மகாசுவாமிகள் இட்ட அன்புக் கட்டளை

பல வருடங்களுக்கு முன், ஒரு சித்திரை மாதம். வருஷப் பிறப்பு தினம். காலை வேளை. ஸ்ரீகாஞ்சி மடத்தில் மகா ஸ்வாமிகளைத் தரிசிக்க ஏகக் கூட்டம். நீண்ட வரிசை.அந்த வரிசையில் பதினாறு வயது இளைஞன் ஒருவனும் காத்திருந்தான். வரிசை மெல்ல ஊர்ந்தது. பத்து மணி சுமாருக்கு மகா ஸ்வாமிகள் அமர்ந்திருந்த மேடை அருகே வந்து சேர்ந்தான், அந்த இளைஞன். அவனைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தார் ஆச்சார்யாள். அவ்வளவுதான்! உடனே, பெரியவாளுக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். உடனே எழவில்லை. சற்று நேரம் பொறுத்துப் பார்த்த ஸ்வாமிகள், “அப்பா, கொழந்தே எழுந்திரு… எழுந்திரு!” என்று ஆக்ஞையிட்டார்.

எழுந்தான். கைகளை மேலே கூப்பி நின்றான். பக்தி நடுக்கம் அவனிடமிருந்து அகலவில்லை. அவன் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.இளைஞனை அருகே கூப்பிட்டார் ஸ்வாமிகள். கும்பிட்டபடி அருகில் சென்றான். “நீ யாரப்பா? ஒம் பேரென்ன? எந்தூர்லேர்ந்து வர்றே?” என்று விசாரித்தார். அந்த இளைஞன் மிகவும் விநயமாக வாயை ஒரு கையால் பொத்தி, “ஸ்வாமி, எம் பேரு பாலகிருஷ்ண ஜோஷி. குஜராத்தி பிராமணன். மெட்ராஸிலேருந்து வரேன். பூர்வீகம் குஜராத்” என்று அடக்கத்துடன் சொன்னான்.

“மெட்ராஸ்லே எந்த இடம்?” என்று கேட்டார்.
“ஹனுமந்தராயன் கோயில் தெருஸ்வாமி” என்றான் ஜோஷி பவ்யமாக.
“என்ன படிச்சிருக்கே?”
“எட்டாவது வரைக்கும் பெரியவா…” என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் ஜோஷி.

“அது போகட்டும்… இன்னிக்குப் புது வருஷப் பொறப்புங்கிறதாலே இந்த க்ஷேத்ரத்துல இருக்கிற கோயில்கள்லே ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டுப் போவோம்னு வந்தயாக்கும்?” என்று விசாரித்தார் மகா ஸ்வாமிகள்.“அப்படி இல்லே பெரியவா. பெரியவாளைத் தரிசனம் பண்ணிண்டு போகணும்னு வந்தேன்.”உடனே மகா ஸ்வாமிகள், “அபசாரம்… அபசாரம். அப்படியெல்லாம் சொல்லப்படாது. ஒரு ஊருக்குப் போனா, மொதல்லே அங்கே இருக்கற சிவ, விஷ்ணு ஆலயங்களுக்குப் போய் அவசியம் தரிசனம் பண்ணணும். நான் எந்த ஊருக்குப் போனாலும் மொதல்ல கோயில்களுக்குப் போய் தரிசனம் பண்ணிட்டுத்தான் மறு கார்யம்… என்ன புரியறதா?” என்று வாய்விட்டுச் சிரித்தார் ஸ்வாமிகள்.“இப்போ புரிஞ்சிண்டேன்” என்று அடக்கமாக பதில் சொன்னான் ஜோஷி.

உடனே மகா ஸ்வாமிகள், “சரி… ஆச்சார்யாள் பிரசாதத்தை வாங்கிண்டு, இந்த ஊர்ல இருக்கிற கோயிலுக்கெல்லாம் போய்ட்டு, அப்புறமா மெட்ராஸுக்கு பஸ் ஏறணும். என்ன… புரியறதா?” என்று சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் ஸ்வாமிகள்.உடனே, பாலகிருஷ்ண ஜோஷி சற்று தைரியம் வந்தவனாக, “நன்னா புரியறது பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே இந்த ஊர்லே எல்லா கோயில்களுக்கும் போயிட்டு, தரிசனம் பண்ணிட்டு மடத்துக்கு வந்துடறேன். அனுக்ரஹம் பண்ணணும்” என்றான்.

ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, “அதான், பிரசாதமெல்லாம் இப்பவே கொடுத்துடப் போறேன். திரும்ப எதுக்கு மடத்துக்கு வரப்போறே? ஓஹோ… ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு, மத்யானம் மடத்துல சாப்டுட்டு பஸ் ஏறலாம்னு முடிவு பண்ணிருக்கியாக்கும். பேஷ்… பேஷ்” என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள். தயங்கினான் ஜோஷி. அவன் கண்களில் நீர்.“ஏன் கண் கலங்கறே?” பெரியவாஅன்போடு கேட்டார்.உடனே ஜோஷி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “கொஞ்ச நாள் இங்கேயே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதனாலே…” என்று முடிப்பதற்குள்…“இங்கேயேன்னா… புரியலையே?” என்று இடைமறித்தார் மகா ஸ்வாமிகள்.

பவ்யமாக, “மடத்துலதான் பெரியவா” என்றான்.“என்ன… மடத்துலயா! இங்க ஸந்யாசிகள்னா தங்குவா. ஒன்னாட்டம் பசங்களுக்கு இங்க என்ன வேலை? ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஊர் போய்ச் சேரு” ஸ்வாமிகளின் குரலில் சற்று உஷ்ணம்தெரிந்தது.ஜோஷி நகரவில்லை. மீண்டும் ஒரு முறை பெரியவாள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தான். “பெரியவா அப்படிச் சொல்லப்படாது. நேக்கு மடத்துலே தங்கி, ஒங்களுக்குக் கொஞ்ச காலம் பணிவிடை செய்யணும்கிறது எண்ணம்” என்றுகொட்டிவிட்டான்.

ஆச்சார்யாளுக்கு நிலைமை புரிந்தது. கள்ளம் கபடமற்ற ஜோஷியின் தோற்றமும், வெளிப்படையான பேச்சும் ஸ்வாமிகளை வெகுவாகக் கவர்ந்தது. ஜோஷியிடம் ஒரு தனி அபிமானம் மகா ஸ்வாமிகளுக்கு ஏற்பட்டது. இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நேக்கு பணிவிடையா? இங்கதான் மடத்துலே நெறய்ய பசங்கள் இருக்காளே. இதுல நீ வேற என்னத்துக்கு? நீ மெட்ராஸ் கௌம்பற வழியைப் பாரு” என்றார் மகா ஸ்வாமிகள். ஜோஷி அந்த இடத்தைவிட்டு நகர மனமின்றி நகர்ந்தான். ஆனால், மடத்தைவிட்டு நகரவில்லை.ஜோஷி மத்யானம் மடத்தில் சாப்பிட்டான். பெரியவா தங்கி ஓய்வெடுக்கும் அறைக்கு வெளியே ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டான்.

சாயரக்ஷை வேளை. ஸ்வாமிகள் ஸ்நானம் முடித்து வெளியே வந்தார். ஜோஷி அவர் கண்ணில் பட்டான். பெரியவா எதுவும் பேசாமல் வேகமாகக் கடந்து சென்றார். பெரியவா எங்கு சென்றாலும் அவர் கண்ணில் படுகிற மாதிரி நின்று பார்த்தான் ஜோஷி. நான்கு நாட்கள் விடாமல் பக்தி வைராக்யத்தோடு முயன்று பார்த்தான். பலனில்லை.ஐந்தாவது நாள். விடியற்காலை வேளை. ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் புஷ்கரணிக்கு உஷத் கால ஸ்நானத்துக்காகப் புறப்பட்டார் மகா ஸ்வாமிகள். ஸ்நானம் பண்ணிக் கரையேறிய ஸ்வாமிகள் கண்ணில் ஜோஷி பட்டான். “நீ இன்னும் மெட்ராஸ் போகலியா?” அனுசரணையுடன் கேட்டார் ஸ்வாமிகள்.

“இல்லே பெரியவா. நான் மெட்ராஸ்லேர்ந்து சங்கல்பம் பண்ணிண்டு வந்தது பூர்த்தியாகாமல் திரும்பற உத்தேசம் இல்லே” என வைராக்கியத்துடன் சொன்னான் ஜோஷி. பெரியவாளுக்குத் தெரிந்திரிருந்தாலும், தெரியாதது மாதிரி கேட்டார், “அப்படி என்ன சங்கல்பமோ?”“கொஞ்ச காலம் உங்கள் பாதார விந்தங்களில் பணிவிடை செய்யறதுதான் பெரியவா” என்று எதிர்பார்ப்போடு சொன்னான் ஜோஷி.“சாத்தியமில்லாத சங்கல்பத்தை பண்ணிக்கப் படாது” சொன்ன ஸ்வாமிகள் நடந்து போய்விட்டார்.ஜோஷி மனம் தளரவில்லை. ஸ்ரீகாமாட்சி அம்மனை தரிசித்துவிட்டு நேராக மடத்துக்குப் போனான். ஆச்சார்யாளின் அறை வாசலில் நின்று கொண்டான்.

பக்த தரிசனத்துக்காக ஸ்வாமிகள் வெளியே வந்தார். அவர் கண்ணில் ேஜாஷி பட்டான். அவனைப் பார்த்தவுடன் ஆச்சார்யாளுக்கு மனம் நெகிழ்ந்து விட்டது. ‘தனக்குப் பணிவிடை செய்தே தீரவேண்டுமென இப்படி ஆசையுடன் கூடிய ஒரு வைராக்கியமா!’ என்று ஆச்சரியப்பட்ட ஸ்வாமிகள், ஜோஷியை அருகில்அழைத்தார்.“ஒங்கப்பாவுக்கு உத்யோகமா? வியாபாரமா?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.“வியாபாரம்தான் பெரியவா. வைரம் வாங்கி, விக்கறது” என்று பதில் சொன்னான் ஜோஷி.

“ஒன்னோட குணத்துக்கு பிற்காலத்திலே நீயும் பெரிய்ய வைர வியாபாரியா வருவே. அப்போ… நீ, நேர்மையான வைர வியாபாரிங்கற பேரை வாங்கணும்! சரி… சரி! ஒன் ஆசைப்படியே கொஞ்ச நாள் மத்த பசங்களாட்டம் கூட இருந்து பணிவிடை பண்ணிட்டுப் போ” பச்சைக் கொடிகாட்டிவிட்டுப் போனார், ஸ்வாமிகள்.

ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்யும் நான்கைந்து இளைஞர்களோடு ஜோஷியும் சேர்ந்தான். ஆச்சார்யாளை தரிசித்துக் கொண்டே இருப்பது; சொன்ன பணிவிடைகளைச் செய்வது என இரண்டு நாட்கள் நகர்ந்தன. அந்த இரண்டு நாட்களும் இரவில் ஆச்சார்யாள் படுத்த அந்த அறையிலேயே ஓர் ஓரமாக மற்ற பையன்களுடன் ஜோஷிக்கும் படுக்கை. இதைப் பரம பாக்கியமாகக் கருதினான் ஜோஷி.

மூன்றாம் நாள் இரவு. படுக்கப் போகுமுன் ஆச்சார்யாள், ஜோஷியை அருகே வரச் சொன்னார். ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தான். “பாலகிருஷ்ண ஜோஷி… நீ இனிமே ஒரு கார்யம் பண்ணி ஆகணும்! பகல் பூரா எங்கூட இருந்து மத்தவா மாதிரி பணிவிடை பண்ணு. ராத்ரி வேளைலே மாத்திரம் நீ இங்க படுத்துக்க வேண்டாம்” என்று சொல்லி முடிப்பதற்குள், ஜோஷி பதற்றத்துடன், “பெரியவா அப்படி ஒரு உத்தரவு போடப்படாதுன்னு பிரார்த்திக்கிறேன். நானும் மத்தவா மாதிரி நீங்க இருக்கற இந்த ரூம்லேயே படுத்துக்கறேன். கிருபை பண்ணணும்” என்று கண்களில் நீர் மல்கக் கெஞ்சினான்.

ஸ்வாமிகள், “நான் காரணமாத்தான் சொல்றேன். நீ கேக்கணும்” என்று குரலில் சற்றுக் கடுமை காட்டினார்.ஜோஷி, “சரி பெரியவா, நீங்க சொல்றபடியே செய்யறேன்” என்று சமாளித்துக் கொண்டு பேசினான்.உடனே பெரியவா சிரித்துக் கொண்டே, “அப்டிச் சொல்லு. ராத்திரி நேரா சமையல் கட்டுக்குப் போ. அங்கே பெரிய கோட்டை அடுப்புக்குப் பக்கத்தில் ஒரு மர பெஞ்சு கெடக்கும். அதுலே சௌக்யமா படுத்துத் தூங்கு. விடியகாலம் எழுந்து பல் தேச்சு, ஸ்நானம் பண்ணிட்டு இங்க கைங்கர்யத்துக்கு வந்துடு… என்ன புரியறதா?” என கறாராகக் கட்டளையிட்டார் ஸ்வாமிகள்.

ஜோஷியால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. கண்களின் நீரைத் துடைத்துக் கொண்டு, “நீங்க சொன்னபடியே பண்றேன் பெரியவா” என்று நகர்ந்தான். மற்ற பையன்களெல்லாம் இதை வேடிக்கை பார்த்தனர். ‘தன்னை மட்டும் பெரியவா ஏன் கோட்டை அடுப்பங்கரையில் போய்ப் படுக்கச் சொன்னார்?’ என்ற கேள்விக்கு அவனால் விடை காண முடியவில்லை.ஜோஷி வெளியே வந்ததும், மகா ஸ்வாமிகளுக்குக் கைங்கர்யம் பண்ணும் ஓர் இளைஞன் எதிர்ப்பட்டான். அவனை அழைத்த ஜோஷி, “ஏம்ப்பா! உங்கள்ல யாரையாவது பெரியவா இதுவரைக்கும் ராத்திரியிலே கோட்டை அடுப்பங்கரையிலே போய்ப் படுத்துத் தூங்கச் சொல்லியிருக்காளா” என்று ஆர்வமுடன் கேட்டான்.

உடனே அந்த இளைஞன் முகத்தைச் சுளித்தவாறு, “சேச்சே! எங்க யாரையும் பெரியவா இதுவரை அப்படிச் சொன்னதே இல்லை” என நகர்ந்தான்.ஜோஷிக்கு அவமானமாக இருந்தது. அப்போது இரவு பத்து மணி. கேவிக்கேவி அழுதுகொண்டே வெறிச்சோடிக் கிடந்த சமையலறைக்குள் நுழைந்து, பெரியவா சொன்னபடி கோட்டை அடுப்பருகே கிடந்த மர பெஞ்சில் படுத்தான். இரவு ஒன்றும் சாப்பிடவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. நெடுநேரம் கழித்துக் கண்ணயர்ந்தான். பொழுது புலர்ந்தது. மடம் விழித்துக் கொண்டது. மடத்துக்கே உரிய வேத பாராயணங்களும், பஜனைப் பாடல்களும் இதமாகக் காற்றில் மிதந்து வந்தன.

ஜோஷி விழித்துக் கொண்டான். பல் துலக்கி, ஸ்நானம் பண்ணிவிட்டு, நேராக் காமாட்சி அம்மன் கோயில் சந்நதியில் போய் உட்கார்ந்து விட்டான். பெரியவா கைங்கர்யத்துக்குப் போக வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவில்லை.மதியம் மடத்துக்கு வந்தான். சாப்பிட்டான். மீண்டும் மாலை காமாட்சி அம்மன் சந்நதி. இரவு பத்து மணிக்கு மடத்து சமையல்கட்டில், கோட்டை அடுப்பு பெஞ்சில் படுக்கை. பெரியவாளிடமே போகவில்லை.

இப்படி இரண்டு நாட்கள் நகர்ந்தன. மூன்றாம் நாள் காலை. மகா ஸ்வாமிகள், தனக்குப் பணிவிடை செய்யும் இளைஞன் ஒருவனை அருகில் அழைத்தார். அவனிடம் கவலையோடு “ஏண்டாப்பா! ரெண்டு நாளைக்கு முன்னாடி பாலகிருஷ்ண ஜோஷினு ஒரு பையன் சேவை பண்ண வந்தானே… அவனைக் காணலிலே! எங்க போய்ட்டான்? ஒரு வேளை, சொல்லிக்காம மெட்ராஸுக்குப் போயிட்டானோ?” என்று வினவினார்.

உடனே அந்த இளைஞன் தயங்கியபடி, “இல்லே பெரியவா. மடத்துலதான இருக்கான்” என்றான்.

“பின்னே, ரெண்டு நாளா ஏன் இங்கே வரலே?”

“தெரியலியே பெரியவா…”அதற்குள் மற்றொரு பையன் அங்கு வரவே, அவனை அருகில் அழைத்த பெரியவா, “ஏண்டா, நோக்கு ஏதாவது தெரியுமோ? அந்த குஜராத்திப் பையன் ரெண்டு நாளா ஏன் இந்தப் பக்கமே வரலே?”என்றார் ஆதங்கத்துடன்.“தெரியல பெரியவா” அவன் சொன்னான்.“சரி… சரி… அந்த ஜோஷியைப் பார்த்து நான் ஒடனே வரச் சொன்னதா தெரிவி…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் ஸ்வாமிகள்.மகா ஸ்வாமிகளுக்கு முன் வந்து கூனிக்குறுகி நின்றான் ஜோஷி.“வா கொழந்தே… எங்க ரெண்டு நாளா ஒன்னை இந்தப் பக்கமே காணலை? உடம்பு கிடம்பு சரி இல்லியோ?” அன்புடன்விசாரித்தார் பெரியவர். கைகூப்பி நின்ற ஜோஷியிடமிருந்து பதில் இல்லை.

“என்கிட்டே ஏதாவது வருத்தமோ… கோபமோ?” என்று முகத்தில் சந்தோஷம் தவழ குழந்தைத்தனமாக கேட்டார்ஸ்வாமிகள்.ஜோஷி மெதுவாக வாய் திறந்தான். “கோபமெல்லாம் இல்லே பெரியவா! மனசுக்குக் கொஞ்சம் வருத்தம்” என்று தட்டுத் தடுமாறிச் சொன்னான்.பெரியவா ஆச்சரியத்தோடு ஜோஷியைப் பார்த்து, “வருத்தமா… எம் பேர்லயா?” என்னு கேட்டார்.ஜோஷி பதில் கூறவில்லை. மௌனம் காத்தான்.பெரியவா விடவில்லை. மௌனம்காத்தான்.பெரியவா விடவில்லை. “ெசால்லு… சொல்லு… உன் வருத்தத்தை நானும் தெரிஞ்சுக்கணுமோல்லியோ…” என்று உற்சாகப்படுத்தினார். மற்ற பையன்கள் அனைவரும் கைகட்டி நின்றிருந்தனர்.

பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு ஜோஷி வாய் பொத்திப் பேச ஆரம்பித்தான், “வேற ஒண்ணுமில்லே பெரியவா! மொதல் ரெண்டு நாள், என்னையும் ராத்ரியிலே மத்த பையன்களோடு இங்கேயே படுத்துக்கச் சொல்லி உத்தரவு பண்ணேன். சந்தோஷமா படுத்துண்டேன். திடீர்னு முந்தா நாள் ராத்திரி கூப்பிட்டு, ‘கோட்டை அடுப்புக்குப் பக்கத்திலே பெஞ்சுலே போய்ப் படுத்துக்கோ’ன்னு உத்தரவு பண்ணிட்டேள். நான் இவாள மாதிரி இந்தப் பக்கத்து பிராமணனா இல்லாம குஜராத்தி பிராமணனா இருக்கறதாலே என்னை அங்கே போய்ப் படுத்துக்கச் சொல்லிட்டேளோன்னு எம் மனசுக்குக் கஷ்டமாயிடுத்து. அதனாலதான் ரெண்டு நாளா இங்கே வரலை. என்னை மன்னிச்சுடுங்கோ பெரியவா…” கதறி அழுதபடியே பெரியவாளின் கால்களில்விழுந்தான் ஜோஷி.

நிலைமையைப் புரிந்து கொண்டார் ஸ்வாமிகள். சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை. அங்கு அமைதி நிலவியது. பிறகு, அங்கு நின்று கொண்டிருந்த பற்ற பையன்களை சற்று வெளியே போகச் சொன்னார் ஸ்வாமிகள். ஜோஷியை அருகில் அழைத்தார். பரம வாத்சல்யத்துடன், “அடாடா… பாலகிருஷ்ணா… நான் ஒன்னை கோட்டை அடுப்புகிட்டே பெஞ்சிலே படுத்துத் தூங்கச் சொன்னதுக்கு, நீ இப்டி அர்த்தம் பண்ணிண்டுட்டியா? அடப்பாவமே… நான் அப்டி எல்லாம் நெனச்சுண்டு அதைச் சொல்லலேப்பா. சின்னப் பையன்… தப்பா புரிஞ்சுண்டிட்டியே” என்று கூறிவிட்டு, ஜோஷியைக் கீழே உட்காரச் சொன்னார் பெரியவா. தயங்கியபடியே அமர்ந்தான்.

உடனே பெரியவா கருணை ததும்பும் குரலில், “ஒன்னை மட்டும் சமையலறை கோட்டை அடுப்புகிட்டே மர பெஞ்சுலே படுத்துக்கச் சொன்னதுக்கு, நீ மனசுலே போட்டு வச்சுண்டு இப்போ வெளிப்படுத்தினியே… அந்த விசேஷ காரணமெல்லாம் இல்லவே இல்லேடா ஜோஷி. அதுக்கு ஒரே ஒரு காரணம்தான்… இதோ பார்றா ஜோஷி!” என்று தான் இடையில்அணிந்திருந்த வஸ்திரத்தைத் தொடை வரை நகர்த்திக் காண்பித்தார் ஸ்வாமிகள். ஆச்சார்யாளின் சிவந்த தொடைகளில் அடை அடையாகக் கொசு கடித்த தழும்புகள்!

“கொழந்தே ஜோஷி! இதெல்லாம் என்னன்னு தெரியறதா நோக்கு? ராத்ரி வேளையிலே கொசு கடிச்ச தழும்புகள். நான் ஒரு ஸந்யாஸி. இதைப் பொறுத்துண்டு இருந்துடுவேன். நீ கொழந்தை. ரொம்பவும் கஷ்டப்படுவே. ரெண்டு நாள் ராத்ரி நீ கொசுக்கடியிலே ரொம்பவும் சிரமப்பட்டதைப் பார்த்தேன். என்னாட்டம் நோக்கும் சிகப்பு ஒடம்பு. அவஸ்தைப்படாமல் நீயாவது சௌக்யமா தூங்கட்டுமேனுதான் பத்ரமான எடத்துக்கு ஒன்னைப் போகச் சொன்னேன்.

கோட்டை அடுப்புக்குப் பக்கத்தில் அந்த பெஞ்சு கெடக்கிறதாலே, அடுப்பு உஷ்ணத்தில் அங்கே கொசுவே வராது! நன்னா தூங்குவே! அதனாலேதான் அப்டிச் சொன்னேன். நீ என்னடான்னா வேற விதமான… விபரீதமா நெனச்சுண்டிட்டியே” என்று பெரியவா சிரித்துக் கொண்டே சொன்னதுதான் தாமதம், ‘ஹோ’வென்று கதறியழ ஆரம்பித்துவிட்டான் ஜோஷி.

“பெரியவா… என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கோ! ஒங்க கருணையைப் புரிஞ்சுக்காம நான் ஏதேதோ உளறிட்டேன்” என விம்மினான் ஜோஷி. அந்தக் காருண்ய மூர்த்தி சிரித்துக் கொண்டு இருந்தது. தன் கைகளை உயர்த்தி பூர்ணமாக பாலகிருஷ்ண ஜோஷியை ஆசீர்வதித்தது அந்த தெய்வம்.“ஜோஷி, பிற்காலத்தில் நீயும் ஒரு சிறந்த வைர வியாபாரியா விளங்குவே. ஞாயமான விலைக்கு வித்து நல்லபடியா வியாபாரம் பண்ணு” என்று மனப்பூர்வமாகஆசீர்வாதம் பண்ணினார் மகா ஸ்வாமிகள்.

பிற்காலத்தில் ஸ்வாமிகள் வாக்குப்படியே நியாயம், தர்மம் வழுவாத பெரிய வைர வியாபாரியாக விளங்கினார் பாலகிருஷ்ண ஜோஷி! (சமாதி) காலம் வரையிலும் அவரது பூரண அன்புக்குப் பாத்திரமாக விளங்கினார். சில வருஷங்கள் கழித்து ஜோஷியும் இறைவனடி சேர்ந்தார்.

ரமணி அண்ணா

Related Stories: