பாரெங்கும் ஒளிரும் கார்த்திகை தீபம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முத்துக்கள் முப்பது

திருவண்ணாமலை தீபம் நாள்: 6-12-2022

1. முன்னுரை

கார்த்திகைப் பெருவிழா என்றாலே கண்கள் நிறையும் தீபப்   பெருவெள்ளம் தான் நினைவுக்கு வரும். அகல் விளக்கின் ஒளியில் அகிலமே பிரகாசிக்கும். மண்ணில் நல்ல வண்ணம் வாழ, அகல் தீபம் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் சுடர்விடும் அதே நேரம், விண்ணில் சந்திர தீபம் ஒளிரும். நிறைமதி தினமல்லவா அன்று. அது சகல உயிர்களுக்குமான சத்திய தீபம் என்பார்கள். கார்த்திகை தீபம் ஏன்? என்ன பின்னணி? என்ன தத்துவம்? எப்படி ஏற்ற வேண்டும்? போன்ற பல்வேறு தகவல்களை முப்பது முத்துக்களாகக் காண்போம்.

2. ஆன்ம குறியீடு

பொதுவாகவே தீபம் என்பது மங்கலத்தைக் குறிக்கும். தீபம் ஏற்றாமல் நாம் எந்தக் காரியத்தையும் தொடங்குவதில்லை. கார்த்திகை மாதத்தில் தீபம் என்பது ஒரு அடையாளம் தானே தவிர, எல்லா நாள்களும் எல்லா மாதங்களும் நமக்கு திருக்கார்த்திகை தினம் தான். கார்த்திகை என்பது சுடர் ஒளி விஞ்சிய நட்சத்திரம்.  அந்த நட்சத்திரத்தில் சந்திரன் பிரகாசிக்கும் நிறைமதி நாள் தான் மாதத்தின் பெயராக அமைந்திருக்கிறது. ஜோதிடத்தில் கார்த்திகை என்பது சூரியனுக் குரிய நட்சத்திரம்.

சூரியன் தான் இந்த பூமியில் சுடர்விடும் ஒரே தீபம். அந்த தீபத்திலிருந்து தான் மற்ற தீபங்கள் (கிரகங்கள்)ஒளி பெறுகின்றன. அதிகாலை சூரியன் உதிப்பதை நாம் விடிந்து விட்டது என்கிறோம்.   நாளின் துவக்கம் என்கிறோம். எனவே சூரியனின் எழுச்சியை நினைவு கூறும் விழா தான் கார்த்திகை தீபம். அது ஒரு உன்னதமான ஆன்ம விடியலின் குறியீடு. உள் சுடரின் ஒளியீடு.

3. அக்னியே பரம்பொருள்

பரம்பொருள் அக்னி ரூபமாகவே இருக்கிறான். எங்கும் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். நம் ஆன்மாவில் ஒளிவிடும் ஜோதியாக இருக்கின்றான். அந்த ஜோதியை உணர்வதே ஞானம். உணர முடியாததே இருட்டு எனும் அஞ்ஞானம். அந்த இருட்டை மாய்த்து பரம்பொருளை உணர வைப்பதே தீபம். ஒரு தீபம் ஏற்றினால் அது எல்லா திசையிலும் ஒளி பரவி நிற்கும். பரம்பொருளும் அப்படித்தான். அவன் கருணையும், ஆற்றலும் எல்லாத் திசையிலும் பரவி நிற்கும்.

4. எப்போதும் மேன்மையான எண்ணங்கள்

நாம் தினசரி காலையிலும் மாலையிலும்வீட்டில் விளக்கு ஏற்றுகிறோம். ஒரு முக விளக்கோ ஐந்து முக விளக்கோ, சர விளக்கோ, குத்து விளக்கோ, எந்த விளக்காக இருந்தாலும், அதில் ஏற்றப்படும் தீபம் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை உணர்த்துகிறது. நீங்கள் கவனியுங்கள். எங்கே விளக்கேற்றினாலும், அதன் சுடர் மேல் நோக்கி மட்டுமே எழும். எத்தனை அகலம் அடியில் இருப்பினும் சுடர் தானே கூர்மையாகி மேலே எழும்பி, ஒரு ஒற்றைப் புள்ளியில் கூடும். அந்த புள்ளியே பரம்பொருள். விளக்கு ஏற்றும் போது நம் எண்ணங்கள் செயல்கள் எல்லாமே மேல் நோக்கியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் பரம்பொருள் என்ற புள்ளியை எளிதில் அடைய முடியும் என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டுவது தான் தீபம்.

5. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்சோதி

ஒளி, ஜோதி, சுடர், நெருப்பு - அனைத்தும் ஞானத்தின் குறியீடுகள். ஞானமே வடிவான இறைவனையும் இறை அருளையும் ஜோதி வடிவமாகவே ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். சைவம், வைணவம் என இரு பெரும் சமயங் களும் ஏற்றுக் கொண்ட உண்மை இது. மணிவாசகப் பெருமான் இறைவன் நெருப்புப் பிழம்பாய் எழுந்ததை, தம்முடைய திருவெம்பாவையின் முதல் பாடல் முதல் வரியிலேயே சொல்லி விடுகின்றார். கார்த்திகை மாதத்தில் தீபச் சுடராய் எழுந்த திவ்ய மங்களப் பரம்பொருளை, திருவெம்பாவையின் முதல் பாடலாக, அவர் பதிவு செய்கின்றார்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

சோதியையாம் பாடக் கேட்டேயும்

வாள் தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ

நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய

வாழ்த்தொலி போய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம் மறந்து

போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

இதில் முக்கியமான வார்த்தை ‘‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி’’

6. பரஞ்சுடர் ஜோதி

வைணவத்தில் நம்மாழ்வார் பெருமாளை ‘‘பாசம் வைத்த பரஞ்சுடர் ஜோதி” என்று குறிப்பிடுகின்றார். திருமங்கை ஆழ்வாரும்,’’ அண்டமாம் எண்டிசைக்கும்   ஆதியாய் நீதியான பண்டமாம் பரம ஜோதி” என்று ஜோதி ஸ்வரூபமாகவே பாடுகின்றார். அருணகிரிநாதர் இறைவனை, ‘‘தீப மங்கள ஜோதி நமோ நம:’’ என்று போற்றுகின்றார். வாழ்விக்க வந்த அருட்பிரகாச வள்ளலாரும் ‘‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி’’ என்று ஜோதி வடிவமாகவே இறைவனைப்போற்றுகின்றார்.

சாக்த நெறியில் அபிராமி பட்டர் அம்பாளை ஜோதி ஸ்வரூபமாகவே காணுகின்றார். ‘‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’’ என்றுஅம்பாளை உதிக்கின்ற சுடராக, அபிராமி அந்தாதியின் முதல் வரியிலேயே போற்றுகின்றார். மகாலட்சுமியை குறிப்பிடுகின்ற போது தீபலட்சுமி என்ற தீபத்தின் பெயரால் குறிப்பிடுவதை காண்கின்றோம். எனவே, இறைவன் அல்லது இறைவியின் ஒவ்வொரு வடிவமும் தீப வடிவம் என்பது நம்முடைய சமயத்தின் அடிப்படைச் சிந்தனை.

7. சந்திரனின் நீசம் போக்க தீபம் ஏற்ற வேண்டும்

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் இருப்பார். ஐப்பசி அமாவாசையில் அவரிடமிருந்து ஒளி பெறும் சந்திரன் அவரோடு இருப்பார். நீசம் பெறும் அந்த சூரியன், பலம் பெறுவதற்காக, தீபத்தை ஏற்றி, தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகின்றோம் கார்த்திகை மாதத்தில் சூரியன் தன்னுடைய நீச ராசியை விட்டு நட்பு ராசியான விருச்சிகத்தை அடைகிறார். அவர் விருச் சிகத்தில் பிரவேசிக்கும் மாதமே கார்த்திகை மாதம். ஆனால் இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசியில் சந்திரன் நீசம் அடைகிறார். சூரியன் நீசத்தை நீக்க தீபமேற்றியது போலவே, சந்திரனின் நீச தோஷத்தை, நீக்க விருச்சிக மாதமாகிய கார்த்திகையில் தீபம் ஏற்ற வேண்டும். இதன்மூலம் மனோ காரனாகிய சந்திரன் இருள் விலகி பிரகாசிக்கிறார்.

8. பரணி தீபமும், கார்த்திகை தீபமும்

சந்திரன் இருள் நீங்கி பிரகாசிக்கிறாரா என்றால், ஆம்; பிரகாசிக்கிறார். கார்த்திகையில், கார்த்திகை தீபத்திருநாள் அன்று, சந்திரன் நீசம் பெறும் விருச்சிகத்தில் சூரியன் இருக்க, அவரிடமிருந்து ஒளி பெறும் சந்திரன், தன்னுடைய உச்ச ராசியான ரிஷபத்தில் இருக்கிறார். அவர் ரிஷபத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் வேளையில் தான் கார்த்திகை தீபத்தை ஏற்றுகிறோம். அதற்கு முன்னால் ரிஷப சுக்கிரனுக்குரியப பரணி நட்சத்திரத்தில் இருக்கும் வேளையில் பரணி தீபம் ஏற்றுகிறோம். அவர் ரிஷப ராசியில் தனது சொந்த நட்சத்திரமான ரோகிணியில் இருக்கும் வேளையில் பாஞ்சராத்திர தீபம் ஏற்றுகிறோம். அதுவும் சந்திரன் இருக்கும் ரிஷப லக்ன வேளையில் தீப மேற்றுவது விசேஷமானது என்று ஆகம சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

9. வெவ்வேறு கால நிர்ணயம்

கார்த்திகை தீபத்திருநாள் வேளையை சைவர்களும் வைணவர்களும் வெவ்வேறு விதமாக நிர்ணயிக்கின்றனர். ஆனால், திருமால் ஆலயங்களிலும், சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் என்பது பொது விஷேசமாகவே இருக்கிறது. சிவாலயங்களில் சந்திர உதயமான வேளையில் பௌர்ணமி இருக்கும் காலத்தில் தீபம் ஏற்றுகின்றனர். வைணவத்தில் சூரிய வேளையில் கார்த்திகை நட்சத்திரமும் பவுர்ணமியும் இருக்க வேண்டும். இதிலும் இரண்டு அமைப்புகள் உண்டு.

பாஞ்சராத்திர தீபம், வைகானச தீபம் என்று சொல்லுவார்கள்.  பாஞ்சராத்திரிகளுக்கு சூரியன் இருக்கும்பொழுது பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் இருக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் சூரிய உதய காலத்தில் ரோகிணி நட்சத்திரமும் பௌர்ணமியும் இருக்க வேண்டும்.அப்படி இல்லாவிட்டால் கார்த்திகை நட்சத்திரமும் பிரதமையும் இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு அமைப்பு இருக்கும் போது பாஞ்சராத்ர தீபத் திருநாளை அனுஷ்டிக்கிறார்கள்.

10. திருவண்ணாமலை தீபம்

நம்முடைய சமய மரபில் ஏராளமான உற்சவங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட உற்சவத்தைச் சொன்னால், உடனே தொடர்புடைய தலம் நினைவுக்கு வரும். சைவம், வைணவம் இரண்டுக்குமே இது பொருந்தும். பங்குனி உத்தரம் என்றால் பழனி நினைவுக்கு வரும். சித்திரைத் திருவிழா என்றால் கள்ளழகரும் மதுரை மீனாட்சி அம்மன் கல்யாணமும் நினைவுக்கு வரும். வைகுண்ட ஏகாதசி என்றால் ஸ்ரீரங்கம் நினைவுக்கு வந்துவிடும். ஆருத்ரா தரிசனம் என்றால் சிதம்பரம் நினைவுக்கு வந்துவிடும்.

புரட்டாசி பிரம்மோற்சவம் என்றால் திருப்பதி நினைவுக்கு வந்துவிடும். கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர் நினைவுக்கு வந்துவிடும். கார்த்திகை தீபம் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது பஞ்சபூத தலங்களில், அக்னி தலமாக விளங்குகின்ற திருவண்ணா மலையும், மலையின் உச்சியில் ஏற்றி வழிபடும் திருக்கார்த்திகை தீபமும்தான் நினைவுக்கு வரும்.

11. திருவண்ணாமலையில் பூர்வாங்க உற்சவங்கள்

இந்த ஆண்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் தீப உற்சவக் கொடியேற்றம் 27.11.2022, கார்த்திகை பதினோராம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதற்கு பூர்வங்கமாக அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவமும், அருள்மிகு பிடாரியம்மன் உற்சவமும், அருள்மிகு விநாயகர் உற்சவமும் காலை மாலை வாகன உலாவோடு நடக்கின்றன. 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.30 கொடி யேற்றம் நடந்தது.

அன்று காலை பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் உலாவர, இரவு வெள்ளி அதிகார நந்தி வாகன வீதி உலா நடைபெறும். தொடர்ந்து டிசம்பர் மாதம் 2ஆம் தேதி வரை அதாவது முதல் ஆறு நாள்கள் காலை விநாயகரும் சந்திர சேகரரும் வீதி உலா வர, இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா வருகின்றனர். திருவிழா ஆறாம் நாளன்று, அதாவது டிசம்பர் 2ம் தேதி காலை அறுபத்தி மூன்று நாயன்மார்களில் வீதி உலா கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

12. பரணி தீபம்

டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி ஏழாம் நாள் திருவிழாவாக காலை 5:30 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பஞ்சமூர்த்திகள் வீதி உலா வர, உற்சவ மூர்த்திகளின் ரதங்கள் திருவண்ணாமலையின் தேர் வீதிகளில் வலம் வரும். இதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் எட்டாம் நாள் திருவிழாவும் ஒன்பதாம் நாள் திருவிழாவும் வழக்கம்போல காலையும் மாலையும் உற்சவ மூர்த்திகளின் வீதிஉலா காட்சிகளோடு நடைபெறும். டிசம்பர் ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள்.

இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இதுவே பரணி தீபம். (அன்று காலை 10 மணி வரை பரணி நட்சத்திரம்). பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சந்நதியில் வைக்கின்றனர்.

13. திருக்கார்த்திகை மகா தீபம்

6.12.2022 அன்று மாலை ஆறு மணிக்கு அருணாசலேஸ்வரர் திருக்கார்த்திகை மகா தீப தரிசனம் நடைபெறும். 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காகவே உள்ள பிரதியேகமான தீபக்கொப்பரையை மலைக்கு கொண்டு செல்வார்கள். பொதுவாக தீபம் ஏற்றுவதற்காக ஆயிரம் மீட்டர் திரி, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். மாலை நேரத்தில் பஞ்ச மூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்த நாரீஸ்வரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அன்று இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா வருவார்கள்.

அதற்கடுத்த நாள் 7. 12. 2022 புதன்கிழமை இரவு 9 மணிக்கு, அய்யன் குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்ப உற்சவமும், டிசம்பர் 8ஆம் தேதி அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருள்மிகு அண்ணாமலையார் கிரி பிரதட்சணமும் நடைபெறும். அன்று இரவும் அய்யன் குளத்தில் பராசக்தி அம்மனின் தெப்ப உற்சவம் உண்டு. டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு அய்யன் குளத்தில் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம் உண்டு. நிறைவாக டிசம்பர் மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமை இரவு அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வர, திருவண்ணாமலை தீபத் திருவிழா நிறைவுபெறும்.

14. இருபத்தியோரு தலைமுறையினருக்கு முக்தி

‘திருவண்ணாமலைத் தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர்’ என்று அருணாசல புராணம் கூறுகிறது. ‘இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும். குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்’ எஎன்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளியதாக பாடல் உள்ளது. அந்தப் பாடல்:

கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு ஜோதி

மலைநுனியிற் காட்ட நிற்போம்….

வாய்த்த அந்தச் சுடர் காணில் பசிபிணியில்

லாது உலகின் மன்னி வாழ்வார்

பார்த்ததிவர்க்கும் அருந்தவர்க்கும் கண்டோர்

தவிரும் அது பணிந்தோர் கண்டோர்

கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு

முத்திவரம் கொடுப்போம்’

15. பழந்தமிழர்கள் கொண்டாடிய திருவிழா

தீபத் திருவிழா என்பது பழந்தமிழர்கள் கொண்டாடிய திருவிழா. பெரும் பாலான நூல்களில் தீபத் திருவிழாவின் சிறப்பு காணப்படுகிறது. தேவாரம் தொடங்கி நெடுநல்வாடை, நற்றிணை, அகநானூறு, கார் நாற்பது, களவழி நாற்பது, சீவக சிந்தாமணி, நற்றிணை, அகநானூறு, முத்தொள்ளாயிரம் மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, பரிபாடல், ஐங்குறுநுாறு, என எல்லா இலக்கியங்களிலும் கார்த்திகை தீபம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருமந்திரத்தில், திருமூலர் அக்னி வடிவமாக விளங்கும் சிவபெருமானின் வழிபாட்டையும், அதனால் பெறப்படும் பயனையும் விரிவாகக் கூறுகின்றார்.

அது மட்டுமில்லை அவனை ஜோதியாக காண்பதே வழிபாடு என்கிறார். “உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை” “விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சும் அவனே அமைக்க வல்லானே”என்பது அவர் வாக்கு. தலை உச்சியில் ஓங்கி நாதமாகவும் ஒளியாகவும் விளங்குவதை விரும்பி இன்பம் அடைந்தவர்க்கு யமபயம் இல்லை. ஆக்வநீயம், காருக பத்தியம், தட்சிணாக்னி ஆகிய அக்னிகள் சூரிய சந்திர அக்னி என்ற மூன்று நெருப்புகளுடன் உடம்பில் அமையச் செய்பவன் இறைவன்.

16. வைணவத்தில் கார்த்திகை சிறப்பு

இனி வைணவ மரபில் கார்த்திகை தீபத்தைப் பற்றிய சிறப்பு காண்போம். கார்த்திகை மாதம் என்பது துவாதச மூர்த்திகளில்   தாமோதரனை வழிபடும் மாதம். இந்த மாதத்தில் தாமோதரனை வழிபட்டால் பல நூறு யாக பலன்கள் செய்த புண்ணியம் கிடைக்கும். கார்த்திகை மாதம் திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களும், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியாரும் அவதரித்த மாதம். கார்த்திகை மாதத்தில் மிக முக்கியமான ஏகாதசி கைசிக ஏகாதசி. திருக்குறுங்குடி என்ற திருத்தலத்தில் நம்பாடுவான் சரித்திரம் அன்று இரவு நாடகமாக நடத்தப்படும். திருச்சித்ரகூடம் என்னும் தலத்தில் கோவிந்தராஜ பெருமாளுக்கு கோவிந்த பட்டாபிஷேகம் கார்த்திகை மாதத்தில் நடைபெறும்.

17. திருமங்கை ஆழ்வாரின் கார்த்திகை உற்சவம்

ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரானதிருமங்கை ஆழ்வாரின் அவதாரம் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. இவர் கலி  இருள் அகற்ற வந்தவர் என்பதால், இவரை ஒரு விளக்காக வைணவத்தில் (கவிம் லோக திவாகரம்) என்று சொல்வார்கள். இவருடைய அற்புதமான தமிழ் பாசுரங்கள் நெஞ்சில் உள்ள இருட்டை விலக்கும் என்பதால் நெஞ்சுக்கு இருள் கடி தீபம் என்றார்கள். இவருடைய அவதார தினத்தை, கார்த்திகை பௌர்ண மியில் விளக்கு ஏற்றி கொண்டாடுவார்கள். அந்த நாளில் ஆழ்வார் அவதரித்த திருவாலி திருநகரியில் ஆழ்வாருக்கு விசேஷமான திருமஞ்சனம் நடை பெறும். அதுமட்டுமல்ல 10 நாட்கள் அவருடைய அவதார உற்சவம் தனி உற்சாகமாக நடைபெறும். இன்னுமொரு சிறப்பு பெருமாளுக்கு இருப்பதுபோலவே ஆழ்வாருக்கும் தனியாக கொடிமரம் இந்த ஆலயத்தில் உண்டு.

18. விளக்கொளி பெருமாள் அவதாரம்

வைஷ்ணவ ஆகமத்தில் திருக்கார்த்திகை மாதத்தை தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. காரணம், பெருமாள் தீபப் பிரகாசராக அவதரித்தார் என்று சொல்வார்கள். காஞ்சியில் திருத்தண்கா பெருமாளுக்கு விளக்கொளி பெருமாள் என்று பெயர்.  “என்னை ஆளுடை ஈசனை எம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண்காவிலே” என்பது ஆழ்வார் பாசுரம். திருத்தண்கா என்பது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே உள்ள ஒரு பகுதி.

அந்தப் பகுதியில் தான் வேதாந்த தேசிகர் அவதரித்தார். அவருக்கு அங்கே தனியாக ஆலயம் உண்டு. ஒருமுறை பிரம்மா யாகம் செய்யும்போது, அசுரர்கள், மாயா சக்தியினால் யாகம் செய்ய முடியாத அளவுக்கு இருட்டை ஏற்படுத்தினார்கள். ஆகையினால் யாகம் நிறைவேறாமல் தடங்கல் ஏற்பட்டது. அப்பொழுது பிரம்மன் பிரார்த்திக்க, யாகம் நிறைவேறும் படியாக பெருமாள் தீபப்பிரகாசராகத் தோன்றினார். தாயாருக்கு மரகதவல்லி என்று பெயர். இது நடந்தது கார்த்திகை மாதம் கார்த்திகையில் என்பதால் அந்தத் தாயாருக்கும் பெருமாளுக்கும் தீபம் ஏற்றி கொண்டாடுவார்கள்இதனை அனுசரித்து வைணவர்கள் தங்கள் வீட்டில் தீபம் ஏற்றுவார்கள்.

19. ரிஷப லக்னத்தில் தீபமேற்ற வேண்டும்

கிருத்திகை நட்சத்திரமும் பௌர்ணமியும் நிறைந்த சாயங்கால வேளையில் வீடுகளிலும் கோயில்களிலும் மாட்டுக் கொட்டகைகளிலும் தீப மேற்றுவது உத்தமம். அதுவும் சுக்கிரனுடைய ரிஷப லக்ன வேளையில் தீபம் ஏற்ற வேண்டும். ரிஷப ராசி என்பது மகாலட்சுமிக்கு உரிய சுக்கிரனுடைய ராசி. அங்கே சூரியனுக்குரிய கார்த்திகை நட்சத்திரமும் சந்திரனுக்குரிய ரோகிணி நட்சத்திரமும் செவ்வாய்க்கு உரிய மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளன.

இதில் சூரியனுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தில் சந்திரன் பிரவேசிக்கும் ரிஷப லக்கின நேரத்தில் தீபமேற்றுவது உத்தமம் என்று ஆகம விதி சொல்லுகின்றது. காரணம் விருச்சிகத்தில் இருக்கும் சூரியன் ரிஷப லக்னத்தை பார்ப்பார். அந்த ஆஸியில் சந்திரன் உச்சம் பெறுவார். சகல எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பூர்த்தியாகும். ஆகையினால் ரிஷப லக்னத்தில் தீபமேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

20. இந்த வருடம் எப்படி?

ஆனால், கார்த்திகை மாதமும் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் ரிஷப லக்னமும் விளக்கு ஏற்றும் மாலை நேர வேளையில் இணைந்து வருவது மிக மிக அபூர்வம். அப்படி அமைந்து தீபம் ஏற்றும் வாய்ப்பு கிடைத்தால், அதைவிட புண்ணியமான விஷயம் எதுவுமில்லை வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நாட்டில் வாழ்வோருக்கும் அது நன்மையைத் தரும். கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி எந்த நாளில் வருகிறது என்பதைப் பொறுத்துதான் சூரிய அஸ்தமனத்தின் பின் மேற்படி புனிதமான சேர்க்கை நிகழும் இவ்வாண்டு 7.12.2022 காலை 8.37 மணிக்குப் பிறகு பௌர்ணமி தொடங்குகிறது. முதல் நாள் (6.12.2022) மாலையிலும் சரி, இந்த நாள் (7.12.2022) மாலையிலும் சரி மாலை 4.30 மணிக்குமேல் 6.30 மணிக்குள் ரிஷப லக்கின வேளையில் கிருத்திகை ரோகிணி முதலிய இரண்டு நட்சத்திரங்களும் வந்துவிடுவது இந்த ஆண்டு சிறப்பு.

21. திருமஞ்சனமும் தீபமும்

அன்றைக்கு எல்லா பெருமாள் கோயில்களிலும் பெருமாள் தாயாருக்கு சிறப்பான திருமஞ்சனம் நடைபெறும். காலையில் சிறப்பு திருவாராதனம் நடைபெறும். மாலையில் திருவாராதனம் முடிந்து, பெரிய அகல் விளக்கு ஏற்றப்படும். பிறகு புண்ணியாகவாசனம் செய்து கார்த்திகை தீபபிரதிஷ்டை செய்யப்படும்.

அந்த தீபத்துக்கு தீபாராதனையும் நடந்து தீபம் புறப்படும். பிராகாரத்தை வலம் வந்து, ராஜ கோபுரத்திலும் பெருமாள் சந்நதியிலும் தீபங்கள் வைக்கப்படும். பிறகு அந்த தீபம் தாயார் சந்நதிக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப் படும். தாயாருக்கு வேத மந்திரங்களோடு தீபம் சமர்ப்பிக்கப்படும். பின்பு தாயார் விமானத்திலும் மடைப்பள்ளி நாச்சியார் முன்பும் தீபம்

வைக்கப்படும்.  

22. சொக்கப்பனை

கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி எல்லா தேவாலயங்களிலும் நடைபெறும். பனைமரத்தினை வெட்டிச் சிவாலயத்தின் முன்முற்றத்தில் நடுவார்கள். அதில் சில அடி உயரத்திற்குப் பனை யோலை களைக் கூம்பு போன்று கட்டி அமைக்கின்றார்கள். இவ்வமைப்பு சொக்கப்பனை என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று சிவாலயக் கோபுர உச்சியில் தீபம் ஏற்றி, பஞ்சமூர்த்திகளுக்கு வழிபாடு நடத்தப்படும்.

அதன் பின் பஞ்சமூர்த்திகளைச் சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். பின்னர் பஞ்சமூர்த்திகளுக்குத் தீபாராதனை காட்டப்பெற்று, அந்தத் தீபச்சுடரால் சொக்கப் பனையைக் கொளுத்துகின்றார்கள். எரிகின்ற சொக்கப்பனை அக்கினி மய லிங்கமாகப் பக்தர்களால் வணங்கப்படுகிறது. “தூய்மைக்கு சொக்க” என்று பெயர். தூய்மையான தங்கத்தை சொக்கத்தங்கம் என்று சொல்கிறோம். தூய்மையானது அக்னி. எந்தப்பொருளை போட்டாலும் அக்னி தூய்மை கெடாது. தூய்மையுள்ள இறைவனை அமலன் என்கிறோம். அவர்தான் சொக்கப்பனை. சொக்கப்பனையில் எரிதழலாக சொக்கப்பனை தரிசனம் செய்கிறோம்.

23. பனை மரத்துக்கு வேறு என்ன விசேஷம்?

கார்த்திகை தீபத்தில் பனை மரம் மற்றும் பனை ஓலைகளை மட்டுமே சொக்கப் பனையாக கொளுத்துவதில் சில விஷயங்கள் உண்டு. விருட்சங்களில் மிகச்சிறந்த விருட்சமாக பனைமரம் கருதப்படுகிறது. அதனை பூலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் என்று அழைப்பார்கள் காரணம் பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் நமக்கு ஏதோ ஒரு வகையில் உதவுவதை காணலாம். மேல் கூரைக்கு பனை மரம், பனை ஓலை பயன்படுத்தினர்.

பனை மரம், உச்சி முதல், பாதம் வரை, 801 பயன்களைத் தருகிறது, என்பது தான் ஆச்சரியம் தரும் புள்ளிவிவரம். பல ஆலயங்களில் பனை மரம் ஆலய விருட்சமாக இருக்கிறது. காகிதம் இல்லாத அந்தக் காலத்தில் இலக்கியங்களையும், மற்ற செய்திகளையும் எழுதி வைக்க பனை ஓலைதான் பயன்பட்டது. அந்த பனை ஓலைச் சுவடிகளில் எழுதி வைக்கப்பட்ட இலக்கியங் களைத் தேடித்தான் உ.வே. சா போன்ற தமிழ் அறிஞர்கள் பல ஊர்களுக்கும் தேடிச் சென்றனர். தமிழை காத்துத்தந்தது பனை ஓலைகள் தான்.

24. சொக்கப்பனைக் காணசொக்கப்பனை

மடல்என்றொரு இலக்கிய வகை உண்டு. திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் பெரிய திருமடல் என்று இரண்டு மடல்களை இயற்றியுள்ளார். அதாவது காதலி தன் காதலை ஏற்றுக்கொள்ளாத போது, காதலன் அதை ஊராருக்குத் தெரிவிக்க இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற முனைகளைக் கொண்டிருக்கும் பனை மரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்து அதன் மேல் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக்கட்டி இழுத்துச் செல்வதை மடல் என்பர். இதை செய்தால் தலைவன் படும் துன்பம் தலைவிக்கு தெரியவரும். காதலை நிறைவேற்றி வைக்க ஊரார் துணை புரிவர். இப்படிப் பல சிறப்புக்களை உடையது பனை மரம்.

அந்தப் பனை மரத்தின் சுடரை இறைவனாகக் காணுவதால் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு எல்லா கிராமங்களிலும் நடைபெறுகிறது அப்படிச் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு கிடைக்கும் கரியை திருநீறாக மக்கள் உடலில் பூசிக்கொள்வது உண்டு. இதனால் உடல் நோய்கள் தீர்ந்து ஆரோக்கியம் கிடைக்கும். அந்தச் சாம்பலை கடவுளுடைய அனுக்கிரகமாகக் கருதி வீடுகளுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். தங்களுடைய வயல்களுக்கும் காடுகளுக்கும் அதைத் தூவுவார்கள். இதனால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு.

25. வைணவத்தில் சொக்கப்பனை

வைணவத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி உண்டு. திருவரங்கத்திலும் திருமலையிலும் இன்னும் பல முக்கியமான திருத்தலங்களிலும் கர்ப்பகிரகத்தில் விளக்கு ஏற்றிய பிறகு தீபத்தோடு உற்சவமூர்த்தி வெளியே வந்து தீப ஆராதனை நடந்து, அந்த தீபத்தை சொக்கப்பனை கொளுத்துவதற்கு பயன்படுத்துவார்கள். இது வாமன அவதாரத்தோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாக வைணவத்தில் சொல்லப்படுகிறது. மகாபலி யாகம் செய்தார்.

அப்பொழுது வாமன மூர்த்தி அவரிடம் மூன்றடி மண் கேட்டார். அதுமட்டுமில்லை மகாபலியின் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகத்திற்கு அனுப்பிவிட்டார். அந்த யாகம் தடைப்பட்டு விட்டது. ஒரு யாகம் தடைபடக் கூடாது அல்லவா...  கார்த்திகை தீபத்தின் போது சொக்கப்பனை கொளுத்துதல் மூலமாக பூர்ணாகுதி நடந்து மகாபலியின் யாகத்தை மஹாவிஷ்ணுவின் முன்னிலையில் நிறைவேற்றி வைப்பதாகக் கூறப்படுகிறது.

26. அகல் விளக்கு - உண்மைகள்

நாம் தினசரி பூஜைகளை விளக்கேற்றித் தான் இறைவனை வணங்குகின்றோம்என்றாலும்கூட விளக்கேற்றும் வைபவத்துக்கென்று ஒரு உற்சவம் கார்த்திகை உற்சவம். இதில் மக்கள் தங்கள் வீடுகளில், மாலை நேரத்தில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். அகல் விளக்கு என்ற வார்த்தையை ஆய்வு செய்தால் நமக்கு சில அற்புதமான உண்மைகள் தெரியவரும். மண்ணால் செய்யப்பட்ட விளக்கை அகல் விளக்கு என்று சொல்லுகின்றோம். அந்த மண் விளக்குகளைத் தான் நிறைய ஏற்றுகிறோம். இந்த விளக்கு ஏற்றுவதன் மூலமாக இருட்டு அகல்கிறது. மாயை அகல்கிறது.

கவலைகள் அகல்கின்றன. இப்படி இருட்டையும் துன்பத்தையும் கவலையையும் அகலச் செய்கின்ற விளக்கு என்பதால் இதனை “அகல் விளக்கு” என்று சொல்கின்றோம். இறைவனை வணங்கி ஒரு விளக்கேற்றி வைத்தால், எப்பேர்பட்ட துன்பங்களும் விலகி ஒரு நல்ல வெளிச்சம் மனதிற்கு கிடைக்கும் என்பதுதான் அகல் விளக்கின் தத்துவம். ‘‘ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்’’ என்றும், ‘‘பொய் இருள் அகல நெய்விளக்கு ஏற்றி’’ என்றும், என்றும் பாடி வைத்தார்கள். இடராழி நீங்கவே சுடர் ஆழி ஏற்றினேன் என்பது ஆழ்வார் வாக்கு.

27. வழி காட்டும் விளக்கு

இருட்டில் எது வழி என்று தடுமாறுகின்றவர்களுக்கு, ஒரு விளக்கின் வெளிச்சம் இருந்தால் வழி தெரியும். அதுபோல நாம் வாழ்க்கையில் எது சரி என்பது தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்ற போது நமக்கு இது தான் வழி என்று காட்டுவதற்குத் தான் விளக்கை ஏற்றுகிறோம். இதை ஒரு பாடலில் கவியரசு கண்ணதாசன் மிக அற்புதமாகச் சொல்லுவார். ஒரு படத்தயாரிப்பாளர் அவரிடம் வந்து, ‘‘புதிதாக படம் எடுக்கிறேன். அதற்கு முதல் முதலில் பூஜையின்போது ஒரு பாடல் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் என்னுடைய தொழில் நன்றாக நடக்கும் படியாக ஒரு பாடல் எழுதித் தரவேண்டும்’’ என்று கேட்டபோது கவியரசு கண்ணதாசன் எழுதி கொடுத்தாராம்.

விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்

நடக்கப் போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும்

28. விளக்கு என்று ஏன் பெயர்?

விளக்கு மூன்று செயல்களை செய்யும். முதலில் அது தன்னையும் காட்டும். நாம் எங்கு இருக்கிறோம் என்று நம்மையும் காட்டும் நம்மை சுற்றி உள்ள பொருள்களையும் காட்டும். இவை எல்லாவற்றையும் விளக்குவதால் தான் அதற்கு விளக்கு என்று பெயர். அந்த விளக்கைத்தான் கார்த்திகை தீபம் அன்று ஏற்றுகிறோம்.

29. எங்கெங்கே விளக்கு ஏற்ற வேண்டும்?

கார்த்திகை தீபத்தன்று எங்கெங்கே விளக்கு ஏற்ற வேண்டும்? எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்? என்று பலருக்கு சந்தேகம் வரும்.எங்கெல்லாம் இருட்டு இருக்கிறதோ, எங்கெல்லாம் வெளிச்சம் தேவைப்படுகிறதோ, எங்கெல்லாம் ஏற்றினால் உங்கள் மனதிற்கு நிம்மதி கிடைக்கின்றதோ, எங்கெல்லாம் ஏற்றினால் வீட்டின் அமைப்பும், அழகும் கூடுமோ அங்கெல்லாம் ஏற்றலாம்.

குறிப்பாக வாசலில், சமையல் அறையில், பூஜை அறையில், கூடத்தில், உங்களால்எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ, அத்தனை விளக்குகள் ஏற்றலாம். பூஜையறையில் குத்து விளக்குகளும் அல்லது காமாட்சி மஹாலஷ்மி விளக்குகளும், மற்ற இடங்களில் அகல் விளக்குகளும் ஏற்றலாம். அதோடு கார்த்திகைத் தீபத்தன்று விரதம் இருந்து, பிரத்தியேகமான நிவேதனமாக அவல்பொரி, நெல்பொரி, வெல்ல அடை, கார வடை முதலிய நிவேதனம் செய்து படைக்கலாம்.

30. திசையும் பலன்களும்

பொதுவாக இந்த இந்த திசையில் விளக்கு ஏற்றினால் என்னென்ன பலன்கள் உண்டு என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒரு விஷயம்: விளக்கு ஏற்றும் திசை என்பது விளக்கின் முகம் பற்றியதுதான்.  ஆனால் விளக்கின் சுடர் எல்லா திசைகளிலும் பிரகாசிக்கும். நமக்கு அந்த சுடர்தான் முக்கியம். விளக்கு ஏற்றும் பொழுது கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அந்தச் ஸ்லோகம் இது.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||

‘‘புழுக்களோ, பறவைகளோ, அல்லது ஒரு கொசுவோ, மரமோ, இன்னும் நீரிலும், பூமியிலும் உள்ள ஜீவராசிகள் எதுவானாலும், மனிதர்கள் பேதமின்றி யாரானாலும் இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் தீர்ந்து, இன்னொரு பிறவி எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம். இந்த திருக்கார்த்திகை தீபத்தின் போது எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கவும் துன்பம் என்னும் இருள் அகலவும், புதுவழி பிறக்கவும் தீபம் ஏற்றுவோம்.

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

Related Stories: