி.
புராண பெயர்: திருப்புளியங்குடி
பொன் முகரியன்
