தாமரையை டம்மியாக்க மவுனமாக இருக்கும் புல்லட் சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அரசு வாகனங்களை அரசியலுக்கு பயன்படுத்தும் இலைகட்சிக்காரங்களை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து ஓராண்டிற்கு மேல் ஆகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி புதியதாக பிரதிநிதிகள் பொறுப்பு ஏற்று இருக்கிறாங்க. ஆனா, கூட்டுறவு சங்கத்துல மட்டும் கடந்த ஆட்சியில இருந்த இலை கட்சிக்காரங்களே பதவியில இருக்காங்க. அதன்படி வெயிலூர் மாவட்டத்தில் உள்ள பல கூட்டுறவு சங்கங்களுக்கு இலைகட்சி நிர்வாகிகள் தலைவர்களாக இருந்து வர்றாங்க. இவர்களுக்கு அரசு சார்பில் விலை உயர்ந்த கார்கள் வழங்கப்பட்டிருக்குது. அவர்கள் அரசு நிகழ்ச்சிக்கு எதுக்கும் வர்றது இல்லை. பெரும்பாலும் அவர்களின் அலுவலகங்களுக்கும் வர்றது இல்லை. மாசத்துக்கு ஒரு முறை அலுவலகத்துக்கு வருவது பெரிய விஷயமாக இருக்குதாம். ஆனா, அரசு சார்பில் வழங்கப்பட்ட கார்களை மட்டும் ஆடம்பரமாக பயன்படுத்தி வர்றாங்களாம். குறிப்பாக அரசு நிகழ்ச்சிகளை தவிர்த்துவிட்டு கட்சி நிகழ்ச்சிக்கு அதிகளவில, சொகுசு கார்களை பயன்படுத்தி வர்றாங்களாம். கட்சி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற நிகழ்ச்சி மட்டுமின்றி குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் அரசு கார்கள்ல செல்வது வாடிக்கையாகிடுச்சாம். இதனால, அரசு வாகனத்தை விதிமீறி பயன்படுத்துபவர்களோட வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்னு கோரிக்கை எழுந்திருக்குது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலம் விவிஐபி நிழலின் அதிகாரத்தை யாரு குறைக்கப்போறா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. இலைக்கட்சியின் சேலத்துக்ககாரருக்கு எல்லாமுமாக இருப்பவர் அவரது நிழலான வங்கித்தலைவர். அவர் கட்சிக்காரர்களை மிரட்டி காரியங்களை சாதிச்சிக்கிட்டாரு. இவரது மிரட்டல் எல்லாம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்திருக்காம். இதனால 8 தொகுதி இருக்கும் இந்த மாவட்டத்தை ரெண்டா பிரிச்சே ஆகணுமுன்னு அவரது நெருங்கிய உறவு கொடி பிடிச்சதா கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க. இந்த குரல் சமீபமா ஒங்கி ஒலிக்க ஆரம்பிச்சிருக்காம். மாம்பழ கட்சியில இருந்து சிலர் இலைக்கட்சில இணைஞ்சாங்களாம். அந்த நிகழ்ச்சியில நிழலானவரு மிஸ்சிங்காம். இப்படியே மோதல் நீறுபூத்த நெருப்பா போயிட்டிருக்காம்” என்றார் விக்கியானந்தா. ‘‘பெல்லான மாஜி மந்திரிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்காமே, ஏனாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இலைக்கட்சி  சார்பில் கட்டிட ஊரில் நடந்தது. இதில் பாலியல் புகாரில் சிக்கிய மாஜி  மந்திரி பேசினார். அப்போது, விழா நோட்டீஸில் இருந்த, இல்லாத, அவரது  ஆதரவாளர்கள் அத்தனை பேரின் பெயர்களையும் உச்சரித்தவர், கட்டிட ஊரின் ஒன்றிய  நிர்வாகியானவர் மேடையில் அமர்ந்திருந்தபோதும், அவரது பெயரை கடைசி வரை  உச்சரிக்கவே இல்லை. தனது பெயரை உச்சரிக்காததால் ஒன்றிய நிர்வாகி ரொம்பவும்  அப்செட் ஆனார். அத்தோடு, இந்த ஒன்றிய நிர்வாகியின் ஆதரவாளர்கள் எல்லாம்,  ‘ஒன்றிய கழகத்தின் பெயரை சொல்லவே பயப்படும் முன்னாள் மந்திரியே. அந்த  பயம் உமக்கு இருக்கட்டும்…’ என்ற அர்த்தங்களில் சமூக வலைத்தளங்களில்  ஏகப்பட்ட விமர்சனங்களை, மீம்ஸ்களை அள்ளிக்கொட்டி மாஜி மந்திரிக்கு கடும்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ‘லடாய்’க்கு என்ன காரணம் என  விசாரித்தபோது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒற்றைத் தலைமை ஆலோசனைக்  கூட்டத்தில், மாஜி மந்திரியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில்  இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவரே, இந்த ஒன்றிய  நிர்வாகிதானாம். அந்த பழைய கோபத்தை மனதில் வைத்து, மாஜி மந்திரியானவர் இந்த  மேடையில் பழி தீர்த்து கொண்டதாக தொண்டர்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரைக்கு மவுனத்தையே பதிலாக கொடுத்து… கலங்கடிக்கும் புல்லட்சாமி பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புல்லட்சாமியை  எதிர்த்து படிக்கட்டில் அமர்ந்து போராட்டம் நடத்திய பாஜக ஆதரவு  சுயேட்சையும், அவரை ஆதரித்து ரங்கசாமி மீது ஊழல் புகார் சொன்ன சுந்தரத்தின்  மீதும் என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தியடைந்தனர். கூட்டணியே  தேவையில்லை, 4 முறை முதல்வராக இருந்த சாமி மீது அவதூறு பரப்புவதா என  ஆவேசப்பட்டனர். முதல்வரை அவரது அலுவலகத்தில் சந்தித்த என். ஆர்  காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நீங்க ஏன் எல்லாவற்றுக்கும் மவுனமாக  இருக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். என்ன செய்ய சொல்கிறீர்கள், எதுமே  தெரியாமல் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு பதிலளித்து என்ன பயன். நான் பதில்  அளிக்கும் அளவுக்கு அவர்கள் ஒர்த் இல்லை. நீங்க கிளம்புங்க, நான்  பார்த்துக்கிறேன் என்ற அளவில் பதில் வந்ததாம். சாமியின் பதில் குறித்து  சாமி கட்சி எம்எல்ஏ ஒருவர் கூறுகையில், இதெல்லாம் ஒரு நாடகம்,  திரைக்கதையெல்லாம் எங்கிருந்து எழுதுகிறார்கள் என்று கூட தெரியும்.  அவர்களும் ஏன் இப்படி நடக்கிறார்கள் என்பதெல்லாம் அறிந்துள்ளோம்.  இதுக்கெல்லாம் ரியாக்‌ஷன் பண்ணக்கூடாது. என்ன முட்டி மோதினாலும்  எம்எல்ஏக்களின் மண்டைதான் உடையும் என சொன்னார்’’  என்றார் விக்கியானந்தா. …

The post தாமரையை டம்மியாக்க மவுனமாக இருக்கும் புல்லட் சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: