காயத்ரி சக்தி பீடம்-புஷ்கர் மலை - ராஜஸ்தான்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

தட்சனின் யாகசாலையில் அழையா விருந்தாளியாக வந்தாள் அம்பிகை. தன் பதியான ஈசனை, நிராகரித்துவிட்டு யாகம் நிகழ்த்தும் தனது தந்தையான தட்ச பிரஜாபதியிடம் நியாயம் கேட்டாள். உலகனைத்திற்கும் தந்தையான ஈசனை தனது மாப்பிள்ளையாக பெறும் பாக்கியம் பெற்ற தட்சன், மாப்பிள்ளை பெருமானைப் போற்றிப் புகழாமல் நிந்தித்துத் தள்ளினான். ஆணவத்தால் மதி இழந்த மூடனிடம் நியாயம் கேட்க வந்த அம்பிகை. அவமானமடைந்து, யோக அக்னியில் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டாள்.

பிறகென்ன.. மனைவியை இழந்த கோபத்திலும் சோகத்திலும் கொந்தளித்த ஈசன், வீரபத்திரரையும், காளியையும் தோற்றுவித்து, தட்சனின் யாகத்தையும், அவனையும் அழித்தார்.

பிறகு, தாட்சாயணியின் சடலத்தைக் கையில் ஏந்தியபடி உக்ர தாண்டவம் ஆடத் தொடங்கினார். அந்த தாண்டவத்தில், அண்ட சராசரங்களும் நடுநடுங்கின. இதை கண்ட திருமால், தனது சக்ராயுதத்தை பிரயோகித்து, நடனம் செய்யும் ஈசனின் கையில் இருந்த அம்பிகையின் உடலைத் துண்டித்தார். அம்பிகையின் உடல் ஐம்பத்தொரு துண்டு

களாகி பூமியில் விழுந்தது. விழுந்த இடங்கள் `சக்தி பீடங்கள்’ என்ற பெயருடன் இன்றும் அவளது அருள்சக்தி ஆற்றலை உலகில் பரப்பிவருகிறது.

மேலே நாம் கண்ட சம்பவம் நடக்கும்போது அம்பிகையின் மணிக்கட்டு வளையலுடன் விழுந்த இடம் `காயத்ரி சக்திபீடம்’ என்றும் `ஏகாம்பர சக்தி பீடம்’ (புஷ்கர்) என்றும் வழங்கப்பட்டு வருகிறது. அம்பிகையின் மணிக்கட்டு குறிப்பாக புஷ்கர் மலையில், எங்கு விழுந்தது என்று அறிய முடியவில்லை. அதனால், ஒட்டுமொத்த புஷ்கர் மலையையே சக்தி பீடமாக வணங்குகிறார்கள்.

பிரம்மன் ஒருமுறை, யாகம் செய்யும் பொருட்டு, பூமிக்கு வந்தான். யாகம் செய்யும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே என்று பிரம்மன் யோசித்தான். அப்போது அவனுக்கு பல காலங்களுக்கு முன் நடந்த சம்பவம் நினைவில் வந்தது.

பிரம்மன் தனது கையில் இருந்த தாமரையை வீசி வஜ்ர நாபன் என்ற அரக்கனை அழித்ததும், அந்த தாமரை, அரக்கனைக் கொன்ற பின் மூன்று பாகங்களாக தெறித்து பூமியில் விழுந்ததும், அந்த இடங்களில் மூன்று தீர்த்தங்கள் (ஜேஷ்ட புஷ்கரம், மத்திய புஷ்கரம் மற்றும் கனிஷ்ட புஷ்கரம் என்ற தீர்த்தங்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் வடிவாக உள்ளது) உண்டானதும், அவை மூன்றும் பாவம் போக்கி புண்ணியமும் முக்தியும் தரும் அற்புதத் தீர்த்தமாக விளங்கி வருவதையும் பிரம்மன் நினைத்தான். தனது கையில் இருந்த தாமரை புஷ்பம் விழுந்த `தெறித்த புஷ்கர்’ என்ற இடம். யாகம் செய்ய, தேர்ந்த இடம் என்று முடிவு செய்தான். யாக ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நிகழ்ந்தது. யாகம் ஆரம்பிக்கும் சுபமுகூர்த்தம் வந்தது. யாகம் செய்யும் பொருட்டு, தயாராகி மனையில், அயன் அமர்ந்தான். பக்கத்தில் திரும்பிப் பார்த்தான், அவன் பக்கத்து மனை காலியாக இருந்தது.

அதைக் கண்டபோதுதான், அவனுக்கு யாகம் செய்ய தர்மப் பத்தினி வேண்டும் என்ற நினைப்பே வந்தது. தனது தர்மப் பத்தினியான சாவித்ரியை தேடினான். அவளை காணவில்லை. சில பல காரணங்களால் சாவித்ரி தேவியால் குறித்த நேரத்திற்கு யாகத்திற்கு வர முடிவில்லை. அவள் வரும் வரை பொறுக்கவும் முடியாது. சுப முகூர்த்தம் கடந்துவிடும். என்ன செய்வதென்று விளங்காமல் விழித்தான் பிரம்மன். அருகில் இருந்த தேவர்கள், காயத்ரி என்ற மங்கையை அவனுக்கு மணமுடித்து வைத்து, யாகத்தையும் முடித்து வைத்தார்கள்.

கால தாமதமாக வந்த சாவித்ரி நடந்ததை அறிந்தவளாய், பிரம்மனுக்கு பூமியில் புஷ்கரைத் தவிர வேறு எந்த இடங்களிலும் தனித்த கோயில் இல்லாமல் போகட்டும் என்று சபித்தாள். புஷ்கரில், இன்றும் காயத்ரி சமேதராக பிரம்மனுக்கு ஒரு கோயிலும், காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகிய மூன்று மனைவியரோடு கூடியவராக காட்சி தரும் ஒரு கோயிலும் இருக்கிறது.

புஷ்கர் பிரம்மன் கோயிலில் பல முறை அன்னியர்கள் மற்றும் மிலேச்சர்களின் படையெடுப்பிற்கு ஆளாகி, தரை மட்டமானது. இருந்தபோதிலும், அயராத ஆஸ்தீக அன்பர்களின் முயற்சியாலும், பல வேந்தர்களின் முயற்சியாலும் மீண்டும்மீண்டும் கட்டப்பட்டது. வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும், நடந்த போட்டி நாம் அறிந்த ஒன்றே. இறுதியில் அவர் பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற இடமும், காயத்ரி மந்திரத்தை அவர் உலகிற்கு தந்ததும் இந்த புஷ்கர் என்ற தலத்தில்தான்.

‘காயந்தோ ரக்ஷதி இதி காயத்ரி” ஜபிப்பவரை காக்கும் திவ்ய மந்திரம் காயத்ரி மந்திரம். ஜோதி மயமாக விளங்கும் பரம் பொருளிடம் நமது ஞானஒளியை அதிகரிக்கும் படி வேண்டும் அற்புத மந்திரம். கண்ணனே கீதையில், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாக உள்ளேன் என்று சொல்லும் அளவிற்கு மேன்மை பெற்ற மந்திரம். அருணாசுரன் என்ற அரக்கன் ஒருவன், காயத்ரி மந்திரத்தை ஜெபித்ததால், உலகையே வென்று, தேவ லோகத்தையும் வென்று, அனைவரையும் துன்பப் படுத்தி கொடுங்கோல் ஆட்சி செய்தான். மனிதன், மிருகம், தேவன், கந்தருவன் என யாராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரம் பெற்றிருந்த அவன், ஆறு கால்களை உடைய பூச்சிகளை மறந்து விட்டான்.

அவனை அழிக்க ஒரே வழி, இடை விடாமல் அவன் ஜெபிக்கும் காயத்ரி மந்திரத்தை தடுப்பதுதான் என்று தேவர்கள் முடிவு செய்தார்கள். பிரகஸ்பதியின் ஒரு தந்திரத்தால் அதை சாதித்த தேவர்கள், அரக்கனை அழிக்கும் படி அம்பிகையை வேண்டினார்கள். வேண்டுவோர் வேண்டுவதை அளிக்கும் அம்பிகை, ஒரு வண்டின் வடிவம் கொண்டாள். தனது யோக பலத்தால் ஒரு வண்டு பட்டாளத்தையே உண்டாக்கிய அம்பிகை, அரக்கனின் சேனையை அழித்தாள். எஞ்சி இருந்த அரக்கனையும், அம்பிகை வீழ்த்தி பூமியில் சாய்த்தாள்.

ஆனால், அவன் உடலை விட்டு உயிர் பிரியவில்லை. காரணம் அவன் ஜபித்த காயத்ரி மந்திரம். அவன் அருகில் சென்ற அம்பிகை, அவனது காயத்ரி மந்திர ஜப பலனை யாசகமாக வாங்கிக்கொண்டாள். பின் அவனுக்கு மோட்சம் தந்து அவன் தொல்லையில் இருந்து உலகிற்கும் முக்தி தந்தாள். இப்படி வண்டின் உருவில் வந்து அவுணன் உயிரை அழித்த அம்பிகையை ‘‘பிரமராரி” என்று தேவி மகாத்மியமும் தேவி பாகவதமும் புகழ்கிறது.

எல்லாம் வல்ல எம்பெருமாட்டியே, காயத்ரி மந்திரப் பலனை அரக்கனிடம் இருந்து யாசகம் வாங்கிக்கொண்டுதான், அவனை அழிக்க முடிந்தது என்றால், மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தின் மகிமையை நாம் என்னவென்று சொல்வது! இப்படிப்பட்ட அற்புத மந்திரம், நமக்குக் கிடைத்த இடம், அம்பிகையின் மணிக்கட்டு விழுந்த புஷ்கர் சக்திபீடம் என்று அறியும்போது, அந்த அம்பிகையே தனது அபயகரம் நீட்டி நமக்கு தந்த அற்புத மந்திரம் போலல்லவா இருக்கிறது.

உலகிற்கு காயத்ரி மந்திரத்தை தந்த தேவி, தானே அந்த மந்திரத்தின் வடிவிலும் இருக்கிறாள். ‘‘காயத்ரீ” என்று அவளை லலிதா சஹஸ்ரநாமம் அழைப்பதில் இருந்து இது ஊர்ஜிதமாகிவிட்டது அல்லவா?ஆடிப்பூரம் அன்று பல கோயில்களில் அம்பிகைக்கு வளையல் அலங்காரம் நடக்கும், அங்கு சென்று அவளை வணங்கும் போது, இந்த காயத்ரீ மந்திரத்தையும் சக்தி பீடத்தையும் போற்றுவோம். சகல சௌபாக்கியங்களையும் அடைவோம்!

Related Stories: