திருக்குறள் சொல்லும் பாவங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குறளின் குரல்

திருக்குறள் அறத்தை வலியுறுத்தும் ஒரு நீதி நூல். எனவே பாவ புண்ணியங்களைப் பற்றி அது பேசுவது இயல்பு. பாவம் என்ற சொல்லை ஓர் இடத்திலும், பாவி என்ற சொல்லை இரண்டு இடங்களிலும், அது வெளிப்படையாகவே எடுத்தாள்கிறது. பிறன் மனைவிமேல் இச்சை கொள்பவனை விட்டுப் பாவம் விலகவே விலகாது என்கிறது திருக்குறள். பொறாமை என்ற உணர்வையும், வறுமை என்ற நிலையையும், பாவி என்னும் சொல்லால் அது குறிக்கிறது.

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்

(குறள் எண் 146)

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து நடப்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலக மாட்டா.

இன்மை என ஒரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்

(குறள் எண் 1042)

வறுமை என்று சொல்லப்படும் ஒரு பாவி, ஒருவனை நெருங்கினால் அவனுக்கு இம்மையின்பம் மறுமையின்பம் என்னும் இரண்டுமே இல்லாமல் போகும்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும்

(குறள் எண் 168)

பொறாமை என்கிற பாவி, ஒருவனின் செல்வ வளத்தைக் கெடுத்து அவனைத் தீயவழியில் செலுத்திவிடும். மனிதர்களை நல்வழிப் படுத்தவென்றே எழுந்தவை நமது இதிகாசங்களும் புராணங்களும். பாவம் செய்வதை விடுத்து, தவத்திலேயே தங்கள் வாழ்வைக் கழித்த வால்மீகி, வியாசர் என்ற இரு முனிவர்கள்தான் முறையே ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எழுதியவர்கள். பாவங்களைப் பற்றியும் அவற்றைச் செய்யாதிருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் அவர்கள் எழுதிய அந்த இரு இதிகாசங்களும் நிறையப் பேசுகின்றன. பாவமே செய்யாத சத்தியசீலனாக ராமனையும், பிறன்மனை நயத்தல் என்ற பாவத்தைப் புரிந்தவனாக ராவணனையும் ராமாயணம் சித்திரிக்கிறது.

அதுபோலவே, பாவமே செய்யாத யுதிஷ்டிரனையும், பாவத்தை அன்றி வேறெதுவும் செய்யாத துரியோதனனையும் மகாபாரதம் சித்திரிக்கிறது. மனிதர்களுக்கு அறநெறிமேல் பற்று வந்து, அவர்கள் பாவம்புரியாத நல்லவர்களாக மாறவேண்டும் என்பதே இரண்டு இதிகாசங்களின் நோக்கம். புனிதநதிகளில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. பாவத்தைத் தொலைக்கும் நதிகளில் புகழ்பெற்று விளங்குவது கங்கைநதி.

கங்கை எல்லோர் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு தன்னில் நீராடியவர்களைச் சுத்தமாக்குகிறது. அந்த வகையில், கங்கையில் நிறையப் பாவங்கள் சேருமே? கங்கையில் சேரும் பாவங்களை, கங்கை எப்படிப் போக்கிக்கொள்வாள்? என்ற கேள்வி எழுகிறதல்லவா.. அந்தக் கேள்விக்குக் கம்பராமாயணம் பதில் சொல்கிறது. கடவுளேயான ராமபிரான் கங்கையில் குளித்தபோது, ராமன் குளித்ததால் தன் பாவங்கள் போயிற்று என்று மகிழ்கிறாளாம் கங்கை.

கன்னி நீக்கருங் கங்கையும் கைதொழா

பன்னி நீக்கரும் பாதகம் பாருளோர்

என்னின் நீக்குவர் யானும் இன்று என்தந்த

உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான்என்றாள்

ஆனால், பாவங்கள் தொலைய வேண்டுமானால் புறத்தூய்மை மட்டும் போதுமா? அகத் தூய்மையும் தேவையல்லவா?

புனித நதிகளில் நீராடி பாவத்தைத் தொலைக்கப் புறப்பட்டான் ஒரு சீடன். தன் நோக்கத்தைச் சொல்லி, குருவிடம் விடைபெற வந்தான். அவனிடம் அன்போடு ஒரு பாகற்காயைக் கொடுத்தார் குரு. அவன் நீராடும் நதிகளிலெல்லாம் அந்தப் பாகற்காயையும் நீராட்டி அவன் திரும்பி வரும்போது பத்திரமாக உடன் எடுத்துவரச் சொன்னார்.சீடன், குருவின் கட்டளையைச் சிரமேற்கொண்டு அப்படியே செய்தான். யாத்திரை முடிந்து திரும்பி வந்து, பாகற்காயை குருவிடம் தந்து அவரை வணங்கினான். நீராட்டி எடுத்துவந்த பாகற்காயைக் கடித்துப் பார்க்குமாறு, குரு சீடனுக்கு அறிவுறுத்தினார். சீடன் கடித்துப் பார்த்தான். பாகற்காய் கசந்து வழிந்தது. அதன் கசப்பு ஒருசிறிதும் போகவில்லை.

அதைப் பார்த்து நகைத்த குரு, சீடனிடம் சொன்னார்;‘புனித நதிகளில் நீராடியதால் பாகற்காயின் கசப்பு எப்படிப் போகவில்லையோ, அப்படித்தான் புனித நதிகளில் நீராடுவதால் மட்டுமே பாவங்கள் போய்விடாது. கூடவே மனத்தைத் தூய சிந்தனைகளால் நீராட்டவும் வேண்டும்! பாவம் போக வேண்டுமானால் புறத்தூய்மையோடு அகத்தூய்மையும் முக்கியம்!’

இதைத்தான் நம் வள்ளுவமும்

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையான் காணப் படும்

(குறள் எண்: 298)

- என்கிறது

‘கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்

கொங்கு தண்கும ரித்துறை ஆடிலென்

ஒங்கு மாகடல் ஓத நீராடிலென்

எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே!’

 - என்பது அப்பர் பாடல்.

‘எங்கும் ஈசன் இருப்பதை உணராதோர் புனித நதிகளில் நீராடுவதால் மட்டும் என்ன பயனை அடைவார்கள்?’ என்பது அப்பர் எழுப்பும் வினா. ‘கங்கை புனிதமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கங்கையில் நீந்தும் மீன் சொர்க்கத்திற்குப் போவதில்லை!’ என்கிறார் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். இது சிந்தனைக்குரியது. கங்கையில் வாழும் தவளை, முதலை, மீன்கள் எல்லாம் சொர்க்கத்திற்குப் போகாத காரணம் என்ன? அவற்றின் மனம் அத்தகைய சிந்தனைகளில் ஈடுபடவில்லை. அவற்றின் லட்சியம் அதுவல்ல.

எத்தனை புனித நீர்நிலைகளுக்குச் சென்று நீராடினாலும் மனம், மொழி, மெய் மூன்றிலும் இறைவனை அடையும் நாட்டம் நிறைந்திருந்தால்தான் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும். எனவே, புறத்தூய்மையோடு அகத்தூய்மையும் மிகமிக முக்கியம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ஆலத்தூர் கிழார் பாடிய பாடலொன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. அதில் சில கொடிய பாவங்கள் பட்டியலிடப் படுகின்றன.

‘ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்

மாண்இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்

குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என

நிலம் புடைபெயர்வது ஆயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என

அறம் பாடிற்றே ஆயிழை கணவ...’

பசுவின் முலையரிதல், மகளிர் கருச் சிதைத்தல், பெரியோர்க்குக் கொடுமை செய்தல் போன்ற பாவங்களுக்கெல்லாம் கழுவாய் உண்டு. ஆனால், செய்ந்நன்றி கொன்ற பாவத்திற்குக் கழுவாயே இல்லை என்கிறது இந்தப் பாடல்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு

(குறள் எண் 110)

என்ற திருக்குறள் கருத்தையே இந்தப் புறநானூற்றுப் பாடலும் பேசுகிறது. பாவங்கள் தொலைய மிக எளிய வழியொன்றைச் சொல்கிறார் மகான் கபீர்தாசர். `ராம்.. ராம்..’’ என்று தொடர்ந்து ஜபித்தால் பாவங்கள் அகலும் என்கிறார். அதை மேலும் விளக்குகிறார் அவர். ‘ரா என்று சொல்லும்போது பாவங்கள் வாய் வழியே வெளியே போய்விடும். வெளியே போன பாவங்கள் மீண்டும் உள்ளே வராமலிருக்க ம் என்று சொல்லி வாயை மூடிக் கொள்ள வேண்டும்! அதுவே ராம நாம ஜபம்!’முக்கியமான பாவங்கள் நான்கு என வகைப்படுத்துகிறார் குதம்பைச் சித்தர்.

‘கோபம் பொறாமை

கொடுஞ்சொல் வன் கோளிவை

பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய்

பாபத்துக்கு ஏதுவடி!’

சினம், பொறாமை, கடுமையாகப் பேசுவது, கோள் சொல்லல் ஆகிய நான்கும் பாவம் தோன்றக் காரணமாகும் என எச்சரிக்கிறது இப்பாடல்.

‘பாபஞ் செய்யாதிரு மனமே - நாளை

கோபஞ் செய்தே எமன் கொண்டோடிப் போவான்

பாபஞ் செய்யாதிரு மனமே!’

- என்பது கடுவெளிச் சித்தர் பாடல்.

அகத்திய சித்தரும் பாவங்கள் பலவற்றைப் பற்றிப் பேசுகிறார்;

காணவே இன்னமொரு சூட்சங் கேளு

கருணையுடன் உலகத்தோடிருக்கும் போது

பூணவே கண்ணாரக் கண்ட பாவம்,

புத்தியுடன் மனதாரச் செய்த பாவம்,

பேணவே காதாரக் கேட்ட பாவம்,

பெண்வதைகள் கோவதைகள் செய்த பாவம்,

ஊணவே பலஉயிரைக் கொன்ற பாவம்,

ஒருகோடி பாவமெலாம் ஒழியக் கேளாய்!’

எனச் சொல்லி, உலகத்தாரிடம் கருணையோடிருந்தால், எல்லாப் பாவமும் ஓடிப் போய்விடும் என்கிறார் அவர். மகாகவி பாரதியார், தாம் எழுதிய ‘விநாயகர் நான்மணி மாலை’யில் திரும்பத் திரும்பத் துயரில் வீழும் தம் நெஞ்சைப் ‘பாவி நெஞ்சே!’ என அழைத்து, ‘பிள்ளையார் அருளால் உனக்கு நான் அபயமளித்தேன்’ எனச் சொல்லி அறிவுரை வழங்குகிறார்.

‘மேவி மேவித் துயரில் வீழ்வாய்

எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்

பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை

இன்புறச் செய்வேன் எதற்குமினி யஞ்சேல்

ஐயன் பிள்ளையார் அருளால் உனக்குநான்

அபயமிங் களித்தேன்...’

தாம் எழுதிய முப்பெரும் பாடல்களில் ஒன்றான பாஞ்சாலி சபதத்தில், பாஞ்சாலி சபதமிடும் இறுதிக் கட்டத்தில், துச்சாதனனைப் பாவி என்கிறார் அவர்.

தேவி திரெளபதி சொல்வாள் - ‘ஓம்

தேவி பராசக்தி ஆணையுரைத்தேன்

பாவி துச்சாதனன் செந்நீர் - அந்தப்

பாழ்த் துரியோதனன் யாக்கை ரத்தம்

மேவி இரண்டும் கலந்தே - குழல்

மீதினில் பூசி நறுநெய் குளித்தே

சீவிக் குழல் முடிப்பேன் யான் - அது

செய்யுமுன்னே முடியேன்’

என்றுரைத்தாள்!

தன் காதலன் கண்ணன்மேல் கோபம் கொண்டு சிணுங்கும் தலைவி, தோழியைக் கண்ணனிடம் தூதனுப்புவதாக பாரதியாரின் கண்ணன் பாட்டில் ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் கண்ணனைப் பாவி எனச் செல்லமாகத் திட்டுகிறாள் தலைவி.

‘கண்ணன் மனநிலையைத் தங்கமே

தங்கம் நீ

கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் ...

நேர முழுதிலும் அப் பாவி தன்னையே நெஞ்சம்

நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்!

தீர ஒரு சொல்லின்று கேட்டு வந்திட்டால் பின்னர்

தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம்!’

திரைத்துறையும் பாவங்களைப்பற்றிப் பேசுகிறது. பாவமன்னிப்பு, ஆண்பாவம் என்றெல்லாம் பாவங்களைத் தலைப்பிலேயே கொண்ட திரைப்படங்கள் சில வந்துள்ளன. திரைப் பாடல்களிலும் பாவங்கள் பற்றிய சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன.‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி வாணிஜெயராம் குரலில் ஒலிக்கும் புகழ்பெற்ற பாடல், ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ என்பது. அதில் வரும் வரிகள் ‘தொடர்ந்து வாழ்ந்தால் பாவம் தானே மறையும்’ என்கிறது. மனித வாழ்க்கை என்பதே நம் முந்தைய பாவங்களைக் கழிப்பதற்கான தண்டனைதான் என்றும் ஒரு கருத்துண்டு.

‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம், வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்....

ஆரம்பத்தில் பிறப்பும் உன்கையில் இல்லை, அதன்

அடுத்தடுத்த நடப்பும் உன்கையில் இல்லை!

பாதை வகுத்தபின்பு பயந்தென்ன லாபம், அதில்

பயணம் நடத்திவிடு, மறைந்திடும் பாவம்!’

தீய செயல் அல்ல, தீய செயல் பற்றிய சிந்தனையே கூடப் பாவம்தான் என்கிறார் மகாத்மா காந்தி. அவரது சுயசரிதையான சத்திய சோதனையில், ஒரு தீய நண்பனின் சேர்க்கையால் தாசி ஒருத்தியின் இல்லத்திற்குத் தான் போனதையும், ஆனால் எந்தச் செயலிலும் ஈடுபடாமல் தப்பி வந்துவிட்டதையும் குறிப்பிடுகிறார். எனினும் அவ்விதம் தம் மனத்தில் எண்ணம் எழுந்ததே பாவச் செயல் புரிந்ததற்குச் சமமானதுதான் எனவும் எழுதுகிறார்.

எண்ணம் என்பது செயலின் குழந்தைப் பருவம் என்றும், எண்ணமே வளர்ந்து செயலாக மாறுகிறது என்றும், அதனால் எண்ணத்தில் கவனம் தேவை என்றும் கூறுகிறார் சுவாமி சிவானந்தர். பாவம் செய்தலைத் தவிர்த்து வாழ்தலே நம் ஆன்மிகத்தின் நோக்கம். எண்ணத்தாலும் பாவ சிந்தனைகளைத் தவிர்க்கப் பழகிவிட்டால் பாவச் செயல்களில் ஈடுபட வாய்ப்பே இல்லை. அவரவரும் தங்கள் எண்ணங்களைக் கண்காணிப்பதே பாவத்தைத் தவிர்க்கும் வழி.  

இதுவே பாவச் செயல்களைத் தவிர்க்கும் சூட்சுமம். இதையே ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்’ என அழகாக விளக்குகிறது வள்ளுவம். வள்ளுவச் சிந்தனைகளை மனத்தில் சிந்திக்கச் சிந்திக்க பாவம், தானே அகலும் என்பதில் சந்தேகமில்லை.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Related Stories: