தெய்வங்கள் அருளும் ஆலயம்

சென்னை சேலையூர் - ஸ்கந்தாஸ்ரமம்

புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர் ஸ்வயம்பிரகாசர். அவரது சீடர் சாந்தானந்த சுவாமிகள். அவரால் ஸ்தாபிக்கப்பட்ட தலங்கள் ஸ்கந்தாஸ்ரமம் என பெயர் பெற்றன. சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தைத் தொடர்ந்து அவரால் எழுப்பப்பட்ட ஸ்கந்தாஸ்ரமம் எனும் அற்புத ஆலயம் சென்னை, சேலையூரில் உள்ளது. 2002ம் வருடம் மே 27ம் தேதி இவர் மகா சமாதி அடைந்தார். பிரமாண்ட முறையில் கண்களைக் கவரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்கும் இறை உருவங்களை இத்தலத்தில் தரிசிக்கலாம்.

ஆலயத்தில் நுழைந்ததும் பஞ்சமுக ஹேரம்ப கணபதியை தரிசிக்கலாம். ஐந்து யானை முகங்களோடு, அபயம், வரதம், பாசம், தந்தம், ருத்ராட்சமாலை, அங்குசம், பரசு, உலக்கை, கொழுக்கட்டை, பழம் ஆகியவற்றைத் தன் பத்து கரங்களில் ஏந்தி அற்புத கோலத்தில் அருள்புரிகிறார். ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி தினத்தன்றும் இந்த கணபதிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இவரை வலம் வரும்போது கோஷ்டத்தில் பாலகணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி ஆகியோரின் சுதை உருவங்களையும் தரிசிக்கலாம்.

கருவறையில் 6 அடி உயரத்தில் அன்பே வடிவாய், அழகே உருவாய் பாசம், அங்குசம், அபய கரங்கள் தாங்கி புவனேஸ்வரி அருள்கிறாள். செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, ஆடிவெள்ளி, தைவெள்ளி, சாரதா நவராத்திரி தினங்களில் அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. தேவியை வழிபடுபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும். அன்னைக்கு வலப்புறம் கமலசித்தி விநாயகரின் ஆலயமும், இடப்புறம் சாந்தானந்தரின் சந்நதியும் உள்ளது.

புவனேஸ்வரி தேவியின் சந்நதிமுன் பூரண மஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ‘ஸுமேருமத்ய ஸ்ருங்கஸ்தா மன்நகரநாயிகா’ என மஹாமேருவை லலிதா ஸஹஸ்ரநாமம் போற்றுகிறது. தேவியை மேருவில் ஆவாஹனம் செய்து பூஜித்தால் அம்பிகையின் அருளால் சகல தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம். பஞ்சமி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி, அமாவாசை, ஆடிவெள்ளி, தைவெள்ளி, சாரதா நவராத்திரி காலங்களில் இந்த மேருவிற்கு நவாவரண பூஜைகள் செய்யப்படுகிறது.

தேவிக்கு வலப்புறம் உள்ள சந்நதியில் சரபேஸ்வரர் அருள்கிறார். நாராயணன் நரசிம்மமூர்த்தி அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை கொன்ற போது அவரது ஆரவாரத்தால்  உலகம் அழிந்து விடுமோ என அனைவரும் அதிர்ந்தபோது ஈசன், சரபேஸ்வர அவதாரம் எடுத்து தன் இரு கைகளாலும் நரசிம்மரை கட்டி அணைத்து அவர் சினம் தனித்து இந்த உலகை காத்ததாக காஞ்சிபுராணம் கூறுகிறது.

பட்சிகளின் அரசனாக ‘ஸாலுவேசன்’ எனும் திருநாமமும் இவருக்கு உண்டு. தீராத இன்னல் தீர இவரிடம் சரணடைபவர்களுக்கு அபய மளிப்பவர் சரபமூர்த்தி என வேதங்கள் போற்றுகின்றன. இயற்கை, மிருகங்கள் மற்றும் பஞ்சபூதங்களால் வரும் ஆபத்து போன்றவற்றிலிருந்து சரபேஸ்வரர் காப்பார் என அதர்வண வேத மந்திரம் குறிப்பிடுகிறது. பிரதோஷ  வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையிலும் இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில்  அறுபடை வீடுகள் கொண்டு அருளாட்சி செய்துவரும் முருகனை, பத்தடி உயரத்தில் எழில் கொஞ்சும் திருவடிவில் இத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் புவனேஸ்வரி தேவியின் சந்நதி இவருக்கு நேர் எதிர் அமைந்துள்ளது. தாயின் பார்வையில் எப்போதும் இருப்பதால் இந்த முருகப்பெருமான் கருணையின் வடிவாகவே அருட்காட்சியளிக்கிறார். இவரது பிராகார சுற்றுச் சுவர்களில் அறுபடை வீட்டு முருகப்பெருமான்களும், கதிர்காம முருகனும், பாலமுருகனும் சுதை வடிவில் அருள்கின்றனர்.

ஞானமும், செல்வமும் வேண்டும் பக்தர்கள் மேற்கு பார்த்த சுவாமிநாதப் பெருமானை வணங்கி வளம் பெறலாம். கந்த சஷ்டி விரதத்தையொட்டி, ஆறு நாட்களிலும் வித விதமான அலங்காரங்களில் ஜொலிப்பார். கிருத்திகை தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகின்றன.

அடுத்த சந்நதியில் ப்ரத்யங்கிரா தேவி சூலம், பாசம், டமருகம், கபாலம் ஆகியவற்றைத் தன் கைகளில் ஏந்தி அருள்கிறாள், சிங்கத்தின் மீது அமர்ந்த திருக்கோலம். இந்திரஜித் ராம- லட்சுமணரை வெல்ல ப்ரத்யங்கிரா தேவியைக் குறித்து நிகும்பலா யாகம் செய்தான். அந்த யாகம் நிறைவு பெற்றால் அவனை யாராலும்  அழிக்க முடியாது என்பதற்காக லட்சுமணன் அவனை அழித்ததாக புராணங்கள் பகர்கின்றன. நடுவில் மகாமேரு, நான்கு புறங்களிலும் புவனேஸ்வரி, ஸ்வாமி நாதன், சரபேஸ்வரர், ப்ரத்யங்கிரா சந்நதி  இந்த அமைப்பு வேறெங்கும் காணக்கிடைக்காது.

தொகுப்பு : மகி

Related Stories: