யோகம் உணர்த்தும் குத்துவிளக்கு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தாமரையைக் கலைஞர்களும், கவிஞர்களும், சிற்பிகளும், தத்துவஞானிகளும் திருவிளக்கைப் போற்றுகிறார்கள். ‘‘மங்களகரமான குத்துவிளக்கில், மாபெரும் தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. அதன் அடிப்பாகமாகிய தாமரைபோன்ற ஆசனம் (பாதம்) பிரம்மாவாகவும் அதன் நெடிய தண்டானது திருமால் ஆகவும், நெய் ஏந்தும் அகல் ருத்ரனாகவும், திரிமுகைகள் மகேஸ்வரனாகவும், எல்லாவற்றிற்கும் சிகரமாக உள்ள நுனிப் பாகம் சதாசிவனாகவும், நெய்யானது நாதமாகவும், திரி - பிந்துவாகவும், சுடர் - திருமகளாகவும், தீப் பிழம்பு - கலைமகளாகவும், சங்காரஞ் செய்யும் வல்லமையான தீ - சக்தியாகவும், ஈற்றில் பஞ்சேந்திரியங்களை நடத்தும் பரப் பிரம்மாவாகவும் விளங்குகின்றன.

நமது சமயத் தத்துவங்கள் அனைத்தும் ஒரே விளக்கில் காணும் படியாக நமது முன்னோர்கள் அமைத்திருப்பது மிகப் பெரிய அற்புதமேயாகும்.   ‘குத்துவிளக்கு மனித உடலைக் காட்டுகிறது. எப்படி? பருவம் வரப்பெற்ற ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் நாபியிலிருந்து மேல் நோக்கிக் கொடிபோல ஒரு ரேகை ஓடும். இதை அவரவர்களே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நாளாக நாளாக இந்தக் கோடு நன்றாகப் பதியும். யோகம் கைவரப்பெற்றவர்களுக்கு, மூலாதாரத்திலிருந்து குண்டலினியை எழுப்பி நெற்றியிலே புருவ மத்தியிலிருக்கும் இடத்திலேயே, ஜோதிப் பிழம்பாகக் காட்டுவார்கள். அந்த ஜோதிப் பிழம்பு, குத்து விளக்கு எரிவது போல் இருக்கும்.

மனிதனின் இடுப்புக்குக் கீழுள்ள பாகமே குத்துவிளக்கின் பாதம். இடுப்பிலிருந்து மேல் நோக்கி ஓடும் ரேகைக்கொடியே குத்து விளக்குத்தண்டு. கழுத்துக்கு மேற்பட்ட நமது தலையே குத்துவிளக்கின் தலை. புருவ மத்தியில் ஜோதி சொலிப்பதே குத்துவிளக்கு எரிவதாகும். ஆகவே, குத்துவிளக்கு ஏற்றுவதின் அர்த்தமென்ன? யோகியை வணங்குவது, ஆத்மஜோதியை வணங்குவது, இறைவனை வணங்குவது, ஞானம் கைவர வேண்டுவது என்று கூறுகிறார்.

ஆண்களுக்கெல்லாம் எட்டாத இந்தக் குத்துவிளக்கின் தத்துவத்தைப் பெண்கள் அறிந்திருப்பதனால், அவர்கள் திருவிளக்குப் பூஜையைத் தங்களுக்கே சொந்தமானதாகத் தனிஉரிமை கொண்டாடுகிறார்கள் போலும். அதுமட்டுமின்றி அவர்கள் குடும்ப விளக்காகவும், இல்லற விளக்காகவும், இருப்பதால் தங்களின் இனமாகிய குத்துவிளக்கைப் போற்றுகிறார்கள் போலும். மேலும், அவர்கள் குடும்பப் பெண்ணுக்கு இருக்க வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை ஆகிய ஐந்து குணங்களையும் குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் நினைவுபடுத்துவதாக நம்புகிறார்கள்.

விளக்கின் அகலில் காணும் எண்ணெய்க்குழியே குடும்பப் பெண்ணின் ஆழ்ந்த உள்ளம். அதிலிருந்து ஊட்டப்பெறும் ஐந்து ஒளியைப் போல், குடும்பப் பெண்ணின் ஐந்து குணங்களும் ஒன்று கூடி ஒளிரும்போது இல்லம், இன்ப ஒளி வீசி நலம் பல பொங்கிப் பிரகாசிக்கிறது. பெண், குத்துவிளக்கின் மூலம் பெற்ற ஞானத்தில், குடும்ப விளக்காக ஒளிர்கிறாள். ‘இல்லக விளக்கது’ என்னும் பாராட்டுக்கு உரியவள் ஆகின்றாள்.இந்த இல்லக விளக்கினால், இல்லறம் நல்லறமாவதை உன்னித் தமிழ்மறையில், பொய்யாமொழியார்

‘‘இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை’’

 - என்றார்

ஒருவனுக்கு, இல்லாள், இல்லக விளக்காக நற்குண, நற்செயல்கள் உள்ளவளாக ஒளிர்ந்தால், அவனுக்கு இல்லாதது யாது? அவள் இல்லாவிட்டால் அவனுக்கு எது உண்டு? என்னும் கருத்துப்பட எடுத்துக்காட்டியுள்ளார்.

தொகுப்பு: நிர்மலா

Related Stories: