திற்பரப்பு அருவியின் கீழ் பகுதியில் நடு ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி இரவு முழுவதும் தவித்த நாய்

* ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

குலசேகரம் : கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியில் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாப்பிட்டு விட்டு போடும் மிஞ்சிய உணவை உண்ண அந்த பகுதியில் நாய்கள் சுற்றி வருவது வழக்கம். இந்த நாய்கள் அருவியின் கீழ் பகுதியில் சுற்றி திரிகின்றன. இவை ஆற்றில் தண்ணீர் குறைவாக பாயும் நேரத்தில் சர்வ சாதாரணமாக ஆற்றை கடந்து அங்கும் இங்கும் செல்லும்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இரவில் உபரி நீர் திறக்கும் அளவு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் கோதையாறு கரை புரண்டு ஓடுகிறது.இந்நிலையில் இரவு நேரத்தில் நாய் ஒன்று திற்பரப்பு அருவியின் கீழ் பகுதியில் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் செல்ல முயற்சித்து உள்ளது. அது தண்ணீரை நீந்தி கடக்க முடியாமல் ஆற்றின் நடுவில் உள்ள பாறையில் ஏறி நின்றது.

இரவு முழுவதும் பாறையில் தவித்து உள்ளது. நேரம் செல்ல செல்ல தண்ணீர் அளவு அதிகரித்து பாறை தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. காலையில் இதனை அப்பகுதியினர் கண்டு குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் நாயை மீட்க முயற்சி செய்தனர். தண்ணீர் அதிகரித்து வந்ததால் அவர்களால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. நாயின் மீது பரிதாபம் கொண்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் போராடினர். ஆற்றில் வரும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், இறங்குவதற்கு தயக்கத்தை ஏற்படுத்தியது.

அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கிலாத்தூர் பகுதியை சேர்ந்த சுபின், சந்தோஷ் ஆகிய இரு இளைஞர்கள் துணிச்சலாக தீயணைப்பு துறையினர் உதவியுடன் கயிற்றை பிடித்து கொண்டு ஆற்றில் இறங்கினர். நாயை மீட்பதற்கு ஒரு கயிறும், இளைஞர்கள் ஆற்றில் இறங்கி செல்ல ஒரு கயிறும் என இரண்டு கயிறுகள் கட்டப்பட்டிருந்தது. ஆற்றில் இறங்கிய இளைஞர்கள், பாறையில் குளிரில் தவித்து கொண்டிருந்த நாயை சாக்கு பையில் பிடித்து கட்ட முயன்றனர்.

கடித்து விட்டால் என்ன செய்வதற்கு என இளைஞர்களுக்கு சற்று தயக்கம் ஏற்பட்டது. இருந்த போதும் தைரியத்தை வரவளைத்த இளைஞர்கள், சாக்கு பையோடு சேர்த்து நாயை நைசாக பிடித்துனர். இரவு ழுழுவதும் நாய் தண்ணீரில் நனைந்து நடுங்கி கொண்டிருந்ததால், காப்பற்ற முயன்ற இளைஞர்களை அது தாக்க முயல வில்லை.

இதனையடுத்து சாக்கு பையில் நாயை அடைத்து ஒரு கயிற்றின் முனையில் சாக்கு பையை கட்டினர். பின்னர் ஒரு கயிற்றை இளைஞர்கள் பிடித்த வாறு நின்று கொள்ள, கரையில் இருந்த படி தீயணைப்பு வீரர்கள் சாக்கு பையை இழுத்து கொண்டிருந்தனர். கொஞ்சம், கொஞ்சமாக கயிற்றை இழுத்து சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாக்கு பையில் கட்டப்பட்டிருந்த நாய் கரை சேர்க்கப்பட்டது. அதன் பின்னர் இளைஞர்கள் ஒரு கயிறை பிடித்த படி கரை சேர்த்தனர். துணிச்சலாக ஆற்றில் இறங்கி நாயை மீட்ட இளைஞர்களை அனைவரும் பாராட்டினர்.

The post திற்பரப்பு அருவியின் கீழ் பகுதியில் நடு ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி இரவு முழுவதும் தவித்த நாய் appeared first on Dinakaran.

Related Stories: