மகிஷாசுரமர்த்தினி, ராணி-கி-வாவ்

சிற்பமும் சிறப்பும்-மகிஷாசுரமர்த்தினி, ராணி-கி-வாவ்

இடம்: ராணி-கி-வாவ் படிக்கிணறு, பதான் மாவட்டம், குஜராத் மாநிலம்

காலம்: பொ.யு.1063, ராணி உதயமதி தன் கணவர், சாளுக்கிய வம்ச மன்னர் முதலாம் பீமதேவன் நினைவாக கட்டியது.

சிறப்பு: யுனெஸ்கோ-வால் உலக பாரம்பரியச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த படிக்கிணற்றின் அழகிய தோற்றம், புதிய 100 ரூபாய் பணத்தாளின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

மனிதன் உயிர் வாழ இன்றியமையாதது தண்ணீர். பண்டைய பாரதத்தின் நகரமைப்பு, கட்டிடக்கலையில் நீர் மேலாண்மை மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது.  நீர்நிலைகள் அமைப்பதிலும், நீரைப் பேணிப் பாதுகாப்பதிலும் அன்றைய மன்னர்கள் அதிக கவனம் செலுத்தி வந்தனர்.மழைப்பொழிவு அதிகம் இல்லாத வறண்ட பகுதிகளில் பெருங்கிணறுகள் தோண்டி, பெருமழைக்காலங்

களில் பொழியும் மழைநீர் அனைத்தும் கிணற்றினுள் வந்து விழுந்து சேகரிக்கப்பட்டு, கோடை மற்றும் வறட்சிக் காலங்களில் பயனளிக்கும் வண்ணம் படிக்கிணறுகள் அமைத்தனர்.

அவை வறட்சிப்பகுதிகள் நிறைந்த குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே உள்ளன.

‘படிக்கிணறு’ என்றவுடன் நமது பகுதிகளில் உள்ள சாதாரண கிணறுகள் போன்று, ஆனால் படிகளுடன் அளவில் சற்று பெரியதாக இருக்கும் என எண்ணி விட

வேண்டாம்.ஒரு பிரம்மாண்டமான ஆலயம் அளவிற்கு கட்டப்பட்ட இந்த படிக்கிணறுகளில், பெருந்தூண்கள் தாங்கி நிற்கும் மண்டபங்கள், மிகுந்த கலையம்சத்துடன் செதுக்கப்பட்ட சிற்பங்கள் நிறைந்த ஒரு கலைக்கூடமாகவே அக்கால அரசர்கள் அமைத்திருந்தனர்.பொது மக்களின் குளித்தல், வழிப்போக்கர்கள் குடிநீர் பருகி ஓய்வெடுத்தல் போன்ற நீர் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல், ஓய்வு நேர இசை, நடன கேளிக்கைகள், ஆன்மிக கூடுதல்கள் என பல்வேறு வகைகளில் படிக்கிணறுகள் பயன்பட்டன.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பெரும் படிக்கிணறு ‘ராணி-கி-வாவ்’ (ராணியின் படிக்கிணறு - ‘வாவ்’ என்ற குஜராத்தி சொல்லுக்கு ‘படிகளுடன் கூடிய கிணறு’ என்று பொருள்), அதன் கம்பீரமான  கட்டமைப்பு, கலையம்சம் நிறைந்த சிற்பங்களுக்காக உலகப்புகழ் பெற்றது.படிகளில் இறங்கும் பார்வையாளருக்கு பூமிக்குள்ளே ஏதோ ஒரு பாதாள உலகத்தினுள் நுழைவது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் இந்த பிரம்மாண்ட படிக்கிணற்றின் அழகிய தோற்றம், புதிய 100 ரூபாய் பணத்தாளின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ளது இன்னுமொரு சிறப்பு.சாளுக்கிய (சோலங்கி) வம்ச மன்னர் முதலாம் பீமதேவன் நினைவாக அவர் மனைவி ராணி உதயமதி கட்டிய உலகிலேயே அளவில் பெரியதான இந்த படிக்கிணறு ஒரு பொறியியல் அற்புதம்.

உலகின் வியக்கவைக்கும் கட்டுமானங் கள் அனைத்துமே தரைமட்டத்திற்கு மேல் எழுப்பி கட்டப்பட்டவை. ஆனால் இந்த வழக்கமான கட்டுமான முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ராணி-கி-வாவ் படிக்கிணறு, தரைமட்டத்திற்கு அடியில், தலைகீழான கோவில் வடிவத்தில் ஏழு அடுக்கில் அமைக்கப்பட்டுள்ளது.பெரும் மண்டபங்களை தாங்கி நிற்கும் அலங்காரத்தூண்கள், பகுவியல் வடிவங்கள், சிவனின் பல்வேறு உருவங்கள், விஷ்ணுவின் சேஷசாயி,  தசாவதார சிற்பங்கள், புராணக் கடவுளர்கள், அழகிய அப்சரஸ்கள், நடன மாதர்களின் எழில் தோற்றங்கள் என 500க்கும் மேற்பட்ட சிற்பங்களுடன் ஒரு சிற்பக்கருவூலமாக விளங்கி, பெயர் தெரியா சிற்ப வல்லுநர்களின் பேருழைப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.

இங்கு உள்புற சுவரில் உள்ள புடைப்புச் சிற்பங்களுள் மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம் குறிப்பிடத்தகுந்தது.மகிஷாசுரமர்த்தினி: மகிஷாசூரன் கடுந்தவம் செய்து ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு இறப்பு நேர வேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம்  பெற்று, இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான்.பார்வதி தேவியிடம் முறையிட்ட  தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, துர்க்கையாக அவதரித்து மகிஷாசூரனை வீழ்த்தியதாக புராணங்கள் கூறுகின்றன. மகிஷாசூரனை வதம் செய்ததால் துர்க்கைக்கு ‘மகிஷாசூரமர்த்தினி’ எனும் சிறப்புப் பெயராயிற்று.

துர்க்கையின் ஆக்ரோஷ வடிவமாக காட்சியளிக்கும் மகிஷாசுரமர்த்தினி, இடக்காலை தரையில் ஊன்றி, வலதுபுற பத்துக்கரங்களில் திரிசூலம், வஜ்ராயுதம், அம்பு, தண்டாயுதம், அங்குசம், ஈட்டி, சக்கராயுதம், தாமரை, உடுக்கை, வாள் போன்றவைகளுடனும், இடதுபுற பத்துக் கரங்களில் கேடயம், மணி, கபாலம், மூன்று தலை நாகம், கொம்பு, வில், பாசம், அசுரனின் தலைமுடியை கொத்தாகப்பிடித்தும், திரிசூலத்தின் தண்டப்பகுதியை பிடித்தும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

துர்க்கையின் கால் எடை அழுத்தத்தினால்  எருமை குனிந்து சரணடைதல், துர்க்கை வாகனமாகிய சிங்கம் எருமையை பின்புறம் தாக்குவது, எருமையிலிருந்து வெளிப்படும் மனித வடிவ மகிஷாசுரன் வாளும், கேடயமும் தாங்கி நிற்றல் போன்ற அனைத்துக் காட்சிகளும் உள்ளடக்கி  வடிக்கப்பட்டுள்ளது.

மது ஜெகதீஷ்

Related Stories: