போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதி திருக்காட்டுப்பள்ளியில் சுற்றுச்சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை

திருக்காட்டுப்பள்ளி : திருக்காட்டுப் பள்ளியில் சுற்றுச் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப் பள்ளியில் அரசு மருத்துவமனை, பத்திர பதிவு அலுவலகம், மின்சார வாரிய அலுவலகம், காவல் நிலையம், அக்னீஸ்வரர் கோவில், பூண்டி மாதா பேராலயம், மார்க்கெட், தனியார் மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள் செயல்பட்டு வருகின்றது. திருக்காட்டுப் பள்ளியை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் உள்ளவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகின்றனர். அதே போன்று அக்னீஸ்வரர் கோவிலுக்கும், பூண்டி மாதா பேராலயத்திற்கும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தினமும் பக்தர்கள் கார், வேன், பஸ் போன்றவைகளில் வருகின்றனர். மேலும் பத்திர பதிவுக்கு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் இந்த அலுவலகத்தில் தான் வந்து வீடு, நிலம், போன்றவைகளை பத்திரப்பதிவு செய்கின்றனர். திருமணங்கள் இங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுவதால் இரு சக்கர வாகனங்கள், மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் வருகின்றனர்.மின்சாரம் சம்மந்தமாகவும் பொதுமக்கள் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். பல்வேறு வழக்குகள் பிரச்னைகளுக்கு சுற்று வட்டார மக்கள் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண இங்குள்ள காவல் நிலையத்திற்குத் தான் வர வேண்டும். சுற்றுவட்டார பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் மேல் படிப்பை தொடர இங்கு தான் வர வேண்டும். விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கனிகளை திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட்டிற்கு தான் கொண்டு வருகின்றனர்.பொதுமக்கள் அனைத்துவிதமான பொருட்களையும் வாங்க கடை வீதிக்கு வந்து வாங்க வேண்டியுள்ளது. அவ்வாறு வரும் விவசாயிகள் இருசக்கர வாகனம், மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர். மேலும் பூண்டி செங்கரையூர் பாலம் கட்டியதால் திருச்சி மாவட்ட மக்களும் பல்வேறு தேவைகளுக்காக திருக்காட்டுப்பள்ளி வருகின்றனர்.வெளி மாவட்டங்களில் இருந்து மணல், ஜல்லி, கம்பி, எம் சாண்ட், பி சாண்ட் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு திருக்காட்டுப்பள்ளி வழியாகத்தான் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றது. இதனால் திருக்காட்டுப்பள்ளி கடைவீதி எப்போதும் போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது. இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள், பஸ், டாரஸ் போன்றவைகள் தினந்தோறும் திருக்காட்டுப்பள்ளி வந்து செல்கிறது. இதனால் பஸ் போக்குவரத்து பல மணி நேரம் தடைபடுகிறது.பள்ளி, கல்லூரி மற்றும் அரசு, மற்றும் தனியார் துறைக்கு செல்லும் ஊழியர்கள் காலதாமதமாக செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.எனவே திருக்காட்டுப்பள்ளி காவிரி புது ஆற்றுப்பாலம் அருகில் சுற்றுச்சாலை அமைத்துக் கொடுத்தால் திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் போக்குவரத்து தடைபடாமலும், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சிரமமின்றி வந்து செல்ல வசதியாக இருக்கும்.எனவே திருக்காட்டுப் பள்ளிக்கு சுற்றுச் சாலை அமைத்து தர வேண்டும் என்றுபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதி திருக்காட்டுப்பள்ளியில் சுற்றுச்சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: